Ad

சனி, 29 ஏப்ரல், 2023

"தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்றால், கரூரில் தனிச் சட்டம்!"- செந்தில் பாலாஜியைச் சாடும் விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட்டில், குளித்தலை நகர அ.தி.மு.க சார்பில் பொதுமக்களின் கோடை வெப்பத்தைத் தணிக்கும்பொருட்டு, தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் நகர அ.தி.மு.க ஐடி விங் துணைத் தலைவர் கார்த்திக்மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தி.மு.க அரசு, தமிழக முதல்வர் குறித்தும், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது விருந்து அளிப்பது குறித்த தி.மு.க அரசின் அறிவிப்பு குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பரப்பியதாகக் கூறி, கரூர் நகர காவல்துறையினர் அவரைக் கைதுசெய்திருக்கின்றனர். அதோடு, அவரைக் கைதுசெய்து 6 மணி நேரம் கடந்தும், அவர் எங்கிருக்கிறார் என தகவல் தெரிவிக்க மறுத்த காவல்துறையினர், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர்மீது பொய்யான வழக்கு தொடுத்ததன் காரணமாக அவருக்கு உடனடியாக நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

தமிழக அரசு மணல் கடத்தல், கொள்ளையைத் தடுக்கும் என்றால், வி.ஏ.ஓ படுகொலை குறித்தும், சமூக வலைதளங்களில் செய்திகள், மீம்ஸ்கள் பரவியபோதும், அதை செய்த அனைவரையும் தமிழக அரசு கைதுசெய்யுமா... அதே போல், 'தமிழக முதல்வர் பதவி ஏற்றதும் மணல் வண்டியில் ஆற்றில் மணல் அள்ளலாம். அதைத் தடுக்கும் அதிகாரிகளை என்னிடம் கூறுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று ஒருமையில் பேசினார், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதுபோல்தான், தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்கமுயன்ற வி.ஏ.ஓ மணல் மாஃபியா கும்பலால் அவரது அலுவலகத்திலேயேவைத்து வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார். கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வினர், பொய்யான வழக்குகளில் காவல்துறையினர் மூலம் வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்யப்படுகின்றனர். மேலும், பொதுக்கூட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை அனுமதி அளிக்க விடாமல் தடுத்து வருகின்றன. தமிழகத்தில் அனைவருக்கும் ஒரு சட்டம் என்றால், கரூர் மாவட்டத்தில் ஒரு சட்டம் அமலில் இருக்கிறது. இந்த அரசு, அரசுப் பள்ளிகளில்கூட மது கடைகளை திறந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இங்கே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. அண்மையில் கரூர் மாநகராட்சியில் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்த மாநகராட்சி வார்டு உறுப்பினர்களே கோடை காலத்தில் பொதுமக்களுக்குத் தண்ணீர் வழங்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தி.மு.க அரசை எதிர்த்து, தி.மு.க-வினரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அரசுமீது அதிருப்தியடைந்த தி.மு.க கவுன்சிலர்களே தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். என்ன அடக்குமுறையை கரூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் நமக்கு எதிராகச் செய்தாலும், எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுரையின்படி, கரூர் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-former-minister-mr-vijayabaskar-slams-dmk-minister-senthil-balaji-in-karur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக