சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் தோனி சில முக்கியமான விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார். குறிப்பாக, தோனி தனது ஓய்வு குறித்தும் சூசகமாகக் கூறியிருக்கிறார்.
வழக்கமான உரையாடல்களைக் கூட தனது புன்னகைமிக்க கேள்விகளால் சுவாரஸ்யமாக மாற்றிவிடும் ஹர்ஷா போக்லேதான் தோனியிடம் கேள்விகளை கேட்டார். அதனாலயே என்னவோ தோனி கொஞ்சம் கூடுதல் ஜாலியாகவே பதிலளித்தார். 'மேட்ச் முடிஞ்சதுக்கு அப்புறமும் உங்கள பார்க்குறதுக்குதான் இவ்ளோ கூட்டமும் வெயிட் பண்றாங்க' என தோனியை வரவேற்றார் ஹர்ஷா. 'எனக்கெல்லாம் பெஸ்ட் கேட்ச்சுன்னு அவார்ட் கொடுக்கமாட்டீங்கள்ல?' என செல்லமாக கோபித்துக் கொண்டே பேசத்தொடங்கிய தோனி, 'இரண்டு வருடங்களுக்குப் பிறகு போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் ரசிகர்கள் முன்பு இப்படி நிற்பதில் பெரும் மகிழ்ச்சி.
என்னுடைய கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் ஆடுகிறேனோ அவ்வளவு காலமும் மகிழ்ச்சியாக அனுபவித்து ஆடுவதே முக்கியம். எனக்கு பேட்டிங் ஆட பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அதைப் பற்றி புகார் கூற எதுவும் இல்லை.
மற்ற வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடுகிறார்கள். இந்த ரசிகர் கூட்டம் எனக்கும் அணிக்கும் பெரும் அன்பையும் அரவணைப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.' என நெகிழ்ந்தார்.
'ஸ்பின்னர்கள் நல்ல லெந்த்தில் பந்துவீசியிருந்தார்கள். வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பாக பதிரனா அருமையாக வீசியிருந்தார்.' என பந்துவீச்சாளர்களுக்கும் க்ரெடிட் கொடுத்தார்.
தோனியின் வயதைப் பற்றி ஹர்ஷா ஒரு கேள்வியை வீச அதற்கு தோனி
'ஆம். வயதாகிவிட்டதுதான். அதை ஒத்துக்கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை. வயது ஏற ஏறத்தான் அனுபவமும் ஏறும்' என பன்ச்சாக பேசினார் தோனி.
இறுதியில் முடித்துவிட்டு செல்லும்போதும் 'எனக்கெல்லாம் அவார்ட் கொடுக்கமாட்டீங்கள்ல' என கலாய்த்தபடியே தோனி விடைபெற்றார்.
'இனிமே எல்லா Post Match Presentation க்கும் நீங்களே வாங்க ஹர்ஷா சார்...' என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாக இருந்தது.
source https://sports.vikatan.com/cricket/cskvsrh-dhoni-post-match-presentation-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக