Ad

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

`ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி?' - வலுக்கும் எதிர்ப்பு... பின்னணி என்ன?

2018-ம் ஆண்டும் மே மாதம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 99 நாட்கள் அறவழியில் நடந்த போராட்டத்தில் 100-வது நாளில் போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு சம்பங்களால் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் கலவரத்தின்போது படுகாயமடைந்தனர். அதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது வேதாந்தா குழுமம். ஆகவே அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் மன்றாடி வருகிறது. ஆனால் எந்த முயற்சிகளும் கதைக்கு ஆகவில்லை. ஆகவே 2022 ஜூன் மாதம் தாமிர தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை விற்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது ஸ்டெர்லைட் நிறுவனம்.

இந்நிலையில் சமீபத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையின்படி ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனினும் ஆலையின் உபகரணங்கள் பாதிப்படையும். பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கான அனுமதியைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்திருந்தது வேதாந்தா நிறுவனம்.

ஸ்டெர்லைட் ஆலை

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பராமரிப்பு பணிகள், ஆய்வு பணிகளை என்போன்ற கோரிக்கைகளை நிராகரித்தது நீதிமன்றம். அதே சமயம் ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்ற உத்திரவிட்டிருப்பதும், அதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்யத் தவறியதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் கழிவுகளை அகற்றிக் கொள்வதற்கு அரசு ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியதை தொடர்ந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும் பசுமை மண்டலத்தை பராமரிக்கவும் இது தொடர்பான பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதியளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ”ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்கக் கூடாது, எந்த வகையான பராமரிப்புகளாக இருந்தாலும் அதனைத் தமிழக அரசே நேரடியாகச் செய்திட வேண்டும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

உச்ச நீதிமன்றம்

நம்முடன் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சிலர் "ஸ்டெர்லைட் வளாகத்தில் ஜிப்சம் கழிவுகளை வெளியேற்ற தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனைத் தமிழக அரசின் உயர்மட்ட குழுவின் ஆலோசனையுடனே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலை நிர்வாகம் இதர சில பராமரிப்புகளுக்கும் அனுமதி கேட்டிருந்தாலும் தேவைகளை ஆராய்ந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்ற மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணிகளை அரசு எடுத்த செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருபோதும் வேதாந்தா குழுவினரை ஆலைக்குள் அனுமதிக்கக் கூடாது

அரசு முன்னெடுத்து அதற்கான செலவுகள் ஆலை நிர்வாகத்திடம் வாங்கிக் கொள்ளட்டும். ஆலை நிர்வாகத்தினரை உள்ளே அனுமதித்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க வைக்க ஏதேனும் சதி வேலைகளைச் செய்திட வாய்ப்புகள் உள்ளது. காப்பர் தயாரிக்காமல் வேறொன்றைத் தயாரிக்கிறோம், அரசுக்கு உதவுகிறோம் என கிளம்பிவிடுவார்கள் ஆகவே தமிழக அரசே பராமரிப்பு வேலைகளைக் கையாள வேண்டும்” என்கிறார்கள் உறுதியாக...

ஸ்டெர்லைட் ஆலை

மேலும், ஸ்டெர்லைட் ஆலை எப்படியாவது மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு உள்ளடி வேலைகளைச் நிர்வாகத்தினர் செய்கின்றனர். தூத்துக்குடி பகுதி மக்களை அணுகி அவர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது, விளம்பரங்களின் மூலம் நல்லதொரு நிறுவனமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது, தமிழ்நாடு ஆளுநரை ஸ்டெர்லைடுக்கு ஆதரவாகப் பேச வைப்பது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் உதவியை நாடி ஆலையைத் திறக்க திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல வேலைகளைச் செய்துவரும் சூழலில் நிர்வாகத்தினரை ஆலை வளாகத்தில் அனுமதிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/background-info-on-permission-for-sterlite-plant-maintenance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக