"பிரதமர் மோடி திமிர்பிடித்தவர்..."
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அரசுக்குமான மோதல் போக்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எடுத்துக்காட்டாக கூற முடியும். ஆனால் இதிலிருந்து மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மட்டும் மாறுபட்டவர். அவர் தொடர்ந்து மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முன்னதாக அவர், "பிரதமர் மோடி திமிர்பிடித்தவர்.
நான் அவரிடம், `விவசாயிகள் போராட்டத்தில் 500 பேர் இறந்துவிட்டார்கள்' என்று தெரிவித்தேன். அதற்கு அவர், `அவர்கள் என்ன எனக்காகவா இறந்தார்கள்?' என்று கேட்டார். `நீங்கள்தானே இந்தியாவின் பிரதமர்?' என்று கேட்டு வாக்குவாதம் செய்தேன். பிறகு அவர், `இது பற்றி அமித் ஷாவிடம் பேசுங்கள்' என்றார். அமித் ஷா, `அவர் ஏதோ பேசிவிட்டார் விட்டுவிடுங்கள்" என்றார். (இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து அடுத்த நாளே மோடி பற்றி நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று தெரிவித்துவிட்டார்).
"தலா ரூ.150 கோடி..."
``ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அந்த சமயத்தில், இரண்டு ஊழல் கோப்புகள் என்னிடம் அனுப்பிவைக்கப்பட்டன. அம்பானி, மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆகியோருடைய அந்த இரண்டு மோசடிக் கோப்புகளில் நான் கையெழுத்திட்டால், கோப்புக்கு தலா ரூ.150 கோடி தருவதாகக் கூறினார்கள். `ஐந்து குர்தாக்களுடன் இங்கு வந்தேன். அதை மட்டுமே இங்கிருந்து போகும்போது எடுத்துச் செல்வேன்' என்று சொல்லிக் கையெழுத்துப்போட மறுத்துவிட்டேன். அதனால்தான் இடம் மாற்றப்பட்டேன்" என்றார்.
மேலும், "பா.ஜ.க-வில் இருக்கும் நண்பர்கள் சிலர், `மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால், உங்களுக்கு குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் பதவி கிடைக்கும்' என்றார்கள். ஆனால், `நான் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான். ஆளுநர், குடியரசுத் தலைவர் பதவிகள் எல்லாம் ஒன்றுமேயில்லை' என்று சொல்லி நிராகரித்து விட்டேன்" என்றெல்லாம் பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
"புல்வாமா தாக்குதலுக்கு..."
இந்நிலையில் தான் "புல்வாமா தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம்" என்று தெரிவித்து அடுத்த சர்ச்சை தீயை பற்றவைத்திருக்கிறார். இதுகுறித்து அவர், "புல்வாமா தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம். பெரிய கான்வாய்கள் சாலையில் பயணிப்பதில்லை என்பதால் வீரர்களை அழைத்துச் செல்ல சி.ஆர்.பி.எஃப் விமானம் கேட்டது.
அவர்களுக்கு ஐந்து விமானங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகம் தர மறுத்துவிட்டது. விமானங்கள் வழங்கப்பட்டிருந்தால், இது நடந்திருக்காது. நம்முடைய தவறு காரணமாகவே இந்த தாக்குதல் நடந்தது. இதைப்பற்றி அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் பிரதமர் மோடி, அதுப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்.
தேர்தல் ஆதாயம்:
இதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் யாரிடமும் கூறாமல் அமைதியாக இருக்குமாறு கூறினார். பாகிஸ்தான் மீது பழியை சுமத்தி அரசாங்கத்திற்கும், பாஜக-வுக்கும் தேர்தல் ஆதாயத்தை பெறுவதே இதன் நோக்கம் என்பதை உடனடியாக உணர்ந்தேன். 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து 10-15 நாள்களாக காரில் கஷ்மீரின் வீதிகளில் சுற்றிவந்துள்ளதே, எந்தளவிற்கு நம்முடைய உளவுத்துறை செயலாற்றி உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
காஷ்மீர் பற்றிய துளி அறிவு கூட மோடிக்கு கிடையாது. மாநில அந்தஸ்தை எடுத்ததைவிட முட்டாள்தனம் இல்லை. ஊழலைப் பற்றி பிரதமருக்கு சிறிதும் அக்கறை இல்லை. 2020 ஆகஸ்டில் கோவாவின் கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மேகாலயாவுக்கு அனுப்பப்பட்டேன். ஏனெனில் ஊழல் தொடர்பான பல நிகழ்வுகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததால், அரசாங்கம் அதைச் சமாளிப்பதற்குப் பதிலாக என்னை புறக்கணிக்கத்தது.
"பிரதமரைச் சுற்றியுள்ளவர்கள் ஊழலில்..."
பிரதமரைச் சுற்றியுள்ளவர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் பிரதமர் அலுவலகத்தின் பெயரை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் மோடியின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். ஆனால் பிரதமர் அதைப் பொருட்படுத்தவில்லை. அதானி ஊழல் பிரதமருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது கிராம அளவில் பரவி, அடுத்த தேர்தல்களில் பாஜக வை கடுமையாக பாதிக்கும். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுத்தது வரலாறு காணாத தவறு. ராகுல் காந்தி, அதானி ஊழல் குறித்து சரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு பிரதமரால் தெளிவாக பதிலளிக்க முடியாது. மூன்றாம் தர நபர்களை ஆளுநர்களாக பாஜக அரசு நியமிக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பயனுள்ளதாக இருந்தது:
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "பாஜக 2014-ம் ஆண்டு 282 இடங்களில் வெற்றி பெற்றார்கள். பிறகு 2014 முதல் 2019 வரை நடந்த 12 இடைத்தேர்தலில்களில் தோல்வியை சந்தித்தார்கள். ஜிஎஸ்டி, கறுப்பு பணம் ஒழிப்பு போன்றவற்றால் மக்கள் கடுமையான வெறுப்பில் இருந்தார்கள். கோரக்பூர், உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் எல்லாம் தோல்வியை சந்தித்தார்கள்.
இதனால் 2019-ல் நிச்சயமாக தோல்வியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்றார்கள். அதாவது புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தேர்தலின் போக்கே மாறிப்போகிறது. தேச ஒற்றுமை, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று பேசினார்கள். தேசத்தையே பாஜக தான் பாதுகாக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் வந்தால் தேசம் பயங்கரவாதிகள் கையில் சென்று விடும் என்ற பிரசாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு இந்த தாக்குதல் அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
பலவீனங்கள் மறைக்கப்பட்டது:
பிரதமர் மோடியும், அஜித் தோவலும் புல்வாமா தாக்குதல் குறித்து பேச வேண்டாம் என்று சத்யபால் மாலிக்கிடம் தெரிவித்ததாக அவர் கூறுகிறார். தீவிரவாதிகள் விவகாரம் என்பதால், நீங்கள் கவர்னராக இருப்பதால் பேச வேண்டாம் என்று அவரிடம் தெரிவித்திருக்கலாம். அவர் கூறுவது போல் அரசியல் காரணம் இதற்கு இருக்கிறது என்று நம்மால் அடித்து கூற முடியாது. இதன் மூலமாக பாஜக கட்சியால் ஒரு பிரசாரம் எடுக்கப்பட்டது. அது தேர்தலில் அந்த கட்சியின் பலவீனங்கள் மறைக்கப்பட்டது.
அவர் எதிர்பார்த்த பதவி கிடைக்காததால் கூட இப்படி பேசலாம். மூன்றாம் தர நபர்களை ஆளுநர்களாக நியமிக்கிறார்கள் என்று நாம் கூற முடியாது. அதாவது அவர்கள் பாஜக ஆட்களாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆளுமை மாநிலங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். அரசியல் சட்டத்தின்படி நடப்பதில்லை என்பதெல்லாம் சரி. ஆனால் அவர்களை மூன்றாம் தர நபர்கள் என்று அவர் சொல்வதை நாம் ஆமோதிக்க வேண்டியதில்லை" என்றார்.
அவர் சர்ச்சைக்குறியவர்:
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "அவர் சர்ச்சைக்குறியவர் தான். அதனால் தான் அவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தற்போதும் அப்படி தான் தெரிவித்திருக்கிறார். புல்வாமா தாக்குதல் குறித்து அவர் பதவியில் இருக்கும் போது ஏன் பேசவில்லை?. தற்போது பதவியில் இல்லை என்பதால் எதாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் பதவி நீடிக்கப்பட்டதாக கோபத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/the-ministry-of-home-affairs-is-responsible-for-the-pulwama-attack
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக