வீக் எண்ட் என்றாலே விருந்து... விருந்து என்றாலே அசைவம் என்றாகிவிட்ட நிலையில், இந்த வார வீக் எண்டை காரசாரமாக, வித்தியாசமான அசைவ உணவுகளோடு அமர்க்களப்படுத்த தயாரா?
நண்டு சூப்
தேவையானவை:
நண்டு - ஒரு கிலோ
எண்ணெய் - 100 மில்லி
முழு தனியா - 150 கிராம்
பூண்டு - 50 கிராம்
பட்டை - 5 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
கறிவேப்பிலை - 5 கிராம்
பச்சை மிளகாய் - 10
வெங்காயம் 150 கிராம்
இஞ்சி - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பழவேற்காடு மசாலா (செய்முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது) - 100 கிராம்
கொத்தமல்லித் தண்டு - 100 கிராம்
மிளகுத்தூள் - 30 கிராம்
கொத்தமல்லித்தழை - 30 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டு இவற்றை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி முழு தனியா போட்டு நன்கு வதக்கவும். பின்னர் பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி - பூண்டு பேஸ்ட்டை இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பின் பழவேற்காடு மசாலாவையும் சேர்த்துக்கொள்ளவும். கழுவி இருக்கும் நண்டுகளை இதில் சேர்க்கவும். கொத்தமல்லித் தண்டு சேர்த்துக்கொள்ளவும். தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். கொதித்த பின் இதை வடிகட்டி சூப் மட்டும் தனியான பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூளை இதன் மேல் சேர்த்துக்கொண்டால் நண்டு சூப் ரெடி.
இறால் வடை
தேவையானவை:
சின்ன இறால் - ஒரு கிலோ
நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 50 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)
மிளகாய்த்தூள் 10 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 5 கிராம்
மஞ்சள்தூள் - 10 கிராம்
சோம்பு - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பொட்டுக்கடலை - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி
சுட்டு எடுக்க:
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதன்பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின்னர் நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கிய பின் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, பின் கழுவிவைத்திருக்கும் இறால் மீன்களைப் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கும்போதே தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக வதக்கிய பின் இதை இறக்கி வைத்துவிட்டு பொட்டுக்கடலையை பவுடராக்கி இத்துடன் சேர்க்கவும். வடைக்குத் தேவையான மாவு போல் இதை நன்கு பிசையவும். மாவை சூடான எண்ணெயில் வடைகளாகப் போட்டு சுட்டெடுத்தால் இறால் வடை தயார்.
கானங்கத்த மீன் புட்டு
தேவையானவை:
கானங்கத்த மீன் - ஒரு கிலோ
துருவிய தேங்காய் - 200 கிராம்
வெங்காயம் - 400 கிராம்
பச்சை மிளகாய் - 10
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 100 கிராம்
மிளகுத்தூள் - 100 கிராம்
சீரகத்தூள் - 50 கிராம்
மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 150 மில்லி
செய்முறை:
முழு மீனைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு போட்டு சூடான நீரில் கொதிக்கவைக்கவும். பின்னர் மீனிலிருந்து முள்ளை எடுத்துவிட்டு சதையை மட்டும் எடுத்து நன்கு பிசையவும். முள்ளில்லாத மீனின் சதைப் பகுதியை நன்கு பிழிந்து எடுத்து நீர் இல்லாதவாறு செய்து கொள்ளவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு மற்றும் மீனின் சதைப்பகுதி ஆகியவற்றை நன்கு பிசைந்து கலவை போல் வைத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பின் மீது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி இந்த பிசைந்த கலவையை போட்டு நன்கு வதக்கவும். துருவிய தேங்காயை மேல் தூவவும். 10-15 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்தில் நன்கு வதங்கிய பின் உப்பு சரி பார்த்துவிட்டு சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவி கீழே இறக்கிவைத்தால், கானங்கத்த மீன் புட்டு தயார்.
கிழங்கா வறுவல்
தேவையானவை:
கிழங்கா மீன் - ஒரு கிலோ
எலுமிச்சைப்பழம் - 3
இஞ்சி, பூண்டு - தலா 150 கிராம் (விழுதாக அரைக்கவும்)
பழவேற்காடு மசாலா - 100 கிராம்
எண்ணெய் - ஒரு லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கிழங்கா மீனில் ஏற்கெனவே அரைத்து வைத்த பழவேற்காடு மசாலாவைப் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும். எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து மீன் மேலே ஊற்றவும். அரை மணி நேரம் மீனை அப்படியே பாத்திரத்தில் ஊறவைக்கவும். பின்னர் எண்ணெயில் வறுத்தெடுத்தால் கிழங்கா வறுவல் ரெடி.
பழவேற்காடு மசாலா
தேவையானவை:
குண்டு மிளகாய் - ஒன்றரை கிலோ
மல்லி (தனியா) - ஒன்றரை கிலோ
மிளகு - 150 கிராம்
சீரகம் - 150 கிராம்
துவரம்பருப்பு - 200 கிராம்
கடலைப்பருப்பு - 150 கிராம்
புழுங்கலரிசி - 30 கிராம்
கட்டிப் பெருங்காயம் - 100 கிராம்
சுக்கு - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
கிழங்கு மஞ்சள் - 150 கிராம்
கடுகு - 10 கிராம்
வெந்தயம் - 20 கிராம்
சுக்கு - 100 கிராம்
செய்முறை:
மிளகாய், தனியா, மஞ்சள், சுக்கு இவற்றை தவிர மற்றவை அனைத்தையும் வறுத்து எடுத்து ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும். தனியா, மிளகாய் ஆகியவற்றை மாவு மில்லில் அரைத்து வைத்துக்கொள்ளவும். மஞ்சள், சுக்கு இடித்து வைத்துக்கொண்டு மசாலாவை உருவாக்க வேண்டும். இதுதான் பழவேற்காடு மசாலா.
source https://www.vikatan.com/food/recipes/crab-soup-prawn-vada-fish-puttu-different-non-veg-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக