Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

சென்னை: காணிக்கையைச் செலுத்திவிட்டு கோயிலில் திருட்டு - சில்லறைகளை விட்டுச் சென்ற இளைஞர்

சென்னை, திருவான்மியூரில் மருந்தீசுவரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை நேற்றிரவு மூடிவிட்டுச் சென்ற நிர்வாகிகள், இன்று அதிகாலை வழக்கம்போல வந்து கதவுகளைத் திறந்தனர். அப்போது கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உண்டியலிலிருந்த பணமும் கொள்ளை போயிருந்தது. இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர்.

காணிக்கையைச் செலுத்தும் காட்சி

பின்னர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். சிசிடிவியில், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் வருகிறார். உண்டியல் அருகே சென்றவர், தன்னுடைய சட்டைப் பையிலிருந்து காணிக்கையை எடுத்து உண்டியலுக்குள் போடுகிறார். அதன் பிறகு கையில்வைத்திருந்த கம்பியால் உண்டியலின் பூட்டை உடைக்கிறார். பிறகு கீழே அமர்ந்தபடி உண்டியலுக்குள் இருக்கும் ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுக்கிறார். அதனால், உண்டியலுக்குள் சில்லறைக் காசுகள் அப்படியே இருந்தன. இதையடுத்து பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் செல்கிறார். இந்தப் பதிவுகள் அடிப்படையில் போலீஸார் அவரைத் தேடிவருகின்றனர்.

Also Read: சீர்காழி அருகே கோயில் உண்டியல் கொள்ளை; அச்சத்தில் கிராம மக்கள்

கோயில் நிர்வாகிகளிடம் போலீஸார் விசாரித்தபோது, `கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கோயில்கள் மூடப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் கோயில்கள் திறக்கப்பட்டன. கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பணத்தை எடுத்துவிட்டோம். அதன் பிறகு சேர்ந்த காணிக்கைதான் உண்டியலில் இருந்தது. எவ்வளவு பணம் உண்டியலில் இருந்தது என்பது தெரியவில்லை. மேலும், உண்டியலில் சில்லறைக் காசுகளை கொள்ளையன் எடுக்காமல் சென்றிருக்கிறான்’ என்று கூறியிருக்கிறார்கள்.

உண்டியல்

Also Read: சென்னை: முதல் திருட்டு... பயத்தில் மதுஅருந்திய இன்ஜினீயர் - திருடச் சென்ற வீட்டில் உறக்கம்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கோயிலின் மதில் சுவர்கள் உயரமானவை. அதனால், மதில் சுவர்கள் மேல் ஏறி கோயிலுக்குள் வருவது சிரமம். உண்டியல் பணத்தைத் திருடியவர் எப்படி உள்ளே வந்தார் என்று சிசிடிவி மூலம் ஆய்வு செய்தோம். அப்போது கோயிலின் ஒருபுறத்தில் மின்விளக்குகள் நேற்றிரவு எரியாமல் இருந்திருக்கின்றன. மேலும், அந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருக்கின்றன. அதனால் குடியிருப்பு வழியாக கோயிலின் மதில் சுவரில் ஏறிக் குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவரைப் பிடித்தால்தான் கொள்ளை குறித்து முழு விவரமும் தெரியவரும். மேலும் அந்த நபர், உண்டியலுக்குள் சட்டைப்பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து உள்ளே போடுகிறார். அதனால் அவர் காணிக்கை செலுத்துகிறரா அல்லது எவ்வளவு ரூபாய் உண்டியலுக்குள் இருக்கிறது என்பதை கண்டறிய நாணயத்தை போடுகிறரா என்று தெரியவில்லை" என்றனர்.

சென்னையில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலின் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/theft-in-chennai-thiruvanmiyur-marundeeswarar-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக