1951ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் சட்டத்தில் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகளை உறுதிசெய்தார் டாக்டர் அம்பேத்கர். அந்த உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாய் எஸ்டேட் தொழிலாளர்கள் அனுபவிக்கத் தொடங்கியது தொழிற்சங்கம் வந்தபிறகுதான்.
1950களின் தொடக்கத்தில், இருப்பதில் எளிதான வேலைகளை தங்களுக்குப் பிடித்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கி வந்தனர் அதிகாரிகளும் / கங்காணிகளும். தங்களின் ஆணைக்கு உடன்படாதவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டன அல்லது கடினமான வேலைகள் ஒதுக்கப்பட்டன. அனைவருக்கும் ஒரே மாதிரியான வேலை நேரம் இல்லை. வேலை நிமித்தம் அவ்வப்போது, தொழிலாளர்களை அடிப்பதும் நடக்கும். தாங்கள் எழுதுவதுதான் கணக்கு அதன்படிதான் கூலிகளுக்கு சம்பளம் என அவர்களுக்கு அளவு கடந்த அதிகாரம் இருந்தது.
கம்பெனியில் அவரவர் பிரச்சனைகளை கங்காணிகள் மற்றும் அய்யாக்களிடம் தனிநபராக முறையிட்டு வந்தனர் தொழிலாளர்கள். அதனால் எல்லா பிரச்சனைகளும், அதிலும் குறிப்பாக அதிகாரிகள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் கம்பெனியின் காதுக்கு எட்டவில்லை. கம்பெனியும் அதனை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு தொழிலாளர்களை விருப்பம் போல் பயன்படுத்திக் கொண்டது.
எதார்த்தத்தில் எஸ்டேட் மேலாளர்களான தொரைமார்களும் எஸ்டேட் தொழிலாளிகளே என்றாலும், தொழிலாளர்களின் பார்வையில் அவர்கள்தான் எஸ்டேட் முதலாளிகள். அதனால், கம்பெனியாலும், எஸ்டேட் அதிகாரிகளாலும் பிரச்சனைகள் எல்லோருக்கும் இருந்தாலும், தொரைமார்களுடன் பேசுவதற்கான அச்சம், வேறு மொழியைச்சேர்ந்த அவர்களுடன் பேசும்போதான மொழிச்சிக்கல் என பல காரணங்களால் எல்லா தொழிலாளர்களும் அவர்களைச் சந்தித்து முறையிட தயாராகயில்லை.
முதலாம் உலகப்போரின் முடிவில், பல நாடுகளில் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் 1925ஆம் ஆண்டு, `தொழிற்சங்கங்கள் சட்டம்' உருவாக்கப்பட்டது. ஆன போதிலும் 1955 வரையிலும் எஸ்டேட்டில் தொழிற்சங்கம் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
சுதந்திரம் அடைந்த துவக்க காலத்தில் நகர்/கிராமப்புற நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் கம்பெனிக்கு நெருக்கடி உருவானது. ஆனாலும், அப்போதைய நிலை அப்படியே தொடர வேண்டியும், எஸ்டேட்டில் புதிதாக தொழிற்சங்கம் உருவாகாமல் தடுக்க வேண்டியும், தனது விசுவாசிகளான சில தொழிலாளர்களை வைத்து `குரூப் காங்கிரஸ்' என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கியது கம்பெனி.
தொழிற்சங்கமும் உருவாக்கியாச்சு, அதனால் தனது வேலைக்கும் பிரச்சனையில்லை என்பதால், அதன் நிர்வாகிகள் மூலமாக தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது கம்பெனி.
மணியாச்சிக்குப் பக்கத்தில் உள்ள கிராமம் மருதன்வாழ்வு. அந்த ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் காங்கிரஸ் கட்சிக்காரர். அம்பைக்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் அமைந்திருக்கும் மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் தயாராகும் துணிகளை வாங்கி சில்லறை விற்பனை செய்துவந்தார். அவரது மனைவி லட்சுமி அம்மாள் மாஞ்சோலை எஸ்டேட்டில் வேலை பார்த்துவந்ததால், அவர் 1955 ஆம் ஆண்டு வாக்கில் எஸ்டேட்டில் தங்கியிருந்தார்.
கம்பெனியில் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுவதையும் அதற்கு சரியான பரிகாரம் இல்லாததையும் நேரில் கண்டார் ஆறுமுகம். மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் இருந்த INTUC தொழிற்சங்க பொறுப்பாளர்களுடன் அவருக்கு நல்ல நெருக்கம் இருந்தது. அவர்கள் மூலமாக மதுரையில் இருந்த INTUC தொழிற்சங்க செயலாளர்கள் இராமசந்திரன், இராமானுஜம் ஆகியோருடன் கலந்துபேசி, எஸ்டேட்டில் தொழிற்சங்கம் உருவாக்கிட திட்டமிட்டார்.
எஸ்டேட்டில் வேறு தொழிற்சங்கம் அமைவதை விரும்பாத பிபிடிசி அதற்கு மறுப்பு தெரிவித்தது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எஸ்டேட் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதில் தீவிரமாக இருந்தார்கள்.
அம்பையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சிக்காரர்களான வழக்கறிஞர் குமரகுருபரர், பின்னாளில் அம்பையில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோமதி சங்கர தீட்சிதர் போன்றோரின் ஆதரவில் 1955ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாஞ்சோலையில் INTUC தொழிற்சங்கம் உருவாக்க அம்பையில் தீர்மானம் போடப்பட்டது.
அதனை அறிந்த கம்பெனி, INTUC தொழிற்சங்கத்தில் முன்னணி நிர்வாகிகளாக செயல்பட்ட தொழிலாளர்களை எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தது.
1955ஆம் ஆண்டின் துவக்கத்தில் அம்பையில் இருந்து எஸ்டேட் வந்துகொண்டிருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள சங்கிலி கேட் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுத்து நிறுத்தியவர்களும் சக தொழிலாளிகளே. ஆனால் அவர்கள் கம்பெனி விசுவாசிகள். அவர்களைக் காட்டிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த காரணத்தால், விசுவாசிகள் அடித்து விரட்டப்பட்டனர். தாங்கள் உருவாக்கிய எஸ்டேட்டுக்குள் தங்களை நுழைய தடைவிதித்த காரணத்தால் அந்த சங்கிலி கேட்டும் அடித்து நொறுக்கப்பட்டது. (பின்னர் கம்பெனியால் மீண்டும் அங்கு சங்கிலி கேட் போடப்பட்டது.)
மாஞ்சோலை உருவாகி கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர் பிபிடிசி கம்பெனிக்கு எதிராக தொழிலாளர்கள் சேர்ந்து எழுப்பிய முதல் கலகக்குரல் அதுதான்.
கம்பெனியை மீறி மேலே ஏறி வந்த போதிலும், அவர்கள் அனைவரும் மாஞ்சோலையில் பத்தாம்காடு பகுதியில் இருக்கும் கம்பெனியின் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மேலும், எஸ்டேட் பொருட்களை உடைத்தார்கள், அதிகாரிகளை தாக்க முயன்றார்கள், பங்களாவை தீ வைக்க முயன்றார்கள் என அவர்கள் மீது பொய் வழக்கு கொடுத்தது கம்பெனி. அதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டார்கள்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மானூரைச் சேர்ந்த ஆறுமுகம். அந்த சமயத்தில் அவரது மனைவி லூர்து அம்மாள் தனது மகப்பேறுக்காக எஸ்டேட்டிலிருந்து அவரது சொந்த ஊரான வில்லிசேரிக்குப் போயிருந்தார். அந்த தம்பதிகளுக்கு 10.06.1955 அன்று பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் என் தாயார் இருதயமேரி.
குழந்தை பிறந்த செய்தியைச்சொல்ல சென்றபோது, இதர சிறைவாசிகளுடன் சேர்ந்து என் தாத்தா ஆறுமுகம் மணிமுத்தாறு அணை கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அந்த வழக்கில் பிணை வாங்கி வெளியே வந்த பின்னரே அவர் முதல்முறையாக தன் முதல் குழந்தையை கையிலேந்தினார்.
வழக்கை முடித்து மீண்டும் எஸ்டேட் வந்த நிர்வாகிகளை எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தது கம்பெனி. அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் வெளியே அனுப்பி விடுவோம் என்று எச்சரித்தது. அதற்கொரு வழக்கு போட்டு மீண்டும் உள்ளே வந்திருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
எஸ்டேட்டுக்கு தொழிற்சங்கம் வேண்டுமா? இல்லையா? என அதன்பிறகு தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில் தொழிற்சங்கம் வேண்டும் என பெருவாரியான தொழிலாளர்கள் வாக்களித்ததால் வேறு வழியின்றி அனுமதி வழங்கப்பட்டது.
எஸ்டேட்டில் வயது மூத்தவர்கள் பலர் காங்கிரஸ் பக்கம் இருக்க, அப்போதைய இளைஞர் பட்டாளம் அப்போது வளர்ந்து வந்துகொண்டிருந்த திமுகவில் ஐக்கியம் ஆனார்கள். குறிப்பாக காக்காச்சி எஸ்டேட்டில் திமுகவுக்கு பெரும் ஆதரவு இருந்தது.
அப்போதைய எஸ்டேட் மேலாளர் பிளான்ட் தொரையிடம் கட்சிக்கூட்டம் நடத்தவும், திமுக கொடி கட்டவும் பெரும் போராட்டத்திற்கு பிறகு அனுமதி வாங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக 1962ஆம் ஆண்டு திமுகவில் செல்வாக்கு மிக்க ஈவிகே சம்பத்தை எஸ்டேட்டுக்கு அழைத்து வந்தது சுக்கூர், தாசன் (எனது தாயாரின் தாய்மாமா), குமார் உள்ளிட்ட இளைஞர் குழு. காக்காச்சி புல் மைதானத்தில் இருந்த தேநீர்கடைக்கு அருகே திமுக கொடிக்கம்பம் நாட்டப்பட்டது. (அனேகமாக திமுகவில் இருந்து வெளியேறுமுன்னர் ஈவிகே சம்பத் கலந்துகொண்ட கடைசி நிகழ்வு அதுவாகத்தான் இருக்கும்).
கூட்டம் முடிந்த பிறகும் அங்கு கொடி இறக்காமல் இருப்பது குறித்து கேட்ட மேலாளரிடம், சம்பத் ஏற்றிய கொடி, அவரிடமே சென்று கேளுங்கள் என்று நக்கலாக பதில் சொல்லி கம்பத்தை அகற்ற மறுத்தது அந்த இளைஞர் குழு. சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், 1990ன் துவக்கத்தில் அந்த கொடிக்கம்பம் சில காரணங்களால் அங்கிருந்து அகற்றப்பட்டது.
அதே 1962ஆம் ஆண்டில் அம்பை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய இரத்தினவேல் பாண்டியன். வாக்கு சேகரிக்க வந்த சமயத்தில் எஸ்டேட் பகுதியில் திமுக தொழிற்சங்கம் இல்லாததை கண்டறிந்தார். பின்னாளில் தமிழ்நாடு அமைச்சராக பணியாற்றிய ஜி.ஆர்.எட்மண்டை அழைத்து வந்து 1963ஆம் ஆண்டில் மாஞ்சோலை பகுதியில் திமுக தொழிற்சங்கத்தை உருவாக்கி, கட்சிக்கொடியை ஏற்றினார்.
பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியாக எஸ்டேட்டுக்குள் நுழைய ஆரம்பித்தது. பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட எல்லா கட்சிகளுக்கும் எஸ்டேட்டில் கிளை அமைக்கப்பட்டன.
தற்போது எஸ்டேட்டில் இல்லாத கட்சிகளே இல்லையென்ற போதிலும், எல்லா கட்சிகளுக்கும் தொழிற்சங்கம் இல்லை. எஸ்டேட்டில் அங்கீகரிக்கப்பட்ட காங்கிரஸ், திமுக, இந்திய பொதுவுடைமை கட்சி, அதிமுக ஆகிய அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களுக்கு, தொழிலாளர்கள் குடியிருப்பில் ஒரு முழுவீட்டை ஒதுக்கிக்கொடுத்தது கம்பெனி. அங்குவைத்துதான் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நாலுமுக்கில் வாழ்ந்த மலையாளிகள் பெரும்பகுதியினர் பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆறுமுகம், தாசன், தளவாய், "வாத்தியார்" தேவராஜ், சீனிப்பாண்டி, கல்யாணி, ஜமாலுதீன், மோகன்தாஸ், ஏசையா உள்ளிட்ட பல தொழிற்சங்கத் தலைவர்கள் எஸ்டேட்டில் உருவானார்கள்.
தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட பின்னர் தொழிலாளர்களின் வாழ்வில் பரவலாக மாற்றங்கள் நிகழத்துவங்கின. தொழிற்சங்கத்தில் பொறுப்பாளர்களாய் இருந்தவர்கள் தங்களின் சக தொழிலாளிகள் என்பதால் அவர்களிடம் எல்லா பிரச்சனைகளையும் எளிதாகக் கொண்டுசெல்லவும், அவர்களால் பிரச்சனைகளை முழுமையாக புரிந்துகொள்ளவும் முடிந்தது. அதனால் அன்றாட பிரச்சனைகளும் கம்பெனியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டன. உதிரிகளாய் அல்லாமல் தொழிற்சங்கம் மூலமாக அணுகியதால், அவ்வளவு காலமாய் பெரும்பாலும் புறந்தள்ளப்பட்டு வந்த கூலித்தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு கம்பெனி ஓரளவு செவிசாய்க்கத் துவங்கியது. அது தொழிலாளர்களின் வாழ்வில் நல்ல பலனையும் கொடுக்க ஆரம்பித்தது.
உரிமைகள் பலவற்றைப் பெற காரணிகளாக தொழிற்சங்கவாதிகள் இருந்த போதிலும், அவர்களில் சிலரை அவ்வப்போது தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவே செய்தது கம்பெனி. இருப்பினும் பெரும் போராட்டங்களாக வெடித்திருக்கக்கூடிய பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்து வைத்தன தொழிற்சங்கங்கள் என்றால் மிகையாகாது.
படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார் & வெங்கட் ஈஸ்வர்
source https://www.vikatan.com/features/human-stories/13492-ennum-naanum-part-7
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக