Doctor Vikatan: எனக்கு வயது 51. கடந்த சில வருடங்களாக உணவு உண்டதும் உணவுக்குழாயில் எரிச்சலை உணர்கிறேன். பசி உணர்வே இல்லாமல் இருக்கிறது. பசி இல்லாததும், உணவுக்குழாய் எரிச்சலும் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா.... இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா.
உணவுக்குழாயில் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள எரிச்சலின் பின்னணி பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். நமக்கு இரைப்பையும் உணவுக்குழாயும் அருகருகே இருக்கும். இரைப்பையில் அமிலம் இருக்கும். ஆனால் உணவுக்குழாயில் அமிலம் இருக்காது. உணவுக்குழாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் ஒரு வால்வு இருக்கும். உணவானது உள்ளே போகும்போது அது எதிர்த்திசையில் வாயை நோக்கி வராது. ஒருவர் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு, தலைகீழாகத் தொங்கினால்கூட சாப்பிட்ட உணவானது வெளியே வராது. அதற்கு அந்த வால்வுதான் காரணம்.
சிலருக்கு இந்த வால்வு பலவீனமாக இருக்கலாம். அதிக உடல் எடை கொண்டவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், ஒன்றுக்கும் மேலான பிரசவங்களை எதிர்கொண்டவர்கள் போன்றோருக்கு இந்த வால்வு சற்று தளர்ந்து போயிருக்கலாம். இவர்களுக்கெல்லாம் உணவானது எதிர்த்திசையிலும் வரலாம். அதனால் இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய்க்கு வருவதால் எரிச்சல் ஏற்படலாம். இது மிகவும் பரவலான பிரச்னைதான்.
வாழ்வியல் மாற்றங்களோடு, சில மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து மீளலாம். இதற்கு பொதுவாக அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. ஒருவேளை அரிதாக சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமானால் மட்டுமே அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
தென்னிந்தியாவில் இப்போது உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பை அதிகம் பார்க்கிறோம். இவர்களுக்கு உணவை விழுங்குவதில் சிரமம் இருக்கும். இப்படிப்பட்ட அறிகுறியோடு வருபவருக்கு எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து பார்த்து பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிவோம். புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் ரேடியோதெரபி, கீமோதெரபி போன்றவை பரிந்துரைக்கப்படும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்யப்படும்.
50 வயதுக்குப் பிறகு யாராவது பசியே இல்லாமல் உணர்ந்தாலோ, எடை குறைவதாக உணர்ந்தாலோ அதை அலட்சியப்படுத்தவே கூடாது. ஏனென்றால் அவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். வயிற்றில் ஏற்படும் புற்றுநோயானது பெரிதாக அறிகுறிகளைக் காட்டாது. இந்த அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக எண்டோஸ்கோப்பி டெஸ்ட் செய்து புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என உறுதிசெய்வார்கள்.
ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் இதை குணப்படுத்துவதும் எளிது. இரைப்பை என்பது 2 லிட்டர் பை போன்றது.
பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இரைப்பையில் பாதியை மட்டும் நீக்க வேண்டுமா, முழுவதும் நீக்க வேண்டுமா என்று முடிவு செய்யப்படும். இரைப்பையை நீக்கிவிட்டால் உணவு உண்ண முடியாமல் போய்விடுமோ என்ற பயம் தேவையில்லை. அதற்கு எந்த பாதிப்பும் வராதபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். எனவே நீங்கள் உங்கள் பிரச்னைகளுக்கான காரணத்தைக் கண்டறிய முதலில் மருத்துவரை அணுகுங்கள். புற்றுநோயாக இருக்குமோ என நீங்களாக பயந்துகொண்டிருக்கவும் தேவையில்லை... அப்படியெல்லாம் இருக்காது என்ற அலட்சியமும் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-esophageal-irritation-symptoms-of-cancer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக