Ad

புதன், 19 ஏப்ரல், 2023

`ஆளுநரோ, ஆண்டவனோ... தப்புதான்; ஓபிஎஸ் நல்ல அமைச்சர்’ - ஆளுநர் செலவினங்கள் விவாதத்தில் நடந்தது என்ன?!

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செலவினங்கள் தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ``ஆளுநர் செலவினங்கள் குறித்து ஏற்கனவே ஐந்து உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு ஆளுநர்கள் கூட்டம் நடைப்பெற்றது. அதன் விளைவாக ஒரு குழு நியமிக்கப்பட்டு ஆளுநர்  செயலகத்தின் செயல்பாடுகளை சிறப்புற நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆளுநர், மாநில அரசிடம் கேட்கப்படும் நிதி தரப்பட வேண்டும் என்பது தொடர்பன கடிதம் நிதித்துறை செயலருக்கு அனுப்பபட்டது. அப்போது அவர் கோப்பு ஒன்றை உருவாக்குகிறார். அந்தக் கோப்பு கடந்த ஆட்சியில், அமைச்சர்களின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

இதில் எந்த அமைச்சர்களுக்கும் பங்கு இல்லை என்பதுதான் உண்மை. இதில் அரசின் கொள்கை முடிவு என எதையும் கூறி விட முடியாது. 2021-ம் ஆண்டு புதிய ஆளுநர்ஆர்.என். ரவி பொறுப்பேற்ற பின், 17 கோப்புகளுக்கு கூடுதல் நிதி தமிழக அரசு சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் கோப்பு ஐந்து ’பென்ஸ்’ உட்பட ஐந்து வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.2 கோடி 10 லட்சம், சுதந்திர தின விழாவை நடத்துவதற்கு ரூ.25 லட்சம், சுற்றுப்பயணத்துக்கு ரூ.15 லட்சம், அமைச்சர் பதவி ஏற்பு விழாவிற்கு ரூ.10 லட்சம், கிறிஸ்துமஸ் விழாவிற்கு ரூ.25 லட்சம், குடியரசு தின விழாவுக்கு ரூ.25 லட்சம், மேசை நாற்காலிகள் வாங்குவதற்கு...  இப்படியாக அவர்கள்  கேட்கப்பட்ட அனைத்து நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர்

எந்த வகையிலும் அரசின் மீது ஆளுநர் குறை கூறும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எந்த மாநிலத்திலும் ஆளுநருக்கான செலவினங்கள் நிதி அதிகரிக்கப்படவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் லட்சங்கள் கணக்கில் மட்டுமே செலவின தொகைகள் இருந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் அப்படியில்லை.

அது அவர்களின் உரிமையாக இருக்கலாம். ஆனால், நமது கடமை நிதித் துறை விதியை (Finance Code) பின்பற்றுவது. அதன் அடிப்படையில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1. அதில் எந்த துறையாக இருந்தாலும், செலவு செய்யப்படாத தொகை திரும்ப பெறப்பட மாட்டாது. எனவே ஐந்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆளுநர்  செலவினங்களை இந்த ஆண்டு மூன்று கோடியாக குறைத்து இருக்கிறோம். காரணம், கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதி அவர்கள் செலவு செய்யாமல் இருக்கின்றனர்.

2. ஆளுநர்  நிதிகள் கணக்கில் வராமல் இருப்பதை, மத்திய அரசு தணிக்கை செய்வதற்கு முன்பாக, மாநில அரசு அதை தணிக்கை செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் - பி.டி.ஆர்

3.நிதி மேலாண்மையை விதிமுறைக்கு உட்பட்டு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சர் கையெழுத்திடுவார். அது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மன்னராட்சி உள்ள நாடுகளில் மன்னருக்கு ஒதுக்கப்படும் நிதியை அவர் எப்படி வேண்டுமானாலும் செலவிடலாம். ஆனால், நம் நாடு ஜனநாயகத்துக்கு உட்பட்டு மக்களாட்சி கொண்ட நாடு. ஜனநாயக நாட்டில் விதிமுறை என்ன சொல்கிறதோ அதற்கு உட்பட்டு தான் செலவுகள் செய்யப்பட வேண்டும். இதை உறுதி செய்வது நிதி துறையின் கடமை என்பதால் நாங்கள் எங்கள் கடமையை தெளிவாக செய்கிறோம் “ என்றார்.

இதன்பின் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஆளுநர் செலவினங்களில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. அது ஆளுநராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தப்பு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும் . இல்லையெனில், அது சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

துரைமுருகன்

`ஓபிஎஸ் நல்ல நிதி அமைச்சர்’

மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செந்தில்குமார், வருவாய் பற்றாக்குறை இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த நிதித்துறை அமைச்சர், "பல திட்டங்களைக் கொண்டுவந்து வருவாய் அதிகரித்தது திமுக அரசு தான்” என்றார். அதற்கு பதிலளித்த செந்தில்குமார், ``அதற்கான அனைத்து செயல்திட்டங்களையும் கொண்டுவந்தது அதிமுக” என்றார்.

இதற்கு அவைத்தலைவரோ, “நீங்கள் கொண்டுவந்தது என்பதை நிரூபிக்காமல் விட்டுவிட்டால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்”என்றார். அதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், அதிமுக ஆட்சியில், அதிகமான மூலதன தொகையை கட்டமைப்புக்காக செலவு செய்திருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து அதிமுக உறுப்பினர் செந்தில்குமார், 2003-ல் அதிமுக ஆட்சியில் உற்பத்தி முதலீடு சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். அதற்கு நிதி அமைச்சர், ``உங்கள் ஆட்சியில்  நிதித்துறை  அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கொளுத்தி போட்டார்.

ஒ.பன்னீர்செல்வம்

அதற்குஎதிர்க்கட்சி கொறடா வேலுமணியோ, “அது அம்மாவின் கீழ் நடந்த ஆட்சி. அமைச்சருக்கு மட்டும் பங்கு இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது, நீங்கள் (பழனிவேல்தியாகராஜன்) நிதித்துறை அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களின் செயல்பாடு தனிப்பட்ட ஒருவரின் செயல்பாடு என ஒப்புகொள்வீர்களா?.. முதலமைச்சரின் கண்காணிப்பின் கீழ்செயல்படுவதாக நடப்பதில்லையா?” என்று பதில் கேள்வி எழுப்பினார்



source https://www.vikatan.com/government-and-politics/policy/tamilnadu-assembly-highlights-the-government-code-is-the-same-for-all-says-minister

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக