கடலூர் எஸ்.என்.சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பரணி. கடலூர் மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற இவர், கட்டுமான வரைபடத்துக்கு அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு மாநகராட்சி அதிகாரிகளோ, புதுப்பாளையம் சஞ்சீவிராயன் கோயில் தெருவிலுள்ள தனியார் (பங்கஜம் பில்டர்ஸ்) கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பரணி என்பவர் அந்நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசியபோது வரைபட அனுமதிக்காக ரூ.25,000 லஞ்சமாக கேட்டனராம். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பரணி, கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிாிவின் கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பரணியிடம் கொடுத்தனுப்பியுள்ளனர். அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற பரணி, 20,000 ரூபாயை மேயரின் உதவியாளர் ரகோத்தமனிடம் வழங்க முற்பட்டுள்ளார். அதற்கு மேயரின் உதவியாளரோ, குறிப்பிட்ட அந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடம் பணத்தை வழங்கும்படி கூறினாராம். அதன்படி பரணியும் பணத்தை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் என்பவரிடமும், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவின் உதவியாளர் ரகோத்தமனிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், இருவரையும் கைதுசெய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம், இதே போன்றதான சம்பவத்தில்... மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறாமல், தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் மறைமுகமாக லஞ்சம் பெறுகின்றனர் என புகார் எழுந்தது. அதனடிப்படையில், மாநகராட்சி அலுவலகம் மற்றும் புதுப்பாளையம், பாரதி சாலையில் உள்ள 4 கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அந்த 4 கட்டுமான நிறுவனங்களிலிருந்தும் முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத ரூ.5 லட்சமும் கைப்பற்றப்பட்டு கட்டுமான நிறுவன உரிமையாளர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/crime/two-have-been-arrested-by-vigilance-department-in-connection-with-taking-bribe-for-project-approval
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக