நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்தபோது, முதல்வர் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும், அவருக்கும் மோதல் போக்குகள் அரங்கேறின. பின்னர் ஜக்தீப் தன்கர், நாட்டின் குடியரசு துணைத் தலைவரானதிலிருந்து, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்புக்கு எதிராகப் பேசிவருகிறார்.
இந்த நிலையில், நாடாளுமன்றம் மட்டுமே சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கிறது. நாடாளுமன்றம் மட்டுமே சட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தகுதியுடையது என்று ஜக்தீப் தன்கர் கூறியிருக்கிறார்.
இன்று நடைபெற்ற 16-வது சிவில் சர்வீசஸ் தின நிகழ்ச்சியில் பேசிய ஜக்தீப் தன்கர், ``நம் ஜனநாயகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, அதன் சிறகுகளான சட்டமன்றம், நீதித்துறை, நிறைவேற்றுத்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் அனைவரும் இதை உறுதிசெய்ய வேண்டும்.
நாடாளுமன்றம் மட்டுமே சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கிறது. நாடாளுமன்றம் மட்டுமே சட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தகுதியுடையது. சட்டம் என்பது நாடாளுமன்றத்தின் பிரத்யேகப் பாதுகாப்பு. இதுவே ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்தின் மிகவும் உண்மையான பிரதிபலிப்பாகும். நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டமன்றமோ அல்லது நீதித்துறையோ அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியாது" என்றார்.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸையும், முன்னாள் எம்.பி ராகுல் காந்தியையும் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகத் தாக்கிப் பேசிய ஜக்தீப் தன்கர், ``நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் நம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களை இழிவுபடுத்தவும், களங்கப்படுத்தவும் தவறான வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆரோக்கியமற்ற நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டும். மக்களிடம் நாம் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டும். நீங்கள் உயர்ந்தவராக இருங்கள். ஆனால், சட்டம் எப்போதும் உங்களுக்கு மேலானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" என்று கூறினார்.
source https://www.vikatan.com/government-and-politics/governance/parliament-alone-is-incharge-of-legislation-and-competent-to-enforce-it-says-jagdeep-dhankhar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக