உத்தரப்பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய ஆதிக் அகமத், அவருடைய சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் நேற்று மாலை பிரக்யராஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சோதனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சோதனை முடிந்து மருத்துவமனைக்கு வெளியில் வந்தபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அந்நேரம் ஆதிக் அகமத் முன்பு வந்த மூன்று பேர், முதலில் ஆதிக்கின் தலையில் சுட்டனர். அதைத் தொடர்ந்து, அவருடைய சகோதரரையும் சரமாரியாகச் சுட்டனர். உடனே இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்கள் கீழே விழுந்த பிறகும், மூன்று பேரும் தொடர்ந்து அவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.
அவர்களை துப்பாக்கியால் சுட்ட லவ்லேஷ் திவாரி, சன்னி, அருண் மவுரியா ஆகிய மூன்று பேரையும் துப்பாக்கியுடன் போலீஸார் கைதுசெய்தனர். மூன்று பேரும் மருத்துவ ஊழியர்கள் என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றது விசாரணையில் தெரியவந்தது. துப்பாக்கியால் சுட்ட மூன்று பேரும் `ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து இரண்டு பேரின் உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டன. அதோடு பிரச்னையைச் சமாளிக்க சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் குவிக்கபட்டனர். பொதுமக்கள் கூட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. உத்தரப்பிரதேசம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் போலீஸ் உயர் அதிகாரிகளை அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத், விசாரணைக்காக மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டார்.
சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பி-யான ஆதிக் அகமத், 2005-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ ராஜு பால் என்பவரைச் சுட்டுக் கொலைசெய்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். அதோடு இந்தக் கொலை வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த உமேஷ் பால் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் கொலைசெய்த வழக்கில் ஆதிக் அகமத், அவருடைய மகன் அசாத், சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதில் இரண்டு தினங்களுக்கு முன்புதான் ஜான்சியில் ஆதிக்கின் மகன் அசாத்தும், அவரின் கூட்டாளி குலாம் என்பவரும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆதிக் தன்னுடைய மகனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் வெள்ளிக்கிழமை கோர்ட் விடுமுறை என்பதால் அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
உமேஷ் பால் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அகமதாபாத்திலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு ஆதிக் அகமத் அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து அழைத்துவரப்படும்போதே, `என்னை சுட்டுக் கொலைசெய்துவிடுவார்கள்' என்றும், `என்னுடைய குடும்பத்தையாவது விட்டுவையுங்கள்' என்றும் ஏற்கெனவே பேட்டியளித்திருந்தார். அவர் சொன்னபடியே போலீஸார் புடைசூழ கையில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில்... பலத்த பாதுகாப்பையும் மீறி சுப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மாநிலத்தில் குற்றம் உச்சத்தை தொட்டிருக்கிறது. கிரிமினல்களின் உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கின்றன. போலீஸ் பாதுகாப்பில் இருப்பவரை யாரோ துப்பாக்கியால் சுடுகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் அச்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையை செயற்கையாக உருவாக்கியிருக்கின்றனர்" என்று குறிப்பிட்டிருக்கிறார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. உத்தரப்பிரதேச அமைச்சர் சுதந்திர தேவ் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில், `இந்தப் பிறவியில் பாவமும், புண்ணியமும் கணக்கிடப்படுகிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்து வந்த பாதை
ஆதிக் அகமத் 1979-ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். 1989-ம் ஆண்டு அலகாபாத் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்று முறை சுயேச்சை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிக், நான்காவது முறையாக சமாஜ்வாடி கட்சி சார்பாக எம்.பி-யானார். 1999-ம் ஆண்டிலிருந்து 2003-ம் ஆண்டு வரை `அப்னா தள' கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். 2004-ம் ஆண்டு மீண்டும் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.பி-யானார். 2005-ம் ஆண்டு ராஜுபால் எம்.எல்.ஏ கொலைக்குப் பிறகு 2008-ம் ஆண்டு ஆதிக் போலீஸில் சரணடைந்தார்.
source https://www.vikatan.com/crime/criminal-atiq-ahmed-and-his-brother-ashraf-were-shot-dead-by-miscreants-in-uttar-pradesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக