Ad

திங்கள், 24 ஏப்ரல், 2023

நமக்குள்ளே... பிள்ளைக்கறி கேட்கும் சாதி... சமூக வியாதி!

கேட்கவே மனம் பதறும், அதே மனம் நம்பவும் கடினப்படும் சம்பவம் அது. கிருஷ்ண கிரி மாவட்டம் அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, பட்டியலினப் பெண்ணை காதல் திருமணம் செய்த தன் மகனை அரிவாளால் வெட்டி ஆணவக்கொலை செய்திருக் கிறார். அதை தடுக்க வந்த தன் அம்மாவையும் கொலை செய்ததுடன், மருமகளை கொல்ல முயற்சி செய்திருக்கிறார். மூவரும் இறந்துவிட்டதாக நினைத்த தண்டபாணி தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிர் பிழைத்துவிட, இப்போது தண்டபாணியும், அந்தப் பெண்ணும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

சாதிவெறி என்ன செய்யும், என்னவெல்லாம் செய்யத் தூண்டும் என்று நினைத்துப் பார்க்கவே பதற்றமாக இருக்கிறது. நம் இந்திய சமூகத்தில், குடும்ப அமைப்பில், பிள்ளை பெற்று வளர்த்து ஆளாக்குவதே ஆகப்பெரும் பொறுப்பாகப் போதிக்கப்பட்டுள்ளது. அதுவே வாழ்க்கைக்கான அர்த்தம் என நிறுவப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பெரும்பாலா னோரின் வாழ்க்கை அச்சு, பிள்ளைகளே. தங்கள் அன்பு, பிரார்த்தனை, நேரம், பொறுப்பு, ஈட்டும் பொருள் என சகலமும் பிள்ளைகளுக்காகவே என்று வாழ்பவர்கள் அவர்கள். தையல் தொழிலாளியான தண்டபாணியும், அப்படி ஒரு தகப்பனாகத்தான் தன் மகனையும், இரண்டு மகள்களையும் தன்னைக் கரைத்து வளர்த்தெடுத்திருக்கிறார். ஆனால், சாதிக்காக தன் மகனையே திட்டமிட்டு, கொடூரமாகக் கொலை செய்ய அந்த அப்பா, சாதிவெறியின் கொடூரம் எத்தகையது என்று திடுக்கிட வைத்திருக்கிறார்.

சட்டங்கள், தண்டனைகள், விழிப்புணர்வு, சமூக மனமாற்றம் என சாதிக்கு எதிரான செயல்பாடுகள் நம் சமூகத்தில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இத்தனைக்குப் பின்னும் அதன் இருப்பு அசைக்க முடியாததாக இருக்கிறது எனில், அந்தளவுக்கு அது மக்கள் மனங்களில் விஷ வேராக ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. எப்படி? சுயசாதிப் பெருமையில் வெறியாட்டம் போடுபவர்கள், `ஊரு என்ன நினைக்கும், உறவு என்ன நினைக்கும்’ என்ற சமூக அழுத்தத்தால் தன் சாதி அடையாளம் `களங்கப்படாமல்’ பார்த்துக்கொள்பவர்கள், இவர்களைத் தூண்டிவிடும் சாதிய சங்கங்கள், அந்தச் சங்கங்களின் மூலம் ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள் என... இந்தச் சங்கிலி சாதி வெறியை வளர்த்துவிட்டுக்கொண்டே இருக்கிறது. `ஊருக்குள்ள எல்லாரும் ஒரு மாதிரி பேசுனாங்க, அதான் கோபத்துல கொன்னுட்டேன்’ என்ற தண்டபாணியின் வாக்கு மூலமும் அதைத்தான் சொல்கிறது.

2021-ம் ஆண்டு ‘எவிடன்ஸ்’ அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயி லாகப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் 2016 - 2020 காலகட்டத்தில் நடந்த ஆணவக்கொலைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொல்லப்பட்டதாகவும், மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் 5, 6 ஆணவக்கொலைகள் நடப்பதாகவும், தூத்துக்குடி, மதுரை, கள்ளக்குறிச்சி அதில் முதல் மூன்று இடங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்திய அளவிலும் ஆணவக்கொலைகள் அதிகரித்துவருவதை சொல்லும் ஆய்வுகள், ஆனால் அதற்கான எந்த சட்டத் தீர்வு, சமூகத் தீர்வும் அரசிடம் இல்லை என்றும் வேதனையோடு குறிப்பிடுகின்றன. ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் கோரிக்கை, கோரிக்கையாகவே இன்னும் இருக்கிறது.

சாதிய குரூர மனங்களை மாற்றும் சமூக சிகிச்சையில், நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பங்களிப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



source https://www.vikatan.com/crime/caste/namakkulle-editorial-page-may-09-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக