Ad

புதன், 19 ஏப்ரல், 2023

``அஜித் பவாரை பாஜக-வில் சேர்த்தால் நாங்கள் இருக்கமாட்டோம்" - ஷிண்டே தரப்பு சிவசேனா

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இரண்டாவது பெரிய தலைவராக இருக்கும் அஜித் பவார் பா.ஜ.க.வில் சேரப்போவதாக கடந்த சில நாள்களாக செய்தி வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அஜித் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதோடு சரத் பவாரும், அஜித் பவாரும் சேர்ந்து இப்தார் விருந்திலும் கலந்து கொண்டனர். அப்படி இருந்தும் அஜித் பவார் எப்போது மனம் மாறுவார் என்பது மர்மமாகவே இருக்கிறது. சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் இருந்து அமலாக்கப்பிரிவு அஜித் பவார் பெயரை நீக்கி விட்டது. இது பாஜக-வில் அஜித் பவார் சேருவதற்கான முதல் அறிகுறியாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அஜித் பவாரை பாஜக-வில் சேர்த்தால் நாங்கள் இந்த அரசில் நீடிக்க மாட்டோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் நாங்கள் உத்தவ் தாக்கரேயிடமிருந்து விலகியதாக ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். எனவே அஜித்பவாரை பா.ஜ.க.வில் சேர்த்தால் நாங்கள் அரசில் இருக்கமாட்டோம் என்று ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``பா.ஜ.க.வுடன் தேசியவாத காங்கிரஸ் நேரடியாக கூட்டணி வைக்காது என்று நினைக்கிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சி துரோகம் செய்யக்கூடிய கட்சி என்பது எங்களது கட்சியின் நிலைப்பாடு. எனவே ஆட்சி அதிகாரத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பங்கிட்டுக்கொள்ள மாட்டோம். தேசியவாத காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க கூட்டணியில் சேர்த்தால் அதனை மகாராஷ்டிரா ஏற்றுக்கொள்ளாது.

அஜித் பவார்

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் நாங்களும் அரசிலிருந்து வெளியேறிவிடுவோம். அவர்களை பிடிக்காததால் தான் நாங்கள் அங்கிருந்து வெளியில் வந்தோம். அஜித் பவாருக்கு அவரது கட்சியில் சுதந்திரம் இல்லை. எனவே அவர் கட்சியிலிருந்து வெளியேறினால் நாங்கள் வரவேற்போம். அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் வந்து பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அரசில் இருக்கமாட்டோம். அஜித்பவார் மகன் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அவர் அதிருப்தியில் இருக்கிறார். அஜித் பவார் பெரிய தலைவர். அவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை எளிதில் சொல்ல மாட்டார்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/we-wont-be-in-government-if-ajit-pawar-is-included-in-bjp-shiv-sena

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக