கோவிட் -19 தொற்றுநோய் பரவலையும் மீறி, அக்டோபர் 16 அன்று பஞ்சாப் மாகாணம் குஜ்ரான்வாலாவிலும், நேற்று முந்தினம் கராச்சியிலும், அடுத்தடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் கூட்டு எதிர்க்கட்சிகளின் இரண்டு பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள், இம்ரான் கான் பதவியிலிருந்த இரண்டரை ஆண்டு காலத்தை கடுமையாக விமர்சித்து எதிர்ப்புகளை கிளப்பியுள்ளனர்.
பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML), பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan peoples party - PPP), பலுசிஸ்தான் தேசியக் கட்சி (BNP), ஜமாயத் உலேமா இஸ்லாம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து, விலை உயர்வு, மின்வெட்டு, வணிகங்கள் மூடுவது மற்றும் பிற பொருளாதார சிரமங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் அதிருப்தியை கொண்டு, புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதற்கு பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (Pakistan Democratic Movement - PDM) எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
ஜமாயத் உலேமா இஸ்லாம் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவரான, மவுலானா பஸ்லுர் ரெஹ்மான், கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதத்தலைவர், ஒருவர் கூட்டணிக் கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினாலும், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் அரசியல் தலைவர்களின் வம்சங்களுக்கான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML) யின் நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) யின் ஆசிப் அலி சர்தாரி இருவரும் ஊழல் வழக்குகளின் பின்னணியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் என்பதால் இருவரின் வாரிசுகளான மரியம் நவாஸ், பிலாவால் பூட்டோ இருவருக்கும் பி.டி.எம். யை வழி நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Also Read: `கோவிட்19 சூழலை பாகிஸ்தான் கூட சிறப்பாக கையாண்டுள்ளது!’ - சர்வதேச அறிக்கை குறித்து ராகுல்
பாகிஸ்தான் ராணுவத்தால் 2018 தேர்தலில் இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டதை, சரியான தேர்வாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், பி.எம்.எல். மற்றும் பி.பி.பி. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளும் ஊழல் வழக்குகளும் மட்டுமே இம்ரான் கானை தேர்வு செய்வதற்கு காரணமாக இருந்தது என்றும் இம்ரான் கானுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என்பதையே இலக்காக வைத்து செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கு அவரை தகுதியற்றவராக்கும் நீதிமன்ற தீர்ப்புகள் அவரது அரசியல் நடவடிக்கைகளைத் தடுக்கவில்லை.
லண்டனில் இருந்து, நவாஸ் ஷெரீப் நாட்டின் அரசியலில் இராணுவத்தின் பங்கிற்கு எதிராகவும், இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு எதிராகவும் தன் தாக்குதல்களை தொடங்கியுள்ளார்.
செப்டம்பர் 20 அன்று, எதிர்க்கட்சி கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அக்டோபர் 16 ம் தேதி குஜ்ரான்வாலாவில் பேசிய நவாஸ் ஷெரீப் ராணுவத்தையும், குறிப்பாக ஜெனரல் பஜ்வாவையும், நீதித்துறையையும் குற்றம் சாட்டினார். மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுக்கு மேல் செயல்படும் தனி அரசாங்கம் என்று கடுமையாக விமர்சித்தார்.
Also Read: `பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு, ஆண்மை நீக்கமே தண்டனை!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அரசாங்கம் பொறுப்பில் இருக்கும் போது எதிர்க்கட்சிகளிடமிருந்து இதுபோன்ற தாக்குதல் வருவது இதுவே முதல் முறை. வழக்கமாக சிவில் அரசாங்கமே ராணுவத்துடன் பலவீனமான போரில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறது. 2008 முதல் 2013 வரை பிபிபி-சர்தாரி அரசாங்கத்திலும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் (என்) அரசாங்கத்திலும் இதே நிலை இருந்தது.
எதிர்க்கட்சி கூட்டணி இம்ரான் மற்றும் ஜெனரல்களை குறிவைத்து, அரசியல் ரீதியாக நடத்தும் தாக்குதல்களால் ராணுவம் பதற்றமடையக்கூடும், அதை எதிர்கொள்ள, சிவிலியன்-ராணுவ கூட்டணியில் இராணுவம் மிகவும் சக்திவாய்ந்த பங்காக இருக்கிறது.
பாகிஸ்தானை வளமான நாடாக மாற்றுவதற்கான இம்ரான் கானின் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டை மீறவில்லை என்றாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது என இம்ரான் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே இருக்கும் பி.டி.எம் யின் எதிர்ப்பு பேரணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. அடுத்த வார இறுதியில், குவெட்டாவில், ஃபஸ்லூர் ரஹ்மான் தலைமையிலான பேரணி, அவருடைய மத வலதுசாரி பழமைவாத அமைப்பு மற்றும் பழமைவாத எண்ணம் கொண்ட பாகிஸ்தானியர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.டி.எம். யின் இறுதித் திட்டமாக, ஜனவரி மாதம் மிகப்பெரிய அணிவகுப்பு இஸ்லாமாபாத்தில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக இம்ரான் கானுக்கு இராணுவம் உதவியிருந்தால், அவரை நீக்குவதற்கான முடிவையும் அது எடுக்கக்கூடும். நிச்சயமாக, பி.டி.ஐ-க்குள் போட்டியாளர்கள் மேல் இடத்திற்காக காத்திருக்கிறார்கள். இருப்பினும் ஆர்ப்பாட்டங்கள், வேகத்தில் தொடர்ந்தால், இம்ரான் கான் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும், எதிர்க்கட்சியைக் கையாள்வதில் மட்டுமே இம்ரானை ஆர்வத்துடன் வைத்திருக்கும், மேலும் அவரை ஆட்சியில் இருந்து திசை திருப்பும்.
source https://www.vikatan.com/news/general-news/the-rise-of-pakistan-democratic-movement-shocks-imran-khan-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக