Ad

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

அதிமுக தலைமைக்கான போரின் இறுதி அத்தியாயம்... எடப்பாடியை அங்கீகரிக்குமா தேர்தல் ஆணையம்?!

பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதற்கு, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், கட்சியின் அடிப்படை சட்ட விதிகள் மாற்றம் செய்யப்பட்டதும் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதனால்தான், பன்னீர்செல்வம் தரப்பினர், கட்சியின் சட்ட விதிகள் மாற்றம் செய்யப்பட்டது தவறென தொடர்ந்து வழக்கு மேல் வழக்கு தொடுத்து வருகின்றனர். ஓரு கட்சியின் சட்ட விதிகள் மாற்றம் செய்யப்பட்டால், அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம்

 ஆனால், அ.தி.மு.க-வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதால், பொதுச்செயலாளர் என்ற பதவியையும் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் பொருள். எனவேதான், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி 'அ.தி.மு.க சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாள்களுக்குள் முடிவு எடுக்கப்படும்' என தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் கொடுத்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 19-ம் தேதி(இன்று) இது தொடர்பான மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

ஒருவேளை தேர்தல் ஆணையம் எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் சிக்கல் இருக்கிறதென கூறிவிட்டால், ஒற்றைத் தலைமைக்கான அரசியல் விளையாட்டில் மொத்த கோடுகளும் அழிக்கப்பட்டு, ஆட்டம் முதலில் இருந்து தொடங்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது தொடர்பாக எடப்பாடி தரப்பில் உள்ள வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம். ``அதிமுக-வின் பொதுச் செயலாளராக எடப்பாடியார் தேர்வான ஆவணங்கள் உள்பட பலவற்றை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யாமல் இழுத்தடித்ததாலயே டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். அதன்படி, எடப்பாடியாருக்கு சாதகமாக தான் தேர்தல் ஆணையத்தின் முடிவு வரும். பொதுக்குழு தொடர்பாகவும், சட்டவிதிகள் திருத்தம் தொடர்பாகவும் சிவில் நீதிமன்றத்தில் வழக்குகளை தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளாது.

பாபு முருகவேல்

இதேபோன்ற விவகாரம்தான் மகாராஷ்ட்ராவில் உள்ள சிவசேனா கட்சிக்கும் ஏற்பட்டது. அதில், பெரும்பான்மையான நிர்வாகிகள் ஆதரவு அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே-விடம் கட்சியும், சின்னமும் ஒப்படைக்கப்பட்டது. பிற வழக்குகளை கருத்தில் எடுத்துக் கொள்வதாக இருந்தால், டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்திருக்காது. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு இல்லாமல், நீதிமன்றத்தை மட்டுமே நாடி வந்த ஓ.பி.எஸ் தரப்புக்கு இனி எந்த வாய்ப்புமே இல்லை." என்றார் ஆணித்தரமாக...

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என பன்னீர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இன்னும் தங்களுக்கான் வழி இருப்பதாக பன்னீர் தரப்பு எண்ணுகிறது.

இதுகுறித்து பன்னீர் தரப்பின் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜிடம் கேட்டோம். ``அரசியல் கட்சிகளின் உட்கட்சித் தேர்தலின் முடிவுகள் 5 ஆண்டுகள் செல்லும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. அதன்படி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவானது 2026-ம் ஆண்டு வரை செல்லுப்படியாகும். உதாரணமாக, ஓர் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுபோட்டு வெற்றிப் பெற்ற நபர் எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்ற பின்னர், லோக்கல் கவுன்சிலர்களெல்லாம் சேர்ந்து பதவி விலக்க வேண்டுமென்றால், அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா? கொள்ளாது.

மருது அழகுராஜ்

அதன்படிதான், தொண்டர்கள் எல்லாம் தேர்வு செய்த ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழுவில் ரத்து செய்ய அதிகாரமில்லை. அதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொள்ளாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், கட்சிக்கான விதிகளின்படி, அந்த கட்சி செயல்படுகிறாதா என்று நீதிமன்றம் பார்க்காத பார்வையை தேர்தல் ஆணையம் பார்க்கும். இதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. தொண்டர்களால் உருவான கட்சியின் விதிகளை தனது விருப்பத்துக்கு ஏற்ப எடப்பாடியால் மாற்ற முடியாது. அதன்படி, இதுநாள் வரையில் தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவி தான் இருக்கிறது." என்றார் ஆணித்தரமாக.

தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்க போகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-final-chapter-in-the-battle-for-admk-leadershipwill-the-election-commission-recognize-edappadi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக