Ad

புதன், 19 ஏப்ரல், 2023

மாஞ்சோலை: `ரெண்டு பேருக்கு ஒரு டிக்கெட்' -பேருந்தால் ஏற்பட்ட சமூக மாற்றம் |1349/2 எனும் நான் - 6

எஸ்டேட்டுக்கு பேருந்தின் வருகை எங்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதன்பிறகுதான் எஸ்டேட் வாசிகள் பலர் இரயில், கடல், கப்பல் போன்றவைகளை நேரில் கண்டார்கள்.

ஆனாலும் வறுமை, நாளடைவில் வெளியில் உறவினர்கள் இல்லாமல் போனது என பல காரணங்களால் 1998ல் எஸ்டேட் பகுதியில் வேலைநிறுத்தம் வரும் வரையிலும் பேருந்தில் பயணிக்காதவர்கள், ஊர்நாட்டைக் காணாதவர்கள் பலர் இருந்தனர்.

கல்லிடைக்குறிச்சியில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குதிரைவெட்டி. அதுதான் மாஞ்சோலை மலையில் மக்கள் வாழும் கடைசிப்பகுதி. அங்கிருந்து பேருந்தில் கீழேயிறங்க சுமார் மூன்றரை மணிநேரம் ஆகும். எஸ்டேட்டுக்கு பேருந்து வரும் முன்னர் தொழிலாளிகள் நடந்துதான் கீழே இறங்கி மேலே ஏறினர்.

மாஞ்சோலை

துவக்கத்தில், கத்தி, கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, வாள் என பல கருவிகளின் துணைகொண்டு தரைப்பகுதியான மணிமுத்தாறு அணைக்கட்டின் நீர்பிடிப்பு பகுதி ஓரமாக, மரங்களை வெட்டி ஒற்றையடிப்பாதை உருவாக்கினர். புதிதாக உருவாக்கிய அந்த பாதையில் குதிரை மற்றும் கழுதைகளில் அதிகாரிகள் பயணித்தார்கள்.

அகலமான பாதை உருவாக்கப்பட்ட பின்னர் மாட்டு/குதிரை வண்டிகளில் பிபிடிசி கம்பெனியின் பொருட்களைக் கொண்டுசென்றார்கள். கனரக வாகனங்கள் வந்துபோகும் அளவுக்கு பாதை உருவாக்கிய பின்னர் கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் நடேசன் கம்பெனிக்குச் சொந்தமான லாரிகள்தான் முதலில் மலைக்கு மேலே வந்தது, தேயிலை உற்பத்திசெய்ய துவங்கிய பின்னர், அவைகளைக் கொண்டுசெல்ல கம்பெனிக்குச் சொந்தமான வண்டிகள் வந்துபோயின.

`பிபிடிசி லிமிடெட்' என ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பச்சை நிற லாரிகளில் எஸ்டேட் அதிகாரிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள். பின்னர் மனித முகம் போன்ற முகப்புடைய `ஃபார்கோ' வண்டி வந்தது. அதனைத்தொடர்ந்து `எக்ஸ் சர்வீஸ்மென்' சங்கத்தினர் இயக்கிய பேருந்துகள் 1966ல் எஸ்டேட்டுக்கு வந்தது. இந்த வாகனங்கள் அனைத்தும் மாஞ்சோலை வரை மட்டுமே வந்துபோயின. அதற்கடுத்துள்ள நான்கு எஸ்டேட் மக்களும் அங்கிருந்து நடந்தே பயணித்தனர்.

பல கிராமங்களுக்கும் 1960க்கு பின்னர் தான் பேருந்து வந்தது என்றாலும், எஸ்டேட் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. எஸ்டேட்டில் காட்டுவழியே நடக்க வேண்டும். சீக்கிரமே இருட்டிவிடும். இருட்டியபிறகு காட்டுக்குள் பாதை தெரியாது. எப்போது மழை பெய்யும், வேகமாக காற்று வீசும், மரம் சரிந்து விழும் என்று தெரியாது. கீழேயிருந்து ஒரே நாளில் மலை ஏறிவிட முடியாது. மலை ஏறும்போது வீட்டுக்குத்தேவையான பொருட்களை சுமந்து செல்லவேண்டும். அவ்வப்போது காட்டு விலங்குகள் வரும். பல சமயங்களில் வழித்துணைக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்.

மாஞ்சோலை

1966ஆம் ஆண்டில் நாலுமுக்கு எஸ்டேட்டுக்கு அடுத்துள்ள கோதையாறு அணை கட்டும் பணிகள் துவங்கின. ஆரம்பத்தில், ஆரல்வாய்மொழி, தடிக்காரன்கோனம், பாலமோர், முத்துகுளிவயல் வழியாக கோதையாறுக்கு பொருட்கள் வந்தன. கரடுமுரடான அந்த பாதை பல சிக்கல்களை உண்டு பண்ணியதால், கம்பெனியிடம் பேசி, மாஞ்சோலை வழியாக தார்ச்சாலை அமைத்தது மின்சார வாரியம். அதன்பிறகே தற்போது அமைந்திருக்கும் சாலை வழியாக லாரிகள் வரத்துவங்கின. அப்போதுதான் மாஞ்சோலைக்கு அப்பால் வசித்த எஸ்டேட் மக்கள் வாகனங்களில் பயணிக்கத் தொடங்கினர்.

1970களின் துவக்கத்தில் பாண்டியன் பின்னர் கட்டபொம்மன் போக்குவரத்துக்கழக பேருந்து மாஞ்சோலை வரையிலும் வந்தன. 1981ல்தான் அரசுப் பேருந்துகள் நாலுமுக்கு எஸ்டேட் தாண்டி கோதையாறு வரைக்கும் வரத்துவங்கின. அதுவும் மின்சாரவாரிய பணியாளர்களை மட்டும் மனதில் கொண்டு. பின்னர் நாளடைவில் அது ஊத்து எஸ்டேட் வரைக்கும் நீட்டிக்கப்பட்டது.

சிற்றுந்தும் அல்லாத சாதாரண பேருந்தும் அல்லாத, இரண்டுக்கும் இடைபட்ட நீளத்தில் அமைந்திருக்கும் எஸ்டேட் பேருந்துகள். அவை மலைப்பகுதியில் வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் பயணிக்க வேண்டி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை.

பேருந்து வரத்துவங்கிய காலத்திற்குள் எஸ்டேட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிடும் மனநிலைக்கு தொழிலாளர்கள் வந்திருந்தார்கள்.

தொழிலாளிகளுக்கு மறுக்கப்பட்ட ஜீப், யமஹா பைக், டுப்பு டுப்பு என நாங்கள் சொல்லும் புல்லட், லாரி என பல வாகனங்கள் "தொரைமார்"களுக்கு இருந்தன. நாலுமுக்கில் அதற்கு ஒரே விதிவிலக்காக 1987ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் மகனான ஜெயகிருஷ்ணன் TNT 5690 எண்ணிட்ட Yezdi பைக்கை சொந்தமாக வாங்கினார். தொழிலாளி வீட்டில் வாகனம் வைத்திருக்கக்கூடாது என கம்பெனி எவ்வளவோ தடுக்க முயன்றது. ஆனால் வனத்துறையில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியதால் அவரை கம்பெனியால் தடுக்கமுடியாமல் போனது. அப்போது சிறுவர்களாக இருந்த என்போன்றவர்கள் அந்த மோட்டார் பைக்கை பார்ப்பதற்காகவே அவரது வீட்டுவழியாக அடிக்கடி செல்வோம்.

மாஞ்சோலை

ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, கருவாடு, அரிசி, பருப்பு, ரேசன் பொருட்கள், கம்பளி என அனைத்தும் ஒரே பேருந்தில் மக்களோடு பயணித்து எஸ்டேட் வரும். அதைவிட்டால் வேறு வழியில்லை. அதற்கு முன்னர் போதுமான உணவுப்பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பது அரியதாக இருந்தது.

1980களின் பிற்பகுதி முதல், திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 2 மணிக்கும், காலை 7.30க்கும், பாபநாசத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கும் என மூன்று பேருந்துகள் வாடிக்கையாக வரத்துவங்கின. மாலையும் அதே பேருந்துகள் மீண்டும் வந்துசெல்லும். இரவில் வரும் பேருந்து எஸ்டேட்டில் தங்கி அதிகாலை 3.30க்கு கிளம்பும். நெல்லையில் பெரும் சத்தத்துடன் பயணிக்கும் செப்பறை கம்பெனி பேருந்துபோல ஒரு சமயத்தில் அதிக ஒலி எழுப்பிய காரணத்தால் 7.30க்கு கிளம்பும் பேருந்தை `செப்பறை பஸ்' என்று அழைப்போம்.

பகலில் வேலைகளை முடித்துவிட்டு நெல்லையிலிருந்து அதிகாலை பேருந்தில் ஏறினால், காலையில் வேலைக்குச் சென்றுவிடலாம். அதனால் மாலை 6 மணிக்கு மேல் எஸ்டேட் சாலையில் பயணிக்க அரசு பேருந்துகளை மட்டும் வனத்துறை இன்றளவும் அனுமதித்து வருகிறது.

பள்ளி திறப்பு/ விடுமுறை நாள், எஸ்டேட்டில் சம்பள நாள், கோயில்கொடை, சடங்கு/ திருமண விழாக்கள் நேரத்தில் பேருந்தில் உட்கார என்றில்லை, நிற்பதற்குக்கூட இடமிருக்காது. 42+2பேர் அமர்ந்து பயணிக்க வாய்ப்புள்ள பேருந்தில் அந்த சமயத்தில் 200க்கும் அதிகமானோர் பயணிப்பார்கள். பயணச்சீட்டு தீர்ந்துபோய் இரண்டு ஆளுக்கு ஒரு பயணச்சீட்டு என்று கொடுத்த நிகழ்வுகளும் உண்டு.

உள்ளே இடமில்லாமல் பேருந்தின் மேற்கூரையில் சுமார் 30பேர் வரைக்கும் பயணிப்போம். திருநெல்வேலியில் இருந்தே மேலே ஏறிவிடுவோம். பேருந்து கடந்துபோகும் ஊர்களில் இருக்கும் மக்கள் வேற்று கிரகவாசிகளைப்போல எங்களைப் பார்ப்பார்கள்.

முன்பதிவு செய்தும் மகிழுந்தில் பயணித்தும் பழக்கப்பட்ட தற்கால தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை பேருந்தில் அமர்ந்து பயணிக்கவேண்டி சீட் பிடிக்கும் முறையை. அது எஸ்டேட் வாசிகளுக்கு கைவந்த கலைகளில் ஒன்று.

பேந்துக்காக பாதையை சரி செய்யும் மக்கள்

நீண்ட தூரம், அதுவும் மலைப்பகுதியில் பயணிக்க வேண்டும் என்பதால் எல்லோரும் அமர்ந்து பயணிக்க விரும்புவோம். பேருந்து மாஞ்சோலையில் இருந்து மேலே இருக்கும் ஊத்து எஸ்டேட்டுக்கு வரும்போதே ஏறி சீட் பிடித்து வருவார்கள். அதுபோல நாலுமுக்கு ஆட்கள் ஊத்து, கோதையாறு என பயணித்து சீட் பிடிப்பார்கள்.

அதிக கூட்டமிருக்கும் நாட்களில், கீழேயிருந்து கிளம்பும்போது, திருநெல்வேலி/பாபநாசம் பணிமனைக்கு (Depot), சீட் பிடிக்க சென்றுவிடுவோம். பேருந்து வெளியே வந்ததும், கதவு வழியாக மட்டுமில்லாமல் ஆளாளுக்கு ஒரு ஜன்னல் வழியே உள்ளே ஏறி, ஒரு துண்டை விரித்து, மூன்று பேர் அமரத்தக்க வகையில் சீட் பிடித்துவிடுவோம். நான் முந்தி, நீ முந்தி என சீட் பிடிப்பதில் ஈகோ தலைகாட்டுவதால் அவ்வப்போது பிரச்சனையும் ஏற்படும்.

நெருக்கமாக வசிப்பதால், எஸ்டேட்டில் அடிக்கடி பலருடனும் சண்டை வரும். அதே வேகத்தில் சேர்ந்தும் கொள்வார்கள். பள்ளி விடுமுறையில் எஸ்டேட் திரும்பும்போது வீட்டில் யாருடன் சண்டை போட்டிருக்கிறார்கள் என்பது பேருந்துக்குள் ஏறிய கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிடும்.

அந்தப் பேருந்தில் பயணிக்கும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால் மூன்று மணிநேர பயணமும் ஒரே கலகலப்பாக அமையும். அன்றைய நாள் வரைக்குமான எஸ்டேட் குறித்த சகல தகவலும் பேருந்திலேயே நமக்கு வந்துவிடும்.

மாஞ்சோலை

பேருந்து ஓட்டுனர்கள்/ நடத்துனர்களின் பெயர்கள் அவர்கள் குடும்ப விபரங்கள் எல்லாம் எங்களில் பலருக்கும் அத்துப்படியாக இருக்கும். எங்களில் பலரது இல்ல விழாக்களில் சிறப்பு விருந்தினர்கள் பேருந்து ஓட்டுனர்கள்/ நடத்துனர்களே. பயணத்துடன் ஊடே எங்களுடன் நெருக்கமாகி விடுவார்கள். பேச்சி, இராஜாமணி, அருணாச்சலம், திருஞானம், ஜோசப், சக்திவேல், முனியாண்டி, இராஜன் என ஒவ்வொரு ஓட்டுனரும் எப்படி, எவ்வளவு வேகத்தில் வண்டி ஓட்டுவார்கள் என்பது குறித்து பலருக்கும் தெரியும்.

மாஞ்சோலை

காற்று, மழை காரணமாக சாலையின் குறுக்கே அடிக்கடி மரம் விழுந்துவிடும், சாலை உடைந்துவிடும். அந்த சமயங்களில் பயணிகள் இறங்கி அவைகளை அப்புறப்படுத்துவார்கள். வண்டி பழுதாகும் போதும், கொண்டை ஊசி வளைவுகளில் அதிக சுமையின் காரணமாக பேருந்து நகர மறுக்கும் போதும் மக்கள் இறங்கி பேருந்தை தள்ளுவார்கள். அப்படியும் சரியாகவில்லை என்றால் அடுத்த வண்டி வரும் வரையிலும் பயணிகள் எல்லோரும் நடு காட்டுக்குள் நிற்க வேண்டியதுதான். மலைப்பகுதியில் கடுமையான பயணமாக இருக்கும் பட்சத்திலும் இதுநாள் வரையிலும் பெரும் விபத்தோ, உயிரிழப்போ ஏற்பட்டதில்லை.

அரசுப்பேருந்தின் வருகை எஸ்டேட் வாசிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்டன. தலைமுறை தாண்டிய அவர்களின் நடைபயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதில் பெரிய மாற்றம், பிள்ளைகளை நகரப்பகுதியில் மேல்படிப்பிற்கு அனுப்பத்துவங்கியது. இன்றைய செய்தித்தாள் நாளைக்குத்தான் எஸ்டேட்டுக்கு வந்துசேரும் என்ற சூழல் பேருந்து வந்ததால்தான் மாறியது.

தங்களை பயணிக்க அனுமதித்த பேருந்துகளுக்கு வனக்குயில், வனதேவதை, சோலைக்குயில், மாஞ்சோலை கிங் என பலவாறு பெயர் வைத்து பேருந்து காதலனும் புகைப்படக் கலைஞருமான மாஞ்சோலை செல்வகுமார் உள்ளிட்ட மொத்த எஸ்டேட்டும் இன்றளவும் கொண்டாடித்தீர்க்கிறது.

வெளி உலகுக்கு ஒரே தொடர்பு சாதனமாக வந்தடைந்த பேருந்துகள் எஸ்டேட் வாசிகளின் வாழ்வில் இரண்டற கலந்துபோனதில் வியப்பேதுமில்லை.

புகைப்படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார்



source https://www.vikatan.com/features/human-stories/13492-ennum-naan-series-part-6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக