Ad

திங்கள், 17 ஏப்ரல், 2023

மீசை மாதையன்: 34 ஆண்டுகள் சிறை; மைசூர் சிறையில் மயங்கி மரணித்த வீரப்பன் உறவினரின் கடைசி நிமிடங்கள்!

பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று 34 ஆண்டுகள் மைசூர் சிறைக்குள் இருந்த மீசை மாதையன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த மாதையன், வீரப்பனின் பங்காளி உறவுமுறைக்காரர்.

சந்தன மரக் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வீரப்பனைப் பிடிக்க தமிழக - கர்நாடக அதிரடிப்படைகள் களமிறக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் வீரப்பன் உறவினர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள்.

1990-ல் வீரப்பனோடு இணைந்து சந்தனக்கட்டை கடத்தியதாக வீரப்பனின் அண்ணன் மாதையன், சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன் உட்பட 30 பேரை கர்நாடக அதிரடிப்படை கைது செய்தது. பிறகு இவர்கள்மீது பாலாறு குண்டு வெடிப்பு வழக்குப் போடப்பட்டது. இந்த வழக்கு மைசூர் தடா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இறுதியாக, வீரப்பனின் அண்ணன் மாதையன், சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம். மைசூர் சிறைச்சாலையில் இவர்கள் அடைக்கப்பட்டார்கள்.

மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன்

இந்தத் தண்டனையை அதிகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நால்வரின் ஆயுள்தண்டனையும் தூக்குத் தண்டனையாக மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து தூக்கிலிடுவதற்கான நாள் குறிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் மனித உரிமை ஆர்வலர்கள் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கிடந்த இவர்களை விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ஆயினும் சைமன் மாரடைப்பு காரணமாகவும் பிலவேந்திரன் பக்கவாதம் காரணமாகவும் சிறையிலேயே இறந்தார்கள். ஞானப்பிரகாசம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிறையில் போதிய சிகிச்சை கிடைக்காததால் ஞானப்பிரகாசம் பெரும் துன்பம் அனுபவிப்பதாக வழக்கறிஞர் பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மீசை மாதையன்

இதையேற்ற உச்சநீதிமன்றம் ஞானப்பிரகாசத்துக்கு பெயில் வழங்கியது. அவர் தற்போது வெளியில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சூழலில் கடந்த 12ம் தேதி சிறையில் உள்ள தறிக்கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்த மீசை மாதையன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சிறை மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளார்கள். ஆயினும் பக்கவாதத்தால் நினைவு தப்பியது. இதையடுத்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மீசை மாதையன் நேற்று முன்தினம் நினைவு திரும்பாமலேயே இறந்தார்.

மீசை மாதையனின் மகன் மாதேஷ் வீரப்பன் குழுவிலிருந்தவர். அவரையும் மீசை மாதையனின் தம்பி சுண்ட வெள்ளையனையும் அதிரடிப்படை சுட்டுக்கொன்றது. மீசை மாதையனின் மனைவி பெயர் தங்கம்மாள். தற்போது பரமசிவம் என்ற மகனும் அம்மாசி என்ற மகளும் உள்ளார்கள். மாதையனின் உடல் பெங்களூருவிலிருந்து சொந்த ஊரான கொளத்தூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

மீசை மாதையன் உட்பட வீரப்பன் வழக்கில் சிறையிலிருந்தவர்களை மீட்க, தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அன்புராஜிடம் இதுகுறித்துப் பேசினேன்.
அன்புராஜ்

"நம் சமூகத்தில் வாழ்கிற எளிய மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான். ஆனால் அங்கும் நீதி கிடைக்காமல் இப்படியான சிறை மரணங்கள் தொடர்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் எளிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

மீசை மாதையன் மாதிரியான மனிதர்களின் சாவு அல்லது 34 வருடச் சிறைவாசம் என்பது என் பார்வையில் அநீதி. யாரெல்லாம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்காட முடிகிறதோ, பெரிய பெரிய வழக்கறிஞர்களை வைத்து வழக்காட முடிகிறதோ அவர்களுக்குத்தான் நீதி கிடைக்கும் என்றால் மீசை மாதையன் போன்ற சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என்பது மிகப்பெரிய கேள்வி..." என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/features/posts/veerappan-partner-meesai-madhaiyan-passed-away

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக