தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 'நான் ஒரு விவசாய பின்னணியில் இருந்து வந்தவன். இப்பதவி போய்விட்டால், மீண்டும் எனது சொந்த ஊருக்கு சென்று ஆடு மாடுகளை மேய்ப்பேன்' என்று தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் தி.மு.க-வினர் சர்ச்சையை கிளப்பினர்.
இதையடுத்து அதற்கு, " நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரஃபேல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். இந்த வாட்சோட பெயரே, ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன். ரஃபேல் விமானத்தில் என்னவெல்லாம் பாகங்கள் இருக்கிறதோ, நான் கட்டியிருக்கும் வாட்ச்சிலும் இருக்கிறது. நான் ஒரு பெரிய தேசியவாதி. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கல, அதனால், அந்த ரஃபேல் விமானத்துக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வாட்சை கட்டியிருக்கிறேன். அந்த 500 வாட்ச் செய்யப்பட்டதில் 149-வது வாட்ச் என்னுடையது." என்று விளக்கமளித்தார் அண்ணாமலை.
இதையடுத்து, வாட்ச்க்கான பில்லை கேட்டு தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப, 'ஏப்ரல் 14-ம் தேதி பில்லை வெளியிடுவேன்' என உறுதியாக கூறினார் அண்ணாமலை. அதன்படி, கடந்த 14-ம் தேதி வெளியிட்ட வாட்ச் பில்லும் பல சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது.
அதாவது, வாட்ச் சர்ச்சை எழுந்தபோது, அது 149-வது வாட்ச் என குறிப்பிட்டிருந்தார் அண்ணாமலை. ஆனால், தற்போது வெளியிட்ட பில்லில் 147 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி 147-வது வாட்ச்க்கான பில்லும் சேரலாதன் என்பவரின் பெயரில் பதிவானதாக அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். அதன்படி, 21/03/2021-ல் Zimson நிறுவனத்தில் இருந்து ரபேல் வாட்ச் 4,50,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. அந்த வாட்சை மூன்றே மாதங்களில், அதாவது 27/05/2021-ல் 3,00,000 ரூபாய்க்கு குறைத்து வாங்கியதாக அண்ணாமலை பில் கொடுத்து இருக்கிறார்.
அதுவும், சேரலாதன் வாங்கிய வாட்ச் BRO394CBL147 என்ற சீரியல் நம்பர், அண்ணாமலையின் பில்லில் BRO394DAR147 என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, அண்ணாமலை வாட்ச் வாங்கியதாக குறிப்பிடப்படும் நாளான 27/05/2021-ல் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்பது அவரது, வங்கி குறிப்பில் இடம்பெறவில்லை.
சேரலாதன் வாங்கிய வாட்ச், Zimson நிறுவனத்தில் வாங்கியதாக பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ரஃபேல் வாட்ச் விற்க zimson நிறுவனத்துக்கு உரிமம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதன்படி, இந்த வாட்ச் யார் முதலில் வாங்கியது, எங்கு வாங்கியது, எப்போது வாங்கியது என்று இன்னும் தெரியவில்லை. அடுத்த செய்தியாளர் சந்திப்பில் இதற்கான பதிலை அண்ணாமலை தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalais-watch-controversy-still-unsolved
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக