அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு, இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதி ராகுல் காந்தி, வயநாடு எம்.பி பதவியிலிருந்து மக்களவைச் செயலகத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் டெல்லியில் அரசு பங்களாவை (22-ம் தேதிக்குள்) காலிசெய்யுமாறும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி நேற்றைய தினம் ராகுல் காந்தி தன்னுடைய டெல்லி பங்களாவை காலிசெய்தார். 52 வயதாகும் ராகுல் காந்தி, டெல்லியின் துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் 2005-ம் ஆண்டு முதல் வசித்துவந்தார்.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்த ராகுலின் முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம், ``பிரதமர் மோடிக்கு எதிரான என்னுடைய தாக்குதல்களால், ஆளும் பா.ஜ.க அரசால் நான் குறிவைக்கப்படுகிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அரசு பங்களாவை காலிசெய்த பிறகு ஊடகங்களிடம் பேசிய ராகுல் காந்தி, ``இந்துஸ்தான் மக்கள் இந்த வீட்டை 19 ஆண்டுகளாக எனக்குக் கொடுத்திருக்கின்றனர். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
உண்மையைப் பேசுவதற்கான விலை இது... உண்மையைப் பேசுவதற்காக நான் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய உடைமைகளை நான் இங்கிருந்து எடுத்துக்கொண்டு, ஜன்பத்தில் உள்ள என்னுடைய தாயார் வீட்டுக்குச் செல்கிறேன். அங்குதான் தற்போதைக்கு தங்கப் போகிறேன்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/price-for-speaking-truth-rahul-gandhi-after-vacating-delhi-bungalow
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக