மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைமை வாய்ந்த சட்டநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வருகிற மே 24-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காகவே கோயில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அப்போது யாகசாலை அமைப்பதற்காகக் களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயிலின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டினர்.
அங்கே 2 அடி ஆழத்தில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா ஐயனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை அரை அடி முதல் 2 அடி வரை உயரம் உடையன. மேலும் 400க்கும் மேற்பட்ட, திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழிப் பதிகம் தாங்கிய தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.
அதனை தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் நேரில் பார்வையிட்டு அவை எந்தக் காலத்துக்குரிய சிலைகள் எனக் கேட்டறிந்தார். இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது மேலும் இது குறித்த தகவல் அறிந்து தஞ்சாவூர் தொல்லியல் துறையினர் சீர்காழி நோக்கி விரைந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/spiritual/temples/ancient-idols-artifacts-and-pedestals-found-in-chattanathar-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக