கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழ்தாய் வாழ்த்து பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்களும், தமிழ் பற்றாளர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 29.04.2023 அன்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை - முண்டியம்பாக்கத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காத்திருப்போர் அறை மற்றும் கழிவறைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று தமிழக முதலமைச்சர் சொல்லியிருப்பதற்கு ஏற்ப, இந்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கல்வியும் இருக்கிறது... மருத்துவமும் இருக்கிறது. இங்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் படி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து காத்திருப்போர் அறை மற்றும் கழிவறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதை நான் இன்று திறந்து வைத்திருக்கிறேன். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இங்கு வந்து சென்றதிலிருந்து, பல்வேறு வகையிலே இந்த வளாகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும், வளர்ச்சியடைய பல்வேறு பணிகள் செய்யப்படும்.
இது மிகச்சிறந்த மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மிக விரைவிலேயே செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை குறித்த வினா அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், "தமிழ்தாய் வாழ்த்தை முன்பெல்லாம் மைக்செட்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள். 'அப்படி செய்யக்கூடாது' என்றும், நேரடியாக அனைவரும் பாட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். ஆகவே, தமிழ்தாய் வாழ்த்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.
ஆனால், தமிழகத்திற்கு வந்தால்... 'நான் வேற மாதிரி' என பேசிக் கொண்டிருக்கின்ற ஒருவர்... இப்போது கர்நாடகத்தில் என்ன பண்ணுகிறார்..? நமக்கு கர்நாடக மொழி எதிர்ப்பானது அல்ல. அதுவும் திராவிட மொழிகளில் ஒன்றுதான், சகோதர மொழிதான். அதன் மீது நமக்கு வெறுப்பில்லை. அங்கு நடைபெற்ற கூட்டம், தமிழர்களையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற கூட்டம். ஆகவே அங்கு தமிழ்தாய் வாழ்த்து பாடுகிறார்கள். அதனை அண்ணாமலை வரவேற்றிருக்க வேண்டும். அங்கே இருக்கிற பாஜக தலைவர்... யாரு அவரு... ஈஸ்வரைய்யா. அவரும் அதனை வரவேற்று இருக்கலாம். ஆனால், இன்று தமிழ்த்தாய் வாழ்த்தையே இழிவு படுத்துகின்ற வகையில் செய்துள்ளனர்.
வாழ்த்து பாடுகின்ற போது நடுவில் எழுந்து போவது தவறான ஒன்று. அதையே முன்னாள் அமைச்சராக இருந்தவர் செய்திருக்கிறார் என்று சொன்னால், அது கண்டனத்திற்கு உரியது. இதனை தமிழக முதல்வர் மட்டுமின்றி, தமிழ் பற்றுள்ள தமிழகத்தின் தலைவர்கள் பலரும் அதனை எதிர்த்து கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். வைரமுத்து மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆகவே, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது... 'தமிழ், தமிழுக்காக..!' என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற அண்ணாமலை, பாஜக புரிந்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு தமிழ் மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்பது இதன் மூலமே தெரிந்துவிட்டது. தமிழ் மட்டுமல்ல எல்லா மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலினுடைய நிதர்சனமான நடவடிக்கை. எந்த மொழிக்கும் நாம் விரோதிகள் அல்ல. ஆனால் எந்த மொழியையும் திணிக்க கூடாது. எல்லா மொழிகளும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம். அந்த அடிப்படையில் தான், அதை கண்டித்து இருக்கிறோம். அண்ணாமலை திருந்திக் கொள்வார் என நினைக்கிறேன். அண்ணாமலை சொல்கிறார்... ஏதோ மைக்கில் கோளாறு வந்து, இவரு அப்படியே திருத்தப் போனாராம். எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆகவே, மக்களுக்கு எல்லாம் புரியும், தெரியும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ponmudi-spoke-angrily-about-the-tamil-anthem-song-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக