Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

`சுரேஷ், அப்ப நீங்க ஓனர் இல்லையா...' கண்ணாடி ஜெயிலுக்குச் சென்றுவந்த இருவர்! - பிக்பாஸ் நாள் 12

‘மரணம்.. மாஸூ மரணம்’ என்கிற மங்களச் சொல் அடங்கிய பாடல் எட்டு மணிக்கு ஒலித்தது. கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த அனிதா, தூக்கத்திலிருந்து அதட்டி எழுப்பப்பட்ட குழந்தை போல திடுக்கிட்டு எங்கெங்கோ பார்த்து விழித்தார். பின்பு சுதாரித்துக் கொண்டு செம ஆட்டம் போட்டார். ஒட்ட வைக்கப்பட்ட சோம்பேறித்தனத்துடன் சிலர் வந்து இணைந்தனர்.

சம்யுக்தா திடீரென்று கண்கலங்கிக் கொண்டிருந்தார். காரணத்தைப் பிறரிடம் சொல்லத் தயங்கினார். அருகிலிருந்த ஷிவானியும் அர்ச்சனாவும் அதைப் புரிந்து கொண்டார்கள். சம்யுக்தாவிற்கு தன் குழந்தையைப் பிரிந்திருக்கும் ஏக்கம். ''பெண்கள் எங்கு சென்றாலும் தங்களின் வீட்டை கூடவே சுமந்து செல்கிறார்கள்'’ என்பதற்கான உதாரணக் காட்சி அது.

பிக்பாஸ் - நாள் 12
லக்ஸரி பட்ஜெட் மதிப்புப் புள்ளிகள் 3200 கிடைத்தது. ‘பிக்பாஸ் கூப்பிட்டால் சட்டை செய்யாமல் ஆடி.. ஆடி.. தாமதமாக வருவது.. காலையில் நடனம் ஆடாமல் இருப்பது’… போன்ற காரணங்களுக்காக 200 புள்ளிகளை பிடுங்கிக் கொண்டார் பிக்பாஸ். (சிலர் நடனம் ஆடாமல் இருப்பதற்கே அதிக புள்ளிளை அளிக்கலாம். இது பார்வையாளர்களின் வேண்டுகோள்).

லக்ஸரி பொருட்களை தேர்ந்தெடுப்பதற்கான தருணம். டீம் லீடர் சுரேஷ் ''பார்த்து, சூதானமா விளையாடுங்க... இந்த பிக்பாஸ் ஒரு கெட்ட பய... கொடுத்த மாதிரி கொடுத்து அப்புறம் எல்லாத்தையும் உருவிடுவான்'’ என்று தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். சந்தைக்கடை கூச்சல் ஆரம்பித்தது. “இவர் சூத்திரத்தைச் சொல்லச் சொல்ல... இவர் லேகியத்தை கிளறுவாரு’ என்கிற பிதாமகன் காமெடி போல. அனிதா பொருட்களைத் தேர்ந்தெடுத்து சொல்ல சனம் அதை எழுத ரியோ அதற்கு மதிப்பு போட்டார்.

அந்த ரணகளத்திலும் ‘எப்படி சொல்ல வேண்டும்’ என்று ரியோ அடக்கி வைக்கப்பட்ட கோபத்துடன் அனிதாவிற்கு வகுப்பெடுக்க ‘Dosa Batter’ என்று செய்தி வாசித்தார் அனிதா. இந்தக் குழப்பத்திற்கு இடையில் ராகியை இரண்டு முறை எழுதி விட்டார்கள் போல. பிக்பாஸ் இவர்களை ஜெயிலில் போடுவது போதாதென்று இவர்களே களி கிண்டவும் ஆரம்பித்து விட்டார்கள்.

‘ஆட்டம் கொண்டாட்டம்’ டாஸ்க்கில் யார் சிறப்பாக நடனம் ஆடினார்கள்? என்பதை கச்சா முச்சாவென்று பேசி தேர்ந்தெடுத்தார்கள். சந்தடி சாக்கில் அர்ச்சனா, சுரேஷை ‘தாத்தா’ என்று அழைத்தார். இந்த டாஸ்க்கில் கேப்ரியல்லா தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. நல்ல தேர்வு. அவர் நன்கு ஆடியது மட்டுமல்லாமல், இதர போட்டியாளர்கள் ஆடும் போதும் நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் - நாள் 12

ஆனால், ஏவல் வைக்கப்பட்ட ரிமோட் கார் மாதிரி தன் இஷ்டத்திற்கு ஆவேசமாக ஆடித் தீர்த்த வேல்முருகன், ‘சிறந்த நடனக்கலைஞருக்கு’ தேர்வானதை ‘கொரோனா காலத்து கொடுமைகளுள் ஒன்று’ என்றே சொல்ல வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் வாரம் முழுவதும் ஈடுபாட்டோடு செயல்பட்ட நபர்களில் ‘ஆரி, ரேகா, சோம், பாலா, ரியோ என்கிற சுருக்கமான பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் ரியோ வென்றார்.

ஆக... அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் இருக்கப் போகிறவர்கள், ரியோ, கேபி மற்றும் வேல்முருகன்.

அடுத்த கேட்டகிரி ‘வாரம் முழுவதும் ஈடுபாடு இல்லாதவர்’ என்பதற்கான தேர்வு. படித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் நெடுங்காலம் இருக்கும் இளைஞர்களுக்கு எப்போதும் ஒரு ‘தண்டச்சோறு’ காம்ப்ளெக்ஸ் இருக்கும். யாரோ, எங்கோ பேசினாலும் தன்னைத்தான் குத்தி பேசுகிறார்களோ என்று சங்கடமும் கோபமும் வந்து விடும்.

அது போலவே, பிக்பாஸ் வீட்டில்... ‘யாரு சும்மா... இருக்…’ என்கிற பேச்சை ஆரம்பித்தாலே ஷிவானியின் மூக்கு விடைக்க ஆரம்பித்து விடுகிறது. மந்திரித்து விட்ட கோழி மாதிரி விழிக்கத் தொடங்கி விடுகிறார். கேமராவும் மிகச்சரியாக அவரைத்தான் ‘ஃபோகஸ்’ செய்கிறது. கண்ணாடிக்கு நெருக்கமாகச் சென்று தன் ஒப்பனையை சரிசெய்து கொள்வதுதான் ஷிவானியின் அதிகபட்சமான உழைப்பு.

எனவே இதற்கு ஷிவானி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை. இந்த தேர்விற்காக முதலில் யாரும் யாரையும் பரஸ்பர காட்டிக் கொடுக்காமல் அமைதியாக இருக்க, ‘பிக்பாஸ்’ சமுத்திரக்கனியான ‘ஆரி’ எழுந்து ஓர் ஆவேசமான உபதேசத்தை செய்ததும் மக்களின் மனங்களில் சலனம் ஏற்பட்டது.

‘சும்மா இருந்த சோம்பேறிகளாக’ ஷிவானி மற்றும் பாலாவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், பாலாவை தேர்ந்தெடுத்தற்கு ரேகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘அந்தப் பையன் உருளைக்கிழங்கை குறுக்கால வெட்டினான். வெண்டைக்காயை நேராக வெட்டினான்...’ என்று நற்சான்றிதழ் தர, மீண்டும் குழப்பம்.

பிக்பாஸ் - நாள் 12

எனவே இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு, பாலாவிற்குப் பதிலாக ‘ஜித்தன்’ ரமேஷை தேர்ந்தெடுத்தார்கள். ரமேஷையும் ஷிவானியையும் கண்ணாடி அறையில் வைத்து பூட்ட உத்தரவிட்டார் பிக்பாஸ்.

இப்போது பாலாவின் மைண்டில் ‘வட போச்சே’ என்கிற எண்ணம் ஓடியிருக்கும். ‘அடிப்பாவி கெடுத்தியே காரியத்த’ என்று ரேகாவை உள்ளூற அவர் திட்டிக் கொண்டிருந்திருக்கலாம். “இந்தச் சாக்கை வெச்சு ரெண்டு ஏக்கருக்கு கடலை சாகுபடி பண்ணியிருப்பேனே… போச்சே...போச்சே...”

லக்ஸரி சிங்கிள் ரூம் மாதிரி இருந்த ‘ஜெயிலை’ ‘ஓய்வெடுக்கும் அறை’ என்று நாகரிகமாக பெயர் மாற்றி விட்டார் பிக்பாஸ். (“ஏம்ப்பா.. அந்த ரூம்ல எடுக்கறதுதான் ஓய்வா... பொழுதன்னிக்கும் வீட்டுக்குள்ளயும் இவங்க இதைத்தானே பண்ணிட்டு இருக்காங்க.. அப்ப ஒட்டு மொத்த பிக்பாஸ் வீட்டையே ‘ஓய்வெடுக்கும் வீடு’ ன்னு சொல்றதுதானே லாஜிக்?!)

‘அடப்பாவமே’… ஷிவானிக்கும் ரமேஷிற்கும் தண்டனையா...’ என்று இதர போட்டியாளர்கள் சங்கடம் அடைந்து கொண்டிருக்க அல்லது அது போன்ற பாவனையை செய்து கொண்டிருக்க, இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக சோமுவுடன் உக்கிரமாக செல்லச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் அனிதா. “பாருங்கப்பா... அந்தப் பையன் என் பேச்சு ‘கா’ விட்டுட்டான்.''

சோமுவிற்கு வாக்களிக்க அனிதா கைதூக்கவில்லையாம். அதற்காக அவர் கோபித்துக் கொண்டாரோ... இல்லையோ. “ஏன் என் கிட்ட கோச்சிக்கிட்டே... ஏன் என் கூட பேசமாட்டேன்றே... ஏன் இப்படில்லாம் பேசறே.. இப்படில்லாம் பேசினா... எனக்குப் பிடிக்காது…’ என்று சரமாரியாக புகார் செய்து இம்சை தருவதில் வல்லவராக இருக்கிறார் அனிதா.

பிக்பாஸ் - நாள் 12

“நான் அரக்கோணத்துலயும்... நீ தாம்பரத்துலயுமா இருக்கோம். எப்பவும் பக்கத்து பக்கத்துலதானே உட்கார்ந்திருக்கோம்... ஏன் நீ தொலைவுல இருந்து கத்தறே... அதான் எனக்கு கோபம் வந்துடுச்சு” என்று சோம் விளக்கம் தர, பரஸ்பரம் மூக்கு சிந்தி கர்ச்சீப் தந்து சமாதானம் ஆனார்கள்.

திருமணம் ஆகாத இளம் தலைமுறையினருக்குள் உடனே நட்பு ஏற்படுவதும் பரஸ்பரம் ‘வாடா, போடி’ என்று அழைத்துக் கொள்வதும் இப்போது சகஜமாகி விட்டது. ஆனால் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டால் ஒரு நாகரிகமான விலகலை ஆண் கடைபிடிக்கிறான். போலவே பெண்ணும். திருமணம் ஆன பெண்ணை பொது வெளியில் ‘போடி... வாடி’ என்று அழைப்பதை ஆண் நண்பன் தவிர்ப்பான். பெண்ணுக்கும் அது பிடிக்காது.

ஆனால், இது போன்ற பாலினம் சார்ந்த தடைச்சுவர்கள் மெல்ல உடைந்து வருவதின் அறிகுறியாக ‘சோம் – அனிதா’ நட்பைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அனிதா திருமணம் ஆனவர் என்றாலும் ‘வாடா... போடி’ என்று அழைத்துக் கொள்வதில் இருவருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. திருமணம் என்னும் நிறுவனம் இவர்களின் நட்பில் தடையாக இல்லை. இதுவொரு ஆரோக்கியமான போக்கு.

அடுத்தது, அடுத்த வார தலைவருக்கான போட்டி. ஏற்கெனவே சொன்னபடி ரியோ, வேல்முருகன் மற்றும் கேபி ஆகியோர் வேட்பாளர்கள். இதில் ரியோதான் ஜெயிப்பார் என்பது அப்போதே தெரிந்து போயிற்று. ‘குறிப்பிட்ட சானலைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது போல காய்கள் நகர்த்தப்படுகின்றன’ என்கிற புகாரும் வதந்தியும் நெடுங்காலமாக உலாவுகிறது.

பிக்பாஸ் - நாள் 12

''யார் யாரெல்லாம் வேல்முருகனை ஆதரிக்கிறீர்கள்?’' என்றபோது நான்கு பேர் எழுந்தார்கள். ஆனால் பாவம்.. கேபிக்கு... ஒரே ஒரு ஆள்தான். சுரேஷ் மட்டுமே எழுந்து நின்றார். இளைய தலைமுறையை தலைவராக்கி அழகு பார்க்கும் அரிய குணம் சுரேஷிடம் மட்டுமே இருக்கிறது. ரியோவிற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க... அவர்தான் தலைவரோ என்று பார்த்தால் இல்லை. அங்கு ஒரு டிவிஸ்ட்டை வைத்தார் பிக்பாஸ்.

யார் யாரெல்லாம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நின்றார்களோ.. அவர்கள் உதவி செய்ய.. தலைவர் போட்டியில் இருப்பவரை ‘உப்பு மூட்டை’ சுமக்க வேண்டும். யார் அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறார்களோ, அந்தக் கூட்டணியைச் சேர்ந்தவரே தலைவர் ஆவார்.

ஆரம்பிக்கும் போதே தெரிந்து போயிற்று. இதுவொரு போங்காட்டம். உடல் வலிமையில் சிறந்து விளங்கும் பாலாஜி, ரியோவை தோளின் மீது தூக்கி வைத்துக் கொள்ள, அந்தக் கூட்டணிதான் ஜெயிக்கப் போகிறது என்பது துவக்கத்திலேயே தெளிவாகி விட்டது. விக்கிரமாதித்தன் வேதாளத்தை சுமப்பது போல வேல்முருகனை முதுகில் சுமந்து கொண்டிருந்தார் ஆரி.

இந்த இடத்தில் சுரேஷின் மனதைரியத்தைப் பாராட்ட வேண்டும். சுரேஷின் முதுகு வலியை மனதில் கொண்டு இந்த விளையாட்டிற்கு கேபி பிடிவாதமாக மறுத்தாலும் ‘வா... களத்துல இறங்கிப் பார்த்துடலாம். என்னால முடியும் முடிஞ்ச வரைக்கும் போராடுவேன். முடியலைன்னா நிச்சயம் விட்டுடுவேன்” என்று ‘ஸ்போர்ட்மேன்ஷிப்போடு’ ஊக்கம் சொல்லி கேபியை சம்மதிக்க வைத்தார்.

ஆட்டம் துவங்கியது. ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில் சிவாஜி மனைவியின் மரணச் செய்தி கிடைத்ததும் தள்ளாடி விழப்போய் பின்பு சுதாரித்துக் கொண்டு நடந்து செல்வார் அல்லவா?... அப்படியாக மொட்டைத்தலையில் வியர்வை வழிந்தாலும் ‘க்ரிப்பாக’ மல்லுக்கட்டினார் சுரேஷ். ‘நீ இறுக்கமா பிடிச்சுக்கோ. எனக்கு வலிச்சுதுன்னா. சொல்றேன்’ என்று கேபியை அதட்டிக் கொண்டேயிருந்தார்.

பிக்பாஸ் - நாள் 12

சுரேஷின் உடல்வலிக்கு தான் காரணமாக இருக்கிறோமோ என்கிற குற்றவுணர்விலும் சங்கடத்திலும் இருந்த கேபி, ஒரு கட்டத்தில் கால்வலிக்கிறது என்கிற பாவனையுடன் இறங்கி விட்டு ‘ஸாரி... தாத்தா…’ என்று அழுகையுடன் சுரேஷை கட்டிக் கொண்டது நெகிழ்வான காட்சி.

ஆனால், அந்தச் சங்கடத்தை அவர் ‘மூசுமூசு’வென்ற அழுகையுடன் நெடுநெரம் இழுக்க வேண்டியதில்லை. "இது ஒரு கேம், அவ்வளவுதான்... நாளைக்கு உனக்கே எதிரா குத்த வேண்டியிருந்தாகூட நான் குத்துவேன்" என்று சுரேஷ் சொல்வதிலிருந்து அவர் 24x7 மணி நேரமும் விளையாட்டு உணர்விலேயே இருக்கிறார் என்பது தெளிவாகியது. ஆனால் அவருக்குள் இருக்கும் ‘பாசமிகு சிவாஜி’யும் அவ்வப்போது வெளியே வந்து விடுகிறார்.

இப்போது ரியோவிற்கும் வேல்முருகனுக்கும் இடையில் போட்டி தொடர்ந்தது. ஆரியின் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த வேல்முருகன், அந்தச் சமயத்திலும் பாட்டாகப் பாடிக் கொல்ல, ஆரியின் காதுகள் பஞ்சராகியிருக்கும். (“இவனை தூக்கிட்டு இருக்கிறது போதாதுன்னு இந்த இம்சை வேற). ஆனால் அந்த நெருக்கடியான நேரத்தில் வேல்முருகனின் பாட்டு பொழுதுபோக்காக இருந்து சுமையைக் குறைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏறத்தாழ ஒரு மணி நேரத்தைக் கடந்தும் இருவரும் விடாமல் மல்லுக் கட்டினார்கள். ஒரு கட்டத்தில் ரேகா, வேல்முருகனின் மீது கைகளை எடுத்து விட ‘பார்த்துட்டான்... பார்த்துட்டான்...’ என்று கவுண்டமணி மாதிரி மற்றவர்கள் கத்தினார்கள்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம். திருவிழா தேர் வடத்தை தொட்டு இழுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் முயற்சிப்பார்கள். அப்படிச் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது காரணம். வடத்தை இழுக்கக் கூடிய அளவிற்கு உடல் பலம் இல்லாதவர்கள், என்ன செய்வார்கள் என்றால்... அதை தொட்டு வணங்குவார்கள். அந்தப் புண்ணியம் கிடைத்து விடும் என்பது ஒரு நம்பிக்கை.

பிக்பாஸ் - நாள் 12

அது போல வேல்முருகனையும் ரியோவையும் தூக்கிச் சுமப்பது என்னமோ பாலாவும் ஆரியும்தான். ஆனால் பக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் ‘சும்மா’ தொட்டுக் கொண்டிருப்பதில் என்ன பொருளோ?! அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதுதான் காரணம் போல. பிக்பாஸின் ‘கோக்குமாக்கு’ விதிகளை புரிந்து கொள்ளவே முடியாது.

போகட்டும். இப்போது ‘ரேகா’ பஞ்சாயத்திற்கு வருவோம். அவர் கைகளை எடுத்து விட கேபி பார்த்து கூச்சலிட, சுரேஷூம், ரியோவும் அதற்கு பின்பாட்டு பாடினார்கள். விசாரித்த போது ‘எனக்கு ஞாபகமில்லையே...’என்று ரேகா மழுப்ப, அதே அணியில் இருந்த சம்யுக்தா நேர்மையுணர்வுடன் போட்டுக் கொடுத்து விட்டார்.

‘வீட்டின் கேப்டன் என்கிற முறையில்’ சுரேஷ் முடிவை அறிவிக்கலாம் என்று பிக்பாஸ் சொல்ல ரியோ வென்றதாக சுரேஷ் அறிவித்தார். ‘நீ என்னய்யா சொல்றது... போய் உன் ஓனரை சொல்லச் சொல்லு… டக்ளஸூதானே ஓனர்’ என்பது போல் சுரேஷின் அறிவிப்பை இதர போட்டியாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியம் காட்ட, பிக்பாஸ் அறிவித்த பின்புதான் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆக, ரேகா தனது மேக்கப்பை ‘டச்சப்’ செய்து கொள்ள கைகளை எடுத்த சில விநாடிகளில் ஒரு தலைவர் பதவியே காணாமல் போனது என்பதுதான் இன்றைய இந்த வரலாறு.

கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பறவைகள் இரண்டும் சோகத்துடன் இந்தக் கூத்துகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.

பிக்பாஸ் - நாள் 12

“எனக்கு வலிக்கலையே... நான் அழலை... கண்ணு வேர்க்குது’ என்று கலங்கிக் கொண்டிருந்த சுரேஷை ‘இருடி செல்லம்... தைலம் தேச்சு விடறேன்” என்று உதவ அர்ச்சனா முன்வந்தார். ‘கைகொடுக்கிறேன் பேர்வழி’ என்று வடிவேலுவின் கை எலும்புகளை மாதவன் ஒரு திரைப்படக்காட்சியில் உடைத்து விடுவதைப் போல, அர்ச்சனா அமுக்கிய அமுக்கில் சுரேஷின் டேமேஜ் இன்னமும் அதிகமானதோ... என்னமோ. உள்ளுக்குள் உடைந்து அழுதார். ஆனால். வெளியில் ‘எனக்கு வலிக்கலையே…”

சுரேஷின் அனத்தலைப் பார்த்து, அப்போதுதான் சமாதானம் ஆகியிருந்த கேபி மீண்டும் தன் ‘மூசுமூசு’ அழுகையை உற்சாகமாகத் தொடர... ‘என்னடா இது...’ என்றாகி விட்டது.

‘நான் அதுக்காக ஒண்ணும் அழலை...’ என்று கேபி சொல்ல, "அப்ப எதுக்காக அழற?” என்று மற்றவர்கள் விசாரிக்கும் போது கேபி பூடகமாக இருந்தார். அப்புறம்தான் தெரிந்தது, பயபுள்ள சுரேஷின் வலிக்காக அழவில்லை... தான் கேப்டன் பதவியை இழந்து விட்டோமே என்பதற்காக அழுதிருக்கிறார் போல.

“ஏண்டா கூடவே இருந்த செவ்வாழைகளா... நான் கேப்டன் பதவிக்கு ஆசைப்படறேன்னு உங்களுக்குத் தெரியாதா... எல்லாத்தையும் வாயைத் திறந்து சொல்லணுமா... கூறு கெட்ட குக்கருங்களா.. ஏண்டா எனக்கு வோட் பண்ணலை?” என்று பாலாவையும் ஆஜித்தையும் விதம் விதமாக கேபி வறுத்தெடுக்க ‘இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலையேப்பா’ என்று இருவரும் புலம்பினார்கள். கேபி பின்னாலேயே ஆஜித் சுற்றிச் சுற்றி வந்தததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்தப் பெண்கள் இருக்கிறார்களே...

(இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டாம். பாலாவும் கேபியும் விளையாட்டுக் கோபத்துடன் பேசிக் கொண்ட காட்சியை ப்ரமோவில் போட்ட விஜய் டிவி, அதன் பின்னணியில் ஒரு ‘டூயட்’ பாட்டை இணைத்தது… அழிச்சாட்டியமான செயல்களுள் ஒன்று. ‘சிஸ்டர்’ என்று கேபியை பாலா முதலிலேயே சொல்லிவிட்டார். பாவம் அந்தப் பொண்ணு...)
பிக்பாஸ் - நாள் 12

ஜெயிலில் இருந்த... மன்னிக்கவும் ‘ஓய்வெடுக்கும் அறையில்’ இருந்த ரமேஷிற்கும் ஷிவானிக்கும் ‘கம்பெனி’ கொடுப்பதற்காக அதன் வாசலில் உட்கார்ந்து ‘ஓடக்கரை ஓரத்திலே’ என்கிற பிரிவுத் துயரைப் பாட்டை அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார் வேல்முருகன். ஆரி, சோம், அனிதா, ரியோ ஆகியோர் கூடவே அபஸ்வரத்தில் தாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘என்னடா.. நமக்காக ஒரு மனுஷன்.. தொண்டைத் தண்ணி வத்த பாடுறானே’ என்றில்லாமல் அந்தச் சமயத்திலும் கண்ணாடியைப் பார்த்து ஒப்பனையை சரி செய்து கொண்டிருந்தார் ஷிவானி. மேக்கப் சாமான்களும், கண்ணாடியும் இல்லாத அறையில் ஷிவானியை அடைப்பதுதான் அவருக்கான நிஜ தண்டனை போல.

Also Read: படபட பட்டாசாக வெடித்த அர்ச்சனா; `விருதுகள்' கலாட்டா; பீதியான ஆஜித் – பிக்பாஸ் நாள் 11

சிறிது நேரத்தில் சிறைப்பறவைகளுக்கான விடுதலைச் செய்தி வந்தது. ‘ரமேஷ் மற்றும் ஷிவானி... நீங்கள் ஓய்வெடுக்கும் அறையில் இருந்தது போதும்... இனி வீட்டிற்குள் சென்று ஓய்வெடுக்கலாம்’ என்று பிக்பாஸ் அறிவித்ததும் மக்கள் உற்சாகமானார்கள். ஏதோ ஆயுள் தண்டனையில் இருந்து ஜாமீனில் ரிலீஸ் ஆவது போல வரவேற்பு சடங்குகள் அமர்க்களப்பட்டன.

பிக்பாஸ் - நாள் 12

“நான் சொன்னதும்தான் பிக்பாஸ் அங்கிள் லைட்டை ஆஃப் பண்ணுவாரு. பார்க்கலாமா?” என்று கேபி தற்பெருமை அடித்துக் கொள்ளும் காட்சியோடு நேற்றைய நாள் முடிந்தது.

சரி... ‘Simply waste… No Comments...’, 'நமத்துப் போன பட்டாசு’ என்றெல்லாம் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் விருது தந்தார் அல்லவா? பார்வையாளர்களான நீங்கள் பிக்பாஸிற்கு ஒரு விருது தந்தால் அது என்னவாக இருக்கும்..?

கமெண்ட் பாக்ஸில் கலக்குங்கள்... பார்க்கலாம்.



source https://cinema.vikatan.com/television/rio-becomes-the-next-captain-bigg-boss-tamil-season-4-day-12-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக