பொருளாதார ரீதியில் நாம் சீனாவை விஞ்ச முடியுமோ முடியாதோ, மக்கள் தொகைப் பெருக்கத்தில் நாம் சீனாவை விஞ்சிவிட்டோம். ஐ.நா சபையின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி. அதாவது, சீனாவைவிட 29 லட்சம் மக்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளனர். இதனால், உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியிருக்கிறது. அது மட்டுமல்ல, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் இளைஞர்களாக இருப்பதும் மிகப் பெரிய பெருமைதான்.
மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய இந்தத் தகவல்களை வெளியிட்டுப் பேசிய ஐ.நா சபை பிரதிநிதி, ‘‘இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையை 140 கோடி வாய்ப்புகளாகத்தான் பார்க்க வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், சீன வெளியுறவுத் துறை அதிகாரியோ, ‘‘மக்கள் தொகை பங்களிப்பு அளவைச் சார்ந்ததல்ல; அது தரத்தைச் சார்ந்தது. மக்கள் தொகை முக்கியம். திறமையும் முக்கியம். சீனாவின் 140 கோடி பேரில் தரமான பணியாளர்கள் 90 கோடி பேர் இருக்கிறார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்!
இந்திய மக்கள் தொகை பெருக்கம் பற்றி மேற்சொன்ன இந்த இரு அதிகாரிகள் சொன்ன கருத்துகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவை. ஐ.நா சபை பிரதிநிதி சொன்னபடி, மக்கள் தொகைப் பெருக்கத்தை வெறும் பெருமையாக மட்டும் கருதாமல், அது மிகப் பெரிய சக்தி என்று உணர வேண்டும். உலகின் வேறு எந்த நாட்டுக்கும் கிடைக்காத சக்தி நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த சக்தியைக் கொண்டு நம் நாட்டை எவ்வளவு வலிமை மிக்க நாடாக மாற்றப்போகிறோம், அதற்கான திட்டங்கள் என்ன என்பது குறித்து இனியாவது தீர்க்கமாக சிந்தித்து செயல்பட வேண்டும். சீன அதிகாரி சொன்னதுபோல, நம் நாட்டிலும் 100 கோடி தரமான பணியாளர்களை நாம் உருவாக்க வேண்டும்.
ஆனால், நாம் என்ன செய்கிறோம்? மனிதவள வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) நம் நாடு கடந்த 2022-ல் 132-வது இடத்தில் இருப்பதை வெட்கம் இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். மதம், மொழி, சாதி, கட்சி, பிராந்திய அடிப்படையில் மக்களைப் பிரித்து, லாபம் அடையத்தான் அரசியல்வாதிகள் நினைக்கிறார்களே தவிர, நம் நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் எதையும் செய்வதில்லை என்பதை மக்கள் உணர்வதே இல்லை.
இனியும் நமது மக்களின் திறமையை அதிகரித்து, அவர்களைத் திறமை மிக்கவர்களாக நாம் ஆக்கத் தவறினால், சீனப் பிரதிநிதி சொல்வது உண்மை என்றாகிவிடும்!
மிகப் பெரிய மக்கள் சக்தி உருவாகி இருக்கும் இந்த நிலையில், அவர்களின் உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான வசதிவாய்ப்புகளை உருவாக்கித் தருவது காலத்தின் கட்டாயம். இதை உணரத் தவறினால், சுயநல அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்!
- ஆசிரியர்
source https://www.vikatan.com/government-and-politics/governance/world-population-rating-for-number-one-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக