ஐபிஎல் போட்டிகளுக்கிடையிலும் அதகளம் செய்து கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 4.
முதலில் போட்டியாளர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் 16தான் என்றார்கள். ஆனால் தொடக்க வாரத்தில் ஐபிஎல் போட்டிகள் நிகழ்ச்சியின் ரேட்டிங்கிற்குக் கொஞ்சம் சிக்கலை உண்டாக்கியதால், 17-வது போட்டியாளராக, போட்டி சேனலில் இருந்து ஆங்கர் அர்ச்சனாவை பல கட்ட முயற்சிகளுக்குப்பிறகு கூட்டி வந்தார்கள்.
அர்ச்சனாவுடன் என்ட்ரி முடிவடையப் போவதில்லை. வைல்டு கார்டு என்ட்ரியாக இன்னொரு நடிகர் செல்ல இருக்கிறார். அவர் ரியோ, நிஷா போன்று விஜய் டிவி ஆளாக இருப்பார் என்கிறார்கள்.
இதற்கிடையில் 15 நாள்கள் கடந்துவிட்டன. ஷோவில் சிலர் அடித்து ஆடத் தொடங்கியிருக்கிறார்கள். நல்ல பெயரோ, கெட்ட பெயரோ எதையாவது வாங்கி, ரசிகர்களை நிகழ்ச்சியை விட்டு நகராதபடி பார்த்துக் கொள்கிறார்கள். இந்த வைரல் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் என்றால், பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே வயதானவரான சுரேஷ் சக்ரவர்த்தியைச் சொல்லலாம்.
உண்மையில் இவர் 'நல்லவரா கெட்டவரா' என்கிற சந்தேகம் பிக்பாஸின் சக போட்டியாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களிடமும் இருக்கிறது.
"ஏவிஎம் குமரன் மூலமே சினிமா உலகத்துக்கு அறிமுகமானேன்" என்கிறார் சுரேஷ். ஆனால், இவர் 'ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் நடத்துகிறார்' என்கின்றனர் சிலர். ஆரம்ப காலங்களில் சன் டிவியில் இருந்தவர் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் யார் இந்த சுரேஷ் சக்கரவர்த்தி?
"ஏவிஎம் மூலமாத்தான் சினிமா உலகத்துக்குள் வந்தேன்னு சொல்றார். ஆனா சில விஷயங்களை ஏன் மறைக்கிறார்னு தெரியலை. ஏவிஎம் சரவணன், குமரன் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் தயாரிச்சாங்க. அமலா, ராதா ரெண்டு பேரும் அந்தப் படத்துல நடிச்சாங்க. அந்தச் சமயத்துல அமலாவுக்கு மேனேஜரா இருந்தவர்தான் இந்த சுரேஷ் சக்கரவர்த்தி" என்கிற மூத்த சினிமா பத்திரிகையாளர் 'தேவி' மணி மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்தார்.
"பேரு ஞாபகமில்லை. அமலா நடிச்ச ஒரு படத்தின் ஷூட்டிங் சத்யா ஸ்டூடியோவுல நடந்திட்டிருந்தது. அமலாவைப் பேட்டி எடுக்க நான் போயிருக்கேன். அங்க இருந்தார் சுரேஷ். அந்தச் சமயம்தான் அமலா - நாகார்ஜுனா இடையே லவ் தொடங்கியிருக்கு. என்னுடைய பேட்டியின் இடையே சுரேஷைக் கூப்பிட்டுத் தெலுங்குல ஏதோ சொல்றங்க அமலா. 'அடையார் பார்க் ஷெரட்டன் ஹோட்டல்'ங்கிற வார்த்தை மட்டும் என் காதுல தெளிவா விழ, மேற்கொண்டு நான் வேறு சில சோர்ஸ் மூலமா விசாரிச்சதுல, அங்க நாகார்ஜுனா தங்கியிருக்கிற தகவல் கிடைச்சது.
மறுநாள் யாருக்கும் தெரியாம அந்த ஹோட்டலுக்குப் போய், ரிசப்ஷன்ல உட்கார்ந்துட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே, கொஞ்ச நேரத்துல நாகார்ஜுனா தான் தங்கியிருந்த ரூம்ல இருந்து வெளியில வந்து எங்கேயோ கிளம்பினார்.
நான் என்னை அறிமுகப்படுத்திட்டு கைகுலுக்கியபடியே, 'அமலாவுக்கும் உங்களுக்கும் லவ்வாமே'னு கேட்டுட்டேன்.
ஒரு படத்துல மாதவன் கை குலுக்குறேன்னு வடிவேலு கையை அழுத்துவாரே, அதே போல இருந்தது நாகார்ஜுனாவின் அந்தப் பதில் கைகுலுக்கல். அப்படியே சுரேஷைக் கூப்பிட்டு, தெலுங்குல ஏதோ சொல்ல, சுரேஷ் என்னை முறைச்சபடியே, நாகார்ஜுனாவை அங்க இருந்து கூட்டிட்டுப் போனார்.
Also Read: `Truth or Dare..?' கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... யாருக்கு யாரோட சண்டை? பிக்பாஸ் - நாள் 15
சினிமா பி.ஆர்.ஓ-வா இருந்தேன்னோ அல்லது ஆர்ட்டிஸ்டுகளுக்கு மேனேஜரா இருந்தேன்னோ சொல்றதுல என்ன தயக்கம்னு தெரியலை.
சொல்லப்போனா, அமலா நாகார்ஜுனா காதலுக்கு இந்த சுரேஷ் சக்ரவர்த்தி ரொம்பவே உதவியிருக்கார்.
அதேபோல அமலாவுக்கு அடுத்து நடிகை ரேவதிக்கும் மேனேஜரா கொஞ்ச நாளா இருந்திருக்கார். ஆனா இந்த வேலைகள் குறித்தெல்லாம் பிக்பாஸ் ஷோவுல ஏன் சொல்ல மாட்டேங்குறார்னுதான் தெரியல" என்றார் மணி.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/the-background-story-of-suresh-chakravarthi-as-told-by-a-senior-journalist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக