Ad

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

Doctor Vikatan: ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்குமா பப்பாளிப்பழம்?

Doctor Vikatan: பப்பாளிப்பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகுமா? எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

-Subra Mani, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காது. 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' என்ற விஷயம் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது பழமோ, காய்கறியோ, வேறு எந்த உணவோ.... எதைச் சாப்பிட்டாலும் அடுத்த சில மணி நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்படி அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசெமிக் இண்டெக்ஸ்.

பப்பாளிப்பழத்தில் இந்த கிளைசெமிக் இண்டெக்ஸின் அளவு குறைவுதான். அதனால் 100 முதல் 120 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பது உங்கள் உணவுப்பழக்கத்தைப் பொறுத்தது.

காலை உணவுக்கு இட்லியோ, தோசையோ, உப்புமாவோ எடுத்துக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்துடன் பப்பாளிப்பழம் சாப்பிடுவதாக இருந்தால், ஏற்கெனவே நீங்கள் சாப்பிட்ட காலை உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இருக்கும். பப்பாளியும் சாப்பிடுவதால் கிளைசெமிக் லோடு அதிகரிக்கும்.

ரத்த அழுத்தம்

எப்போதுமே பழங்களை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். இந்த இடைவேளைகளில் ஏற்படும் பசியைப் போக்கும்படியும் இருக்கும். பழங்களில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் அதிகம் ஏறாது. எனவே அந்த நேரமே பப்பாளி உள்பட அனைத்துப் பழங்களையும் சாப்பிட உகந்தது. நேரத்தையும் அளவையும் கணக்கில் வைத்துக்கொண்டு சாப்பிடலாம், தவறில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-papaya-increase-blood-sugar-levels

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக