அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்து, சட்டமன்றத்தில் சட்டமாக்கியவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் என்றும் சமூகநீதி பரப்பப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒரு சமூக நீதி மாநாட்டினை இந்திய அளவில் நடத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆகவே, அம்பேத்கருக்கு விழா எடுக்கின்றோம் என்று சொன்னால் அது கொள்கை ரீதியான விழா. இது ஏதோ அரசியலுக்காக அல்ல. சமூதாய சீர்திருத்தத்திற்காக, சமூக நோக்கத்தோடு பாடுபட்ட அம்பேத்கர், ஆண், பெண் வேறுபாடு, சாதிய வேறுபாடுகள் மறந்து ஒன்றாக வாழ வேண்டும் எனவும் பாடுபட்டார். அதனால் தான் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழக அளவிலே இது இளைஞர்களுக்கு சென்றடையும், வரலாற்றை மறந்துவிடக்கூடாது. இன்று மத்திய அரசு என்னென்ன செய்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஒரு காலத்திலே காங்கிரஸ் தலைவராக இருந்தவர், இஸ்லாமிய சகோதரர் என்பதற்காக, அவரை பற்றிய வரலாற்றையே பாட குறிப்பில் இருந்து எடுத்துவிட்டது இன்றைய மத்திய அரசு. ஆகவே, பாஜக-வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள் என்றால் அது ஒரு நாடாகம் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு உண்மையிலேயே அம்பேத்கரின் கொள்கை மீது பிடிப்பு இருக்குமேயானால்... சாதி, ஏழ்மை அடிப்படையிலே பின்பட்டு இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடுக்க வேண்டுமே தவிர, பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்ததை தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும். அதையெல்லாம் திருத்திக் கொண்டால் தான் உண்மையிலேயே அவர்கள் அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்று பொருள்.
'இந்தி மொழி பிற்பட்டது, தமிழ் மொழி தான் கலாசாரத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த மொழி' என்றெல்லாம் ஆளுநர் அறிவித்திருக்கிறார். இப்போதுதான் தமிழினுடைய வரலாற்றை அவர் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கிறார் என்பது நமக்கு புரிகிறது. ஆகவே, முழுமையாக நமது தமிழினுடைய வரலாற்றையும், தமிழ் இனத்தினுடைய வரலாற்றையும் அவர் தெரிந்து கொண்டு... வரும் காலங்களிலே நமது முதல்வருடைய குரலுக்கு உண்மையிலேயே அவர் செவி சாய்த்து நடப்பார் என நம்புகிறோம். 'தமிழ் மொழி மீது இந்தி திணிக்கப்படாது' என்று அவர் சொல்லியிருப்பது நமது தமிழக முதலமைச்சரின் கொள்கைக்கு கிடைத்திருக்கின்ற வெற்றி என்றுதான் கருதுகிறேன். அந்த வகையிலே அவருடைய கருத்தை நான் வரவேற்கிறேன்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-ponmudi-spoke-about-the-central-government-in-villupuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக