Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

``படிப்புக்காக இங்கிலாந்து பயணம், ஐ.நா வேலை லட்சியம்!" - 18 தங்கப்பதக்கங்கள் வென்ற யமுனா

பெங்களூரு, லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யூனிவர்சிட்டியின்(NLSIU - The National Law School of India University சரித்திரத்தில் முதன்முதலாக 18 தங்கப்பதக்கங்கள் பெற்று பெரும் சாதனை படைத்திருக்கிறார், கேரள மாநிலம் எர்ணாகுளம் உதயம் பேரூர் பகுதியைச் சேர்ந்த யமுனா மேனன். இந்தப் பல்கலைக்கழக சரித்திரத்தில் ஒரு மாணவர் இத்தனை மெடல்கள் பெறுவது இதுவே முதல் முறை. சிறப்பான நிகழ்ச்சியாக நடக்கவேண்டிய பட்டமளிப்பு விழாவை கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தி முடித்திருக்கிறது பல்கலைக்கழகம். ஆன்லைன் மூலம் தன் BA LLB (Hons) பட்டத்தை பெற்றுக்கொண்ட யமுனா மேனன், அதே வேகத்தில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரிக்கு சட்ட மேற்படிப்பிற்காகச் செல்கிறார்.

யமுனா மேனன்

இதுபற்றி யமுனா மேனன் கூறும்போது, "யுனிவர்சிட்டியில் முதல் ரேங்க் கிடைக்கும் எனத் தெரியும். ஆனால் 18 தங்கப்பதக்கங்களை நானே எதிர்பார்க்கவில்லை. பிறகுதான் இது சரித்திரத்தில் முதன்முறை என எனக்குத் தெரியவந்தது. சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா பொதுவாக பெரிய அளவில் நடைபெறும். இதற்கு முன்பு பிரதமர் கலந்துகொண்ட சரித்திரமெல்லாம் உண்டு. ஜனாதிபதி மெடல் வழங்குவதும் உண்டு.

இந்த வரலாற்று சாதனை படைத்த மகிழ்ச்சி ஒருபக்கம். அதே நேரம் என் பெற்றோர், நண்பர்களின் பெற்றோர் முன்னிலையில் பெரிய ஆடிட்டோரியத்தில் நடக்கும் விழாவில் மெடல் வாங்கமுடியாத வருத்தம் ஒரு பக்கம்'' என்றவர்,

''என் பத்தாம் வகுப்பு விடுமுறையின்போது, என் அப்பாவின் நண்பரான வழக்கறிஞர் ஜோசப்க்கு உதவியாகச் சென்றிருந்தேன். கோர்ட்டில் நடந்த சம்பவங்கள், வழக்கறிஞர்களின் கதைகள் என அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்தான் எனக்கு சட்டப்படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. ப்ளஸ் டூ முடித்தபோது நான் இன்ஜினீயரிங் அல்லது வேறு துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என என் பெற்றோர் விரும்பினர். ஆனால் நான் சட்டப் படிப்பை விரும்பித் தேர்ந்தெடுத்தேன். அதில் சாதனை புரிந்ததில் பெற்றோருக்கு மிக்க மகிழ்ச்சி.

பெற்றோருடன் யமுனா மேனோன்

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என இரண்டு யுனிவர்சிட்டிகளில் மேற்படிப்பிற்காக(LL.M) அப்ளை செய்திருந்தேன். இரண்டு பல்கலைக்கழகங்களிலுமே ஸ்காலர்ஷிப்புடன் படிக்க இடம் கிடைத்தது. நான் கேம்பிரிட்ஜ் ட்ரினிட்டி காலேஜுக்கு மேற்படிப்பிற்காகச் செல்கிறேன்.

சட்டப்படிப்பு என்றால் கோர்ட்டில் வழக்கறிஞர் ஆகும் வாய்ப்பு மட்டுமே என்பதில்லை. சட்டப்படிப்பில் பல ஆஃபர்கள் உள்ளன. கோர்ட்டில் பிராக்டிஸ் செய்வது நல்ல விஷயம். அதுமட்டுமல்லாது சிவில் சர்வீஸ் தேர்வு போன்ற பிற விஷயங்களுக்குச் செல்லவும் சட்டப்படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளில் பணியில் சேர்வதுதான் என் லட்சியம்" என்றார்.



source https://www.vikatan.com/news/kerala-law-student-who-bags-18-gold-medals-in-nlsiu-speaks-about-her-ambitions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக