Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

விஜய் சேதுபதியை, ஏன் முரளிதரன் விலகச் சொன்னார்?! - `800’ பட சர்ச்சை குறித்து பெ.மணியரசன்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் உருவானது. ’என்னால் நீங்கள் சிரமப்பட வேண்டாம்... இப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்’ என விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்ததால், 800 திரைப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். ‘’விஜய் சேதுபதியை, முத்தையா முரளிதரன் விலக சொன்னதற்கு காரணம், அவர் மீதான பரிதாபமோ, அனுதாபமோ அல்ல. முத்தையா முரளிதரன் மிகவும் தந்திரமாக செயல்பட்டுள்ளார். விஜய் சேதுபதி தன்னை அவமானப்படுத்திக் கொண்டுள்ளார். முன்னரே விலகி இருக்க வேண்டும்” என்கிறார் பெ.மணியரசன்.

பெ.மணியரசன்

`800’ திரைப்படத்தில் நடிகர் விஜயசேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே கடும் எதிர்ப்புகள் உருவானது. இலங்கையில் லட்சக்கனக்கான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பதாகவும், இவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என கடும் விமர்சனங்கள் எழுந்தன. விஜய் சேதுபதிக்கு பண கஷ்டம் என்றால், தமிழக மக்களிடம் வசூல் செய்து தருவதாகவும், இப்படத்திலிருந்து இவர் விலகிக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் தெரிவித்திருந்தார்.

பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் உருவான நிலையில் முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று, இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார். இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய பெ.மணியரசன், ``கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், நடிகர் விஜய் சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில், `என்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதால் உங்களுக்குப் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதனால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட வேண்டாம். வேறு நடிகரை வைத்து என் வரலாற்றுப் படத்தை எடுத்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். இதன் காரணமாகத்தான் விஜய் சேதுபதி அப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகி கொள்வதுப் போன்ற பொருள் தரும் “நன்றி, வணக்கம்” தெரிவித்துள்ளார்.

Also Read: `800 திரைப்படத்திலிருந்து விலகிவிடுங்கள்’ முரளிதரன்... `நன்றி வணக்கம்’ விஜய் சேதுபதி!

தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் தமிழ்த் திரைப்பட உலகின் மதிப்பு மிக்க மூத்தவராக விளங்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா, மக்கள் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலரும் கேட்டுக் கொண்ட பிறகும் கூட, முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிடவில்லை. முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதி வேண்டாம் என்று சொன்ன பிறகு விலகுகிறார். இது விஜய் சேதுபதிக்கு மிகுந்த அவமானம். தமிழ்மக்களின் வேண்டுகோளை ஏற்று முன்னரே விலகி இருந்தால், இந்த அவமானம் ஏற்பட்டிருக்காது. இப்பிரச்னையில் முத்தையா முரளிதரன் மிகவும் தந்திரமாக செயல்பட்டுள்ளார்.

800

விஜய் சேதுபதியை அவர் விலக சொன்னதற்கு காரணம், அவர் மீதான அனுதாபம் காரணம் அல்ல. தனது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு உலகம் முழுவதும் கடும் எதிரிப்பு நிலவுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியானால், தமிழ் மக்கள் புறக்கணிப்பாளர்கள், போரட்டங்கள் நடத்துவார்கள். இதனால் இப்படம் தோல்வி அடையும். தனக்கு மிகப்பெரிய அவமானம் நேரும் என்பதாலேயே, இப்படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதியை விலக சொல்லியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தனது பிடிவாதத்தால், ஆணவத்தால், அவமானத்தை சந்தித்துள்ளார். முன்னரே விலகி இருந்தால், இந்த அவமானம் நேர்ந்திருக்காது” என தெரிவித்தார்.

Also Read: ’`நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ - `800’ படம் குறித்து விஜய் சேதுபதி #NowAtVikatan



source https://www.vikatan.com/news/controversy/maniyarasan-on-800-movie-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக