Ad

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

தாய்லாந்து: முன்னாள் காதலன் உட்பட 12 பேரை சயனைடு கொடுத்துக் கொலைசெய்த கர்ப்பிணி? - அதிர்ச்சி பின்னணி

தாய்லாந்து, பாங்காங்கைச் சேர்ந்தவர் சரரத் ரங்சிவுதபோர்ன் (Sararat Rangsiwuthaporn) (32). இவர் தன்னுடைய தோழி சிரிபோர்ன் கான்வோங்குடன் (Siriporn Khanwong), கடந்த கடந்த 14-ம் தேதி ரட்சபுரி மாகாணத்தில் இருக்கும் புத்த விகாருக்கு சென்றிருக்கிறார். அப்போது ஆற்றங் கரையில் சடங்கை முடித்துவிட்டு திரும்பிய போது, சிரிபோர்ன் கான்வோங்க் மயங்கி விழுந்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், பிரேத பரிசோதனையில், அவரின் உடலில் சயனைடு இருப்பதைக் கண்டறிந்து, இதய செயலிழப்புதான் மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், மரணமடைந்தவரின் தொலைப்பேசி, பணம், பைகள் ஆகியவற்றையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருடன் வந்த பெண் குறித்து விசாரித்தபோது, அந்தப் பெண் சரரத் ரங்சிவுதபோர்ன் என்பது தெரியவந்தது. இதனால் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிரிபோர்ன் கான்வாங் என்ற பெண்ணை கொலைசெய்தது, சரரத் ரங்சிவுதபோர்ன் என்பது தெரிந்தது.

இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், "குற்றம்சாட்டப்பட்ட பெண், டிசம்பர் 2020 - ஏப்ரல் 2023-க்கு  இடையில் அந்தப் பெண்னின் முன்னாள் காதலன் உட்பட 12 பேரை இதே முறையில் கொன்றதாகத் தெரிகிறது. இதே முறையில் தான் மற்ற கொலைகளும் நடந்திருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நகைகள், பணம் ஆகியவைகள் காணாமல் போனதாகப் புகார் அளித்திருக்கின்றனர். கொலைக்கான நோக்கம் பணம்தான் என்று புலனாய்வாளர்கள் கருதுகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

பெண்

ஆனால், சரரத் ரங்சிவுதபோர்னின்  வழக்கறிஞர்,"சரரத் ரங்சிவுதாபோர்ன் கர்ப்பமாக இருக்கிறார். காவல்துறையினர் இவரின் மீது சந்தேகப்படுவது சரியல்ல. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் வேறு ஏதேனும் கொலை செய்திருக்கிறார் என காவல்துறை நிரூபித்தால், இந்தக் குற்றத்தை அதோடு பொருத்திப் பார்க்க முடியும். எனவே, சரரத் ரங்சிவுதாபோர்ன் எந்த குற்றமும் செய்யவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்குப் பதிலளித்த காவல்துறை,"இதற்கு முன்னர் நடந்த இறப்புகள் குறித்து எந்த வழக்கும் பதிவுசெய்யப்படாததால், அது தொடர்பான எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அதனால்,  முந்தைய மரணங்களிலிருந்து ஆதாரங்களை மீட்டெடுப்பது சவாலானது. மேலும், இதற்கு முன்னர் இறந்தவர்களின் குடும்பத்தினர், உயிரிழந்தவர்கள் இயற்கையாக இறந்ததாகவே கருதுகின்றனர்" என விளக்கமளித்திருக்கின்றனர். அந்தப் பெண்ணை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/thailand-woman-accused-of-murdering-12-friends-by-poisoning-them-with-cyanide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக