Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

``ஜோதிகா உதவியால் நோயாளிகள் பயன்பெறுகிறார்கள்!" - தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகர் ஜோதிகா அண்மையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் குழந்தைகள் நல வார்டுக்கான நவீன மருத்துவக் கருவிகள், விளையாட்டுப் பூங்கா உள்ளிட்ட பணிகளைச் செய்துகொடுத்தார். அவருடைய இந்தச் செயல் பெரும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகாவின் பிறந்தநாளன்று, அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குச் செய்த பணிகளைப் பாராட்டி போட்டோவுடன் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை

இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரைச் சுற்றியுள்ள சில இடங்களில் நடைபெற்றது. அந்த வகையில் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, மருத்துவமனை பராமரிக்கப்படும் விதத்தில் உள்ள குறைபாடு பற்றி ஒரு நிகழ்ச்சியில் ஜோதிகா தன் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

``உலகப் புகழ்பெற்று விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு எதிரே உள்ள அரசு மருத்துவமனையின் நிலை என்னை கவலைகொள்ள வைத்தது. கோயிலுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளும் பராமரிக்கப்பட வேண்டும். கோயில் உண்டியலில் காசு போடுவதைவிட இதுபோன்ற அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணிக்கு அனைவரும் உதவலாம்" எனப் பேசியிருந்தார்.

குழந்தைகள் வார்டு

ஜோதிகாவின் இந்தப் பேச்சுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டுமே எழுந்தன. ``வார்த்தைகளாகப் பேசுவதைவிட மருத்துவமனையைப் பராமரிக்க ஜோதிகா உதவி செய்துவிட்டு இதைப் பேசியிருக்கலாம்" என்றனர் பலர்.

ஆனால், ஜோதிகா தன் பேச்சுக்கு முன்னரே குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் பணியைத் தொடங்கிவிட்டிருந்தார். இயக்குநர் இரா.சரவணன் மூலம் மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி, என்னென்ன தேவைகள் இருக்கின்றன எனக் கேட்டறிந்தார்.

குழந்தைகள் வார்டில் டாக்டர்

கொரோனா பரவலால் அந்தப் பணிகள் முடிவடைய தாமதமானது. ஆனாலும் தொடர்ந்து அதில் கவனம் செலுத்திவந்தார். ரூ. 25 லட்சம் மதிப்பிலான பணிகளை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு செய்தும் கொடுத்துவிட்டார்.

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்து, ஜோதிகா மருத்துவமனை பயன்பாட்டிற்கு ஏற்படுத்தித் தந்த வசதிகளை தொடங்கிவைத்தார். ஜோதிகாவின் இந்தச் செயலை பலரும் பாட்டினார்கள். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி ஜோதிகாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் பூங்கா

அன்றைய தினத்தில், ``ஜோதிகா குறிப்பிட்டுப் பேசிய மருத்துவமனை தற்போது எப்படியிருக்கிறது என்பதை பாருங்கள்" என போட்டோவுடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி டீன் மருது.துரையும், ஜோதிகாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

டீன் மருது.துரையிடம் பேசினோம். ``குழந்தைகளுக்கான நவீன அவசர சிகிச்சைப் பிரிவில், மடக்கும் திறன் கொண்ட கட்டில் மெத்தை - 7, குழந்தைகளுக்கான ஆக்சிஜன் கொடுக்கும் நவீனக் கருவிகள் - 4, மொபைல் எக்ஸ்ரே மெஷின் என ரூ 22 லட்சத்திற்கான நவீன மருத்துவ உபகரணங்கள், மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா, குழந்தைகள் வார்டு, மருத்துவமனை சுவர்களில் கண் கவரும் அழகு ஓவியங்கள் என மருத்துவமனை வளாகத்தை அழகுபடுத்த ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ 25 லட்சம் மதிப்பிலான பணிகளை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு செய்துதந்தார்.

டீன் மருதுதுரை

அரசு தன் பங்கிற்கு பொதுப்பணித்துறை மூலம் ரூ.1 கோடி நிதி, மருத்துவமனை கட்டடப் பராமரிப்புப் பணிகள் எனச் செய்து கொடுத்தது. அரசு இந்தப் பணிகளை செய்துகொடுக்க ஜோதிகா ஒரு காரணமாக இருந்துள்ளார். ஜோதிகா வழங்கிய உபகரணங்களில் சில தற்போது கொரோனா சிகிச்சை வார்டிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசும் தனியாரும் இணைந்து இதுபோன்ற பணிகளைச் செய்யும்போது அவை விரைவாக முழுமையடைகின்றன. அதன் பலன் மக்களுக்குக் கிடைக்கிறது. தஞ்சை மண் சார்ந்த கதை களத்தில் நடித்துள்ள ஜோதிகா, இந்த மருத்துமனைக்கு தன்னால் முடிந்த உதவியை தாமாக முன்வந்து செய்தது பாராட்டுக்குரியது'' என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/thanjavur-medical-college-dean-praises-jyothika-for-her-help-to-the-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக