Ad

திங்கள், 12 அக்டோபர், 2020

`நாட்டுக்கு எது நல்லது எனப் புரிந்தது; கொள்கை மாறவில்லை!’ - பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, நடிகை குஷ்பு பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகின. ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பு வரை அந்தச் செய்திகளை மறுத்துவந்தார் குஷ்பு. இந்தநிலையில், நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது `பா.ஜ.க-வில் இணைய இருக்கிறீர்களா?’ என்றும், `காங்கிரஸில் இப்போதும் இருக்கிறீர்களா?’ என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்தச் சூழலில் அவரைக் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக காங்கிரஸ் இன்று காலையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு எழுதிய கடிதமும் வெளியானது.

பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

இந்தநிலையில், டெல்லியிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலத்தில் நடந்த நிகழ்ச்சியில் குஷ்பு, அந்தக் கட்சியில் இணைந்தார். பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். அப்போது, பா.ஜ.க தமிழகத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது பேசிய பா.ஜ.க தமிழகத் தலைவர் எல்.முருகன், ``தமிழக பா.ஜ.க-வில் கடந்த ஆறு மாதங்களில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள், இளைஞர்கள், மகளிர், பட்டியலின மக்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் பா.ஜ.க பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், நேர்மையான ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் ஆட்சி, வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் வேண்டும் என மக்கள் நினைப்பதுதான். அந்தவகையில், குஷ்பு அவர்கள் இன்று பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். அவரை தமிழக பா.ஜ.க சார்பில் வரவேற்கிறேன்’’ என்றார்.

Also Read: `மதிப்பு அப்படியே இருக்கும்!’- சோனியாவுக்குக் கடிதம்; காங்கிரஸிலிருந்து விலகிய குஷ்பு

அதன் பின்னர் மைக் பிடித்த குஷ்பு, ``பா.ஜ.க-வின் உறுப்பினராக இன்று இணைந்ததில் மகிழ்ச்சிகொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இந்த நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடி போன்ற ஒருவர் வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன்’’ என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ``இந்த முடிவு முன்னரே எடுக்கப்பட்டது. அந்தக் கட்சியில் இருக்கும்வரை நான் அவர்களுக்கு விசுவாசமாக இருந்தேன். அதனால், அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்தேன்’’ என்றார்.

பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்கள் குறித்தும், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது டெல்லியில் இருப்பவர்களா என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, `அவர்கள் யார் என்று பெயர் சொல்லிக் கூற வேண்டும் என்று விரும்பவில்லை. கட்சியில் இருப்பவர்களுக்குத் தெரியும். நான் பொதுவாகவே சொன்னேன்’’ என்றார். பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை விமர்சித்துவிட்டு, பா.ஜ.க-வில் இணைந்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, ``மாற்றம் என்பது இயல்பானது. தவறு என்று தோன்றியபோது அவர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், போகப் போக நாட்டுக்கு எது நல்லது என்று புரிந்தது. ஒரு கட்சி, தன்னுடைய தலைமையையே கண்டுபிடிக்க முடியவில்லை எனும்போது நாட்டை எப்படி ஆள முடியும்.

Also Read: `குஷ்பு விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை!’ - கே.எஸ்.அழகிரி #NowAtVikatan

ஒரு கட்சியில் இருக்கும்போது, அதுவும் எதிர்க்கட்சியாக அந்தக் கட்சி இருக்கும்போது ஆளும்கட்சி மீது விமர்சனங்களை வைப்பதுதான் வேலையே. அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுபிடித்துக் கூறுவதுதான் வேலை. அப்படித்தான் நான் இருந்திருக்கிறேன். அதேநேரம், தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது மட்டுமல்ல ,அதற்கு முன்னரே பல முறை பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்லியிருக்கிறேன். அமித் ஷா அவர்களுக்குப் பலமுறை வாழ்த்துச் சொல்லியிருக்கிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஆளும்கட்சியின் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல விஷயங்களைத் தட்டிக்கொடுக்க வேண்டும்.

நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். பா.ஜ.க தலைவர்கள் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. மசோதாக்களுக்கான எதிர்ப்பைப் பொறுத்தவரை சட்டரீதியாகக் காண்பிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் உங்களுக்கு மெஜாரிட்டி இல்லை. ஏன் மெஜாரிட்டி இல்லையென்றால், மக்கள் உங்களை நம்பவில்லை என்பதே உண்மை’’ என்றார்.

குஷ்பு

பா.ஜ.க மீது ஏற்கெனவே வைத்த விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, ``எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஆளும்கட்சியை விமர்சித்துதானே ஆக வேண்டும்... கட்டாயத்தால் அதைச் செய்தேன். வேறு வழியில்லை. திருப்தி இல்லையென்றாலும், கட்டாயத்தின்பேரில் பா.ஜ.க-வை விமர்சித்தேன். எதிர்க்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நீங்கள் இருக்கும்போது ஆளுங்கட்சியை விமர்சிக்காமல் இருக்க முடியுமா? ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி அதை எதிர்த்தார்; அதனால் நான் எதிர்க்கிறேன். கட்சிதான் மாறுகிறது தவிர, கொள்கை அப்படியேதான் இருக்கிறது. அரசியல்வாதி என்பதைவிட சமூக ஆர்வலராகவே இருப்பேன்’’ என்றார்.

`குஷ்பு விலகலால் காங்கிரஸுக்கு இழப்பு இல்லை’ என்று கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியின் விமர்சனத்துக்கு பதிலளித்த குஷ்பு, ``இதன் மூலம் அவர்களது மனநிலை என்ன என்பதையும், அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்’’ என்று பதிலளித்தார்.



source https://www.vikatan.com/news/politics/kushboo-joins-bjp-in-delhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக