``12 மணி நேர வேலை மசோதாவை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன்” - முதல்வர் ஸ்டாலின்
தொழிலாளர் தினமான இன்று, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச பேரவை சார்பில் மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சிவப்பு நிற உடை அணிந்து வந்து மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை மசோதாவை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. விட்டுக் கொடுப்பதை என்றும் அவமானமாக நினைக்கவில்லை, அதனை பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர பணி சட்டத்தை திரும்ப பெற்ற பிறகும் அது குறித்து அவதூறான தகவல்களை பரப்புகின்றனர்” என்றார்.
நம்மில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்ட் மொபைல்போன்தான் பயன்படுத்துகிறோம். Internal strorage மிகுந்து விடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது கேலரியில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்து விடுவோம். அப்படி அழிக்கும்போது, தவறுதலாக நமக்கு வேண்டிய புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ அழித்து விட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது? விளக்கம் தருகிறார் சாஃப்ட்வேர் அனலிஸ்ட் ஆர்.சர்வேஷ்...
``இப்போதுள்ள மொபைலில், கூகுளின் Default Gallery App தான் பெரும்பாலும் உள்ளது. அதில் உங்களுடைய புகைப்படத்தையோ, வீடியோவையோ அழித்த பின்பு குறைந்தபட்சம் 30 நாள்களுக்கு ஒட்டுமொத்தமாக அழிக்காமல் Trash ஃபோல்டரில் இருக்கும்படியான அமைப்பு உள்ளது. உங்கள் கேலரியில் இருந்து அந்தப் புகைப்படமோ, வீடியோவோ அழிக்கப்பட்டிருக்குமே தவிர, Trash Folder-ல் அழிக்கப்பட்டு 30 நாள்களுக்கு அந்த டேட்டா அப்படியே இருக்கும்.
அழித்ததை திரும்ப எடுக்க வேண்டுமென்றால் Photo Gallery -ஐ திறந்து Library-ஐ தேர்வு செய்து அதனுள் `Trash' எனும் மெனுவினை தேர்வு செய்யுங்கள். அதில் நீங்கள் அழித்த புகைப்படங்கள்/வீடியோக்கள் இருக்கும். அவற்றுள் உங்களுக்குத் தேவையானவற்றை select செய்து Restore கொடுத்தால், திரும்ப கேலரிக்கே வந்து விடும்.
ஒருசில போன்களில் கேலரியைத் திறந்தந்துமே கீழே Recently deleted என்கிற தேர்வு இருக்கும். அதனுள் சென்று மேற்சொன்ன நடைமுறையின்படி தேவையானவற்றை மீள எடுத்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாகத் தேர்வு செய்து ஒரேயடியாக அழிக்கவும் செய்யலாம்” என்கிறார் சர்வேஷ்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழ்தாய் வாழ்த்து பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்களும், தமிழ் பற்றாளர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 29.04.2023 அன்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை - முண்டியம்பாக்கத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காத்திருப்போர் அறை மற்றும் கழிவறைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று தமிழக முதலமைச்சர் சொல்லியிருப்பதற்கு ஏற்ப, இந்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கல்வியும் இருக்கிறது... மருத்துவமும் இருக்கிறது. இங்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் படி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து காத்திருப்போர் அறை மற்றும் கழிவறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதை நான் இன்று திறந்து வைத்திருக்கிறேன். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இங்கு வந்து சென்றதிலிருந்து, பல்வேறு வகையிலே இந்த வளாகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும், வளர்ச்சியடைய பல்வேறு பணிகள் செய்யப்படும்.
இது மிகச்சிறந்த மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மிக விரைவிலேயே செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை குறித்த வினா அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், "தமிழ்தாய் வாழ்த்தை முன்பெல்லாம் மைக்செட்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள். 'அப்படி செய்யக்கூடாது' என்றும், நேரடியாக அனைவரும் பாட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். ஆகவே, தமிழ்தாய் வாழ்த்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.
ஆனால், தமிழகத்திற்கு வந்தால்... 'நான் வேற மாதிரி' என பேசிக் கொண்டிருக்கின்ற ஒருவர்... இப்போது கர்நாடகத்தில் என்ன பண்ணுகிறார்..? நமக்கு கர்நாடக மொழி எதிர்ப்பானது அல்ல. அதுவும் திராவிட மொழிகளில் ஒன்றுதான், சகோதர மொழிதான். அதன் மீது நமக்கு வெறுப்பில்லை. அங்கு நடைபெற்ற கூட்டம், தமிழர்களையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற கூட்டம். ஆகவே அங்கு தமிழ்தாய் வாழ்த்து பாடுகிறார்கள். அதனை அண்ணாமலை வரவேற்றிருக்க வேண்டும். அங்கே இருக்கிற பாஜக தலைவர்... யாரு அவரு... ஈஸ்வரைய்யா. அவரும் அதனை வரவேற்று இருக்கலாம். ஆனால், இன்று தமிழ்த்தாய் வாழ்த்தையே இழிவு படுத்துகின்ற வகையில் செய்துள்ளனர்.
வாழ்த்து பாடுகின்ற போது நடுவில் எழுந்து போவது தவறான ஒன்று. அதையே முன்னாள் அமைச்சராக இருந்தவர் செய்திருக்கிறார் என்று சொன்னால், அது கண்டனத்திற்கு உரியது. இதனை தமிழக முதல்வர் மட்டுமின்றி, தமிழ் பற்றுள்ள தமிழகத்தின் தலைவர்கள் பலரும் அதனை எதிர்த்து கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். வைரமுத்து மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆகவே, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது... 'தமிழ், தமிழுக்காக..!' என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற அண்ணாமலை, பாஜக புரிந்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு தமிழ் மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்பது இதன் மூலமே தெரிந்துவிட்டது. தமிழ் மட்டுமல்ல எல்லா மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலினுடைய நிதர்சனமான நடவடிக்கை. எந்த மொழிக்கும் நாம் விரோதிகள் அல்ல. ஆனால் எந்த மொழியையும் திணிக்க கூடாது. எல்லா மொழிகளும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம். அந்த அடிப்படையில் தான், அதை கண்டித்து இருக்கிறோம். அண்ணாமலை திருந்திக் கொள்வார் என நினைக்கிறேன். அண்ணாமலை சொல்கிறார்... ஏதோ மைக்கில் கோளாறு வந்து, இவரு அப்படியே திருத்தப் போனாராம். எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆகவே, மக்களுக்கு எல்லாம் புரியும், தெரியும்" என்றார்.
``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க கொண்டுவந்த 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்த தி.மு.க அரசு, இப்போது கொண்டுவருவது எதற்காக... கூட்டணியைப் பகைத்துக்கொள்ளவா?”
“கூட்டணியைப் பகைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மசோதாவை ஏன் நிறுத்தி வைக்கவேண்டும்... ஓர் அரசுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டியது, நிதியாதாரத்தைப் பெருக்க வேண்டியது என அரசுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அதே சமயம் மக்களை கவனிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த மசோதாவை கொண்டுவருவதற்கு முன்பு ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்திடம் ஆலோசித்திருந்தால்கூட, ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விஜயபாஸ்கரையும் உள்ளடக்கி குழு அமைத்தார்கள். அப்படியொரு ஜனநாயகமான நடவடிக்கையை இந்த விவகாரத்திலும் எடுத்திருந்திருக்கலாம்.”
“அண்ணாமலை வெளியிட்ட DMK files ஊழல் பட்டியல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?”
“அண்ணாமலை பொறுப்பேற்ற நாளிலிருந்து ஏதாவது ஒரு ஃபைல் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஒரு மாதம் கழித்து அவரே அது குறித்து திரும்பப் பேசமாட்டார். மைக்கேல்பட்டி மாணவி மரண விவகாரத்துக்கு மதமாற்றம்தான் காரணம் என்றார். ஆனால் என்ன ஆனது... முதல்வர் கடந்த ஆண்டில் துபாய்க்குச் சென்றது ரூ.5,000 கோடி சொந்தப் பணத்தை முதலீடு செய்ய என்றார். என்ன ஆனது... ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என பெருமைப் பேசிக்கொள்ளும் பா.ஜ.க மீதுதான் இப்போது ஆருத்ரா மோசடிப் புகார் வந்திருக்கிறது. ஆர்.கே.சுரேஷை ஏன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்கூட செய்யவில்லை. அமர்பிரசாத் ரெட்டிமீது புகார் வந்திருக்கிறதே... என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?"
“ `DMK files பிற மாநிலங்களைப்போல ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரும் முயற்சி' என தி.மு.க-வினர் கூறுகிறார்களே?”
“பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே?”
“ஆங்கில ஊடகங்களில் பி.டி.ஆர் கொடுக்கும் பேட்டிகள் அவர்களை கதறவைக்கின்றன. ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவுகளை மாநிலங்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறார். உச்ச நீதிமன்றமும் இதை அப்படியே சொன்னது. பி.டி.ஆர் முன்வைக்கும் வாதங்களை நிர்மலா சீதாராமனால் எதிர்கொள்ள முடியவில்லை. மற்ற மாநில நிதியமைச்சர்களையும் தூண்டிவிடுவதாக பி.டி.ஆரின் பேச்சுகள் இருக்கின்றன. அதைப் பார்த்து மத்திய அரசுக்கு அச்சம் வருகிறது. தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவே முடியாது, அதைவைத்து அரசியலாக்கலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கும்போது, அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்கிறார். ஆளுநர் மாளிகையில் நடந்த முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆளுநர் மாளிகை நிதியில் கைவைத்துவிட்டார். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்ற பழமொழிபோல, அடிமடியிலேயே பி.டி.ஆர் கைவைத்துவிட்டார். அதனால் பி.டி.ஆர் குறிவைக்கப்பட்டிருக்கிறார்.”
``தமிழ்நாட்டு அரசியலில் கண்ணியம் இல்லை என கர்நாடகாவில் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?”
“அது அவருக்கான சுய விமர்சனம். கண்ணியமாக இருந்த தமிழ்நாட்டு அரசியலை கண்ணியக்குறைவாக மாற்றிவிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.”
“எல்லோரும் கேட்டதைப்போலவே வாட்ச் பில் கொடுத்துவிட்டாரே... அது கண்ணியம் இல்லையா?”
“அண்ணாமலை கொடுத்த வாட்ச் பில் மிகப்பெரிய ஊழல். 3 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்து வாங்கக் கூடாது என அவருக்குத் தெரியாதா... ஜனவரியில் வாங்கியதாக பில் காட்டியிருந்தால் வேட்பு மனுத்தாக்கலில் ஏன் காட்டவில்லை எனக் கேட்பார்கள் என்பதற்காக, தேதியை மாற்றியிருக்கிறார். இது அப்பட்டமான தகிடுதத்தம். கீரைக்கட்டுகூட ஜி-பேயில் வாங்குகிறார்கள். இது மோடியின் டிஜிட்டல் எகானமி வளர்ச்சிக்கான சாதனை என பெருமைப் பேசுகிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ரொக்கப் பணம் கொடுத்து வாட்ச் வாங்கியிருக்கிறார். இது மோடியின் டிஜிட்டல் எகனாமி வளர்ச்சியைச் சந்தி சிரிக்கச் செய்யும் செயல் இல்லையா?”
“பா.ஜ.க-விலிருந்து வருவோருக்கு வி.சி.க-வில் இடமில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். ஆனால் சமீபத்தில் இருவரைச் சேர்த்திருக்கிறீர்களே?”
“இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தவறான புரிதலின் அடிப்படையில் அங்கு சென்றுவிட்டார்கள். எனவே திரும்பி வருகிறார்கள் என்பதால் ஏற்றுக்கொண்டோம். இவர்கள் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்திருக்க மாட்டார்கள். அப்படியிருந்தால்தான் ஆபத்து.”
“மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை வைப்பதாக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறாரே?”
“சட்டமன்றத்தில் எனது அறிமுக உரையிலேயே வைத்த கோரிக்கை இது. அதை நிறைவேற்றுவதாக முதல்வர் அறிவித்ததில் மகிழ்ச்சி. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததுடன், அவரின் எழுத்துப் பேச்சுகளை அரசு செலவில் வெளிக் கொண்டுவந்தவர் வி.பி.சிங். காவிரி வாரியம் உட்பட தமிழ்நாட்டுக்கும் எண்ணற்றவற்றைச் செய்துகொடுத்தவர் வி.பி.சிங். பொற்கால ஆட்சியைக் கொடுத்த வி.பி.சிங்குக்கு இவ்வளவு காலம் எதுவும் செய்யாததே பெரும் பின்னடைவு. அந்தப் பின்னடைவை முதல்வர் சரி செய்திருக்கிறார். சமூகநீதிக்காகப் பங்காற்றிய வி.பி.சிங்குக்கு இன்னும் பல அடையாளங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.”
“பெரியார் சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் 2-வது திருமணம் செய்துகொண்டார் என சீமான் கூறியிருக்கிறாரே?”
“பெரியார் சொத்துகளைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்திருந்தால் தென்னந்தோப்பை அழித்திருக்க மாட்டார். ஆதரவற்ற குழந்தைகள் மையத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார். கல்விக்கூடங்கள் கட்டியிருக்க மாட்டார். பதவியையும், பணத்தையும் விட்டுவிட்டு சமூக சீர்திருத்தப் பணிக்கு வந்திருக்க மாட்டார். இப்போது பெரியாருக்கு நேரெதிரான சித்தாந்தத்தில் சீமான் பயணிக்கிறார் என்பதால் அவரைக் கொச்சைப்படுத்தும் வகையில் அப்படி பேசியிருக்கிறார். பெரியார் என்கிற ஆளுமையை அடித்து நொறுக்க வேண்டுமென்ற பின்புல நோக்கம் சீமானுக்கு இருக்கிறது. ஆனால் அது எடுபடாது. சீமானுடைய பேச்சு உண்மைதானா என்று இளைஞர்கள் பெரியாரை தேடிப்பிடித்து படிக்கிறார்கள். எனவே சீமான் இப்படியே பேசிக்கொண்டிருப்பது நல்லதுதான்..”
கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட்டில், குளித்தலை நகர அ.தி.மு.க சார்பில் பொதுமக்களின் கோடை வெப்பத்தைத் தணிக்கும்பொருட்டு, தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் நகர அ.தி.மு.க ஐடி விங் துணைத் தலைவர் கார்த்திக்மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
தி.மு.க அரசு, தமிழக முதல்வர் குறித்தும், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது விருந்து அளிப்பது குறித்த தி.மு.க அரசின் அறிவிப்பு குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பரப்பியதாகக் கூறி, கரூர் நகர காவல்துறையினர் அவரைக் கைதுசெய்திருக்கின்றனர். அதோடு, அவரைக் கைதுசெய்து 6 மணி நேரம் கடந்தும், அவர் எங்கிருக்கிறார் என தகவல் தெரிவிக்க மறுத்த காவல்துறையினர், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர்மீது பொய்யான வழக்கு தொடுத்ததன் காரணமாக அவருக்கு உடனடியாக நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
தமிழக அரசு மணல் கடத்தல், கொள்ளையைத் தடுக்கும் என்றால், வி.ஏ.ஓ படுகொலை குறித்தும், சமூக வலைதளங்களில் செய்திகள், மீம்ஸ்கள் பரவியபோதும், அதை செய்த அனைவரையும் தமிழக அரசு கைதுசெய்யுமா... அதே போல், 'தமிழக முதல்வர் பதவி ஏற்றதும் மணல் வண்டியில் ஆற்றில் மணல் அள்ளலாம். அதைத் தடுக்கும் அதிகாரிகளை என்னிடம் கூறுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று ஒருமையில் பேசினார், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதுபோல்தான், தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்கமுயன்ற வி.ஏ.ஓ மணல் மாஃபியா கும்பலால் அவரது அலுவலகத்திலேயேவைத்து வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார். கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வினர், பொய்யான வழக்குகளில் காவல்துறையினர் மூலம் வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்யப்படுகின்றனர். மேலும், பொதுக்கூட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை அனுமதி அளிக்க விடாமல் தடுத்து வருகின்றன. தமிழகத்தில் அனைவருக்கும் ஒரு சட்டம் என்றால், கரூர் மாவட்டத்தில் ஒரு சட்டம் அமலில் இருக்கிறது. இந்த அரசு, அரசுப் பள்ளிகளில்கூட மது கடைகளை திறந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இங்கே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. அண்மையில் கரூர் மாநகராட்சியில் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்த மாநகராட்சி வார்டு உறுப்பினர்களே கோடை காலத்தில் பொதுமக்களுக்குத் தண்ணீர் வழங்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தி.மு.க அரசை எதிர்த்து, தி.மு.க-வினரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அரசுமீது அதிருப்தியடைந்த தி.மு.க கவுன்சிலர்களே தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். என்ன அடக்குமுறையை கரூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் நமக்கு எதிராகச் செய்தாலும், எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுரையின்படி, கரூர் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
Doctor Vikatan: என் வயது 59. ரத்தச்சர்க்கரை அளவு 270. உடம்பு முழுவதும் அரிப்பு அதிகமாக உள்ளது. ரத்த அளவு 10 ஆக உள்ளது. கொழுப்பும் உள்ளது. என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?
- Rasheed, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.
ரத்த அளவு என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஹீமோகுளோபின் அளவா அல்லது HbA1c எனப்படும் ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவா என்று தெரியவில்லை. ஒருவேளை அது ரத்தச் சர்க்கரையின் சராசரியாக இருக்கும்பட்சத்தில் இந்த அளவானது மிக ஆபத்தானது. அதாவது உங்களுக்கு ரத்தச் சர்க்கரையானது கட்டுக்கடங்காமல் இருக்கிறது என அர்த்தம்.
கட்டுப்படுத்தவியலாத நீரிழிவு பாதிப்பில் ஒருவருக்கு ஸ்கின் டர்கர் (Skin turgor) எனப்படும் சருமத்தின் மீள்தன்மை பாதிக்கப்படும். அதன் காரணமாக சருமத்தின் ஈரப்பதமானது குறைந்திருக்கும். சருமத்தில் ஈரப்பதம் குறையும்போது உடல் முழுவதும் வெடிப்பு போல ஏற்படலாம. அதன் தொடர்ச்சியாக அரிப்பும் ஏற்படலாம். எனவே இது குறித்து நீங்கள் மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே சொன்னது போல ரத்த அளவு என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ரத்தச் சர்க்கரையின் சராசரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் இன்சுலினுக்கு மாறுவது நல்லது. உடனடியாக நீரிழிவு மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசனை பெறுங்கள். ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவருவதுதான் எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வாக இருக்கும்.
கொழுப்பு அதிகமுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அது எந்த வகையான கொழுப்பு என குறிப்பிடவில்லை. நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலே கெட்ட கொழுப்பு குறையும். இதற்கும் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற்று கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
டாடா சன்ஸ் (Tata Sons) தலைவரும், இந்திய தொழிலதிபருமான நடராஜன் சந்திரசேகரன் சமீபத்தில் BT Mindrush 2023 கருத்தரங்கில் `Reinventing Tata’ என்கிற தலைப்பில் பேசியிருந்தார். அதில் இந்த நிறுவனத்தின் வெற்றி, தோல்வி மற்றும் வாடிக்கையாளர்களோடு தங்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விளக்கமாக உரையாடினார்.
அந்த சமயத்தில், சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வாழ்வில் நடந்த பர்சனல் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ``நான் லோனாவாலாவிற்கு (Lonavala) வண்டியை ஒட்டிச் செல்வேன். என்னுடைய மனைவி எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர் சாலையில் உள்ள கார்களை எண்ணிக்கொண்டே வந்தார். ''சாலையில் எந்த டாடா காரும் இல்லை. ஏதாவது செய்யுங்க!... என்னால எந்த டாடா காரையும் பார்க்க முடியவில்லை’’ எனக் கூறினார்.
அவர் வற்புறுத்தியதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தோம். இப்போது நீங்கள் சாலையில் டாடா கார்களைப் பார்க்க முடியும்.
டாடா மோட்டார்ஸின் மாற்றத்தில், எங்கள் குழுக்கள் கடினமாக உழைக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களைக் குறிவைத்து டாடா மோட்டார்ஸில் 10 மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளன. லான்ச் செய்வதில் இருந்து நாங்கள் பின்வாங்க முடியாது. எல்லா தயாரிப்புகளும் நன்றாக, தரமானதாக இருக்க வேண்டும்.
எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தில் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். ஆனால் 2025-ல் வரவிருக்கும் கார்கள், முழுவதும் புதுமையான தொழில்நுட்பத்துடன் இருக்கும். புதுமையான வாகனங்களுக்காக நாங்கள் பல்வேறு ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
நாங்கள் நம்பமுடியாத அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளோம். மிகக் குறுகிய காலத்தில் 80% சந்தையை நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம்.
நிறுவனங்கள் புதுமைகளை உருவாக்க வேண்டும் என்றாலும், அவற்றின் தழுவல் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவை வேகமாக இருக்க வேண்டும். இதற்காக நாங்கள் 4 ஆண்டுகள், 3 ஆண்டுகளில் செய்வோம் என்று சொல்ல முடியாது, அது வேலை செய்யாது" என்று கூறினார்.
சோமயாகம் என்பது யாகங்களில் மிகவும் சிறப்பு பெற்றது. இந்த யாகத்தின் மூர்த்தி ஶ்ரீ தட்சிணாமூர்த்தி. சோமலதை என்னும் மூலிகையின் சாறு எடுத்து அதை சூர்யோதயத்துக்கு முன்பாக யாகத் தீயில் சமர்ப்பிப்பார்கள். இந்த சோமலதை என்னும் மூலிகை மிகவும் அபூர்வமானது. பார்ப்பதற்கு முல்லைக் கொடியைப்போலவே இருக்கும். இந்தக் கொடியில் அமாவாசை நாளில் ஓர் இலைகூட இருக்காது. மறுநாள் முதல் ஒவ்வொரு இலையாகத் துளிர்க்கும். பௌர்ணமி அன்று 15 இலைகளோடு காணப்படும். பிறகு பிரதமை முதல் ஒவ்வோர் இலையாக உதிர்ந்து அமாவாசை அன்று ஓர் இலை கூட இல்லாமல் ஆகும்.
ஹோமத்தின் முதல்நாள் இரண்டு கட்டைகளைக் கடைந்து ஹோமத்துக்குரிய அக்னியை உருவாக்குவார்கள். இரண்டாம் நாள் ஹோம குண்டத்தைக் குதிரையை விட்டுத் தாண்டச் சொல்வார்கள். மூன்றாம் நாள் சோமப் பிரயம், சோமப் பிரவாகம் ஆகிய கிரியைகள் நடைபெறும். நான்காம் நாள், ஶ்ரீபம், வேதிகரணம் ஆகியவை நடைபெறும். ஐந்தாம் நாள் வபாஹோமம் என்பது நடைபெறும். ஆறாம் நாள் ஹோம ஆகுதி சமர்ப்பணம் நடைபெறும். ஏழாம் நாள் கல்ப பிராயச்சித்த ஹோமம் நடைபெறும். இறுதியில் சக்தி ஹோமம் செய்து எஞ்சியவற்றை அக்னி சமர்ப்பணம் செய்வர் என்கின்றன சாஸ்திர நூல்கள்.
நாயன்மார்களில் ஒருவர் சோமாசி மாறநாயனார். இவர் சோமயாகம் செய்யும் பரம்பரையில் தோன்றியவர். இவரின் சோமயாகத்துக்கு ஈசனே மாறுவேடம் புனைந்து நால்வேதங்களோடும், உமையவளோடும் கணபதி முருகனோடும் வந்து ஆகுதியை நேரடியாகப் பெற்றுக்கொண்டார் என்கிறது புராணம்.
சோமயாகம் செய்தாலோ அதைப் பார்த்தாலோ அதில் பங்கெடுத்துக் கொண்டாலோ சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதோடு நினைத்த காரியம் நிறைவேறும். ஈசனின் அருள், ஞானம் ஆகியன பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.
அப்படிப்பட்ட அபூர்வ பலன்களை அருளும் இந்த விஸ்தாரமான ஹோமத்தை அனைவரும் எளிதாக வீட்டில் செய்ய முடியாது. வடக்குக் கேரளாவில் உள்ள கைதாபிரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீகொம்பன்குளம் விஷ்ணுநம்பூதிரியும் அவர் மனைவி உஷாவும் பெருமுயற்சியோடு இந்த ஹோமத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களே இந்த ஹோமத்தின் எஜமானர்கள் எனப்படுவர்.
கைதாபுரம் கிராமத்தில் ஸ்ரீவாசுதேவபுரம், ஸ்ரீ கிருஷ்ணன் மத்திலகம், ஸ்ரீ விஷ்ணுபுரம் ஆகிய மூன்று பழைமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு நடுவே அமைந்திருக்கும் 4 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மான யாகசாலைகள் அமைக்கப்பட்டு இன்று தொடங்கி மே 5- ம் தேதிவரை சோமயாகம் நடைபெறுகிறது.
விஷ்ணுநம்பூதிரியும் உஷாவும் கடந்த ஆண்டு அட்சய திரிதியை நாளில் (மே - 2, 2022) அக்னியாதானம் செய்து அக்னிஹோத்ரிகள் ஆயினர். தொடர்ந்து 360 நாள்கள் அக்னி ஹோமம் செய்து அதைக் கடந்த ஏப்ரல் 27 - ம் தேதி பூர்த்தி செய்தனர். இதைத் தொடர்ந்து பல ஹோமங்களும் வழிபாடுகளும் செய்துவந்த விஷ்ணு நம்பூதிரி தம்பதி இன்று முதல் சோமயாகம் தொடங்கியிருக்கிறார்.
இந்த குறித்து ஹோம ஏற்பாடுகளைச் செய்பவர்களில் ஒருவரான உன்னிகிருஷ்ணனிடம் கேட்டோம்.
" ஹோமங்கள் நம் பண்பாட்டில் ஒன்று. முறையாக ஹோமம் செய்தால் அதற்கான பலன்கள் கிடைக்கும். ஹோமங்கள் இம்மைக்கும் மறுமைக்குமான சகலத்தையும் அளிக்கக் கூடியது. நான்கு வேதங்களிலும் பல ஹோமங்கள் குறித்த செய்திகள் காணப்பட்டாலும் 21 ஹோமங்கள் முக்கியமானவை. அவற்றில் சோமயாகம் மிகவும் பிரசித்திபெற்றது. கடுமையான அனுஷ்டானங்களோடு கூடிய இந்த ஹோமத்தை மிகுந்த முயற்சிகளோடு முன்னெடுத்திருக்கிறோம். இந்த ஹோமத்துக்கான சோமலதை வட இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஹோமத்தைச் செய்துகொடுக்க இந்தியா முழுவதும் இருந்து பல வேதியர்கள் வந்திருக்கிறார்கள். சுமார் 4 ஏக்கர் நிலத்தில் இந்த யாகசாலை கட்டப்பட்டுள்ளது. பல சாஸ்திர நிபுணர்கள் கலந்துகொள்கிறார்கள்.
ஹோமம் நடைபெறும் நாள்களில் இங்கே அறிஞர்களின் விரிவுரைகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் கலை கலாசார நிகழ்ச்சிகள் எனப் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைதாபிரம் பகுதியில் இதற்கு முன்பாக 105 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்று சோமயாகம் நடைபெற்றுள்ளது. இப்போது இங்கு வாழும் யாரும் சோமயாகத்தைக் கண்டதில்லை. எனவே அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் பங்குகொள்வது மிகவும் விசேஷமானது. இந்த ஹோமம் தொடர்பான தகவல்கள், www.kaithapramsomayagam2023.org இணையதளத்தில் உள்ளன. பங்கெடுக்க விரும்பும் ஆஸ்திக அன்பர்கள் அதில் தகவல்களைப் பெறலாம்" என்றார்.
Doctor Vikatan: தினமும் காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது தலைவலி வருகிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்
தலைவலி என்பது பல விஷயங்களை உணர்த்தும் ஓர் அறிகுறி. தலைவலியில் பல வகைகள் உள்ளது பற்றி அறிந்திருப்பீர்கள். தலையைச் சுற்றி மொத்தமாக வலிப்பதை டென்ஷன் தலைவலி என்போம். கொத்துத் தலைவலி என ஒன்று உண்டு. கண்களைச் சுற்றி மட்டும் வலிக்கும்... கண்ணீரும் வரும்.
ஒரு பக்கத்தில் மட்டும் வலியை உணரச் செய்கிற ஒற்றைத் தலைவலி... அதை மைக்ரேன் என்று சொல்வோம். இவை தவிர, தலையில் இடி இடிப்பதைப் போன்ற வலி ஒன்று சிலருக்கு வரும். அதை Thunderclap headache என்று சொல்வோம். இது சற்றே சீரியஸாக அணுக வேண்டியது.
இவை தவிர்த்து, கழுத்திலும் முதுகிலும் வலியை உணரச் செய்கிற ஸ்பைனல் தலைவலி (Spinal headache) என ஒன்று உண்டு. இப்படி தலைவலியில் பல வகை உண்டு.
காலையில் எழுந்ததும் தலைவலி வருகிறது என்ற உங்களுடைய கவலைக்கு பொத்தாம் பொதுவாக பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு வருவது எப்படிப்பட்ட தலைவலி என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையைச் செய்வதுதான் சிறந்தது.
எனவே உங்களுடைய பிரச்னையை பொது மருத்துவரை அணுகி, ஆலோசித்து, சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. அதன் பிறகு ஏதேனும் பரிசோதனைகள் தேவையா என்பதையும் மருத்துவர் சொல்வார். அதற்கேற்ற பிரத்யேக சிகிச்சைதான் உங்களுக்கான தீர்வாக இருக்கும். மருத்துவரை அணுகி, காரணம் தெரிந்து சிகிச்சை எடுக்காமல் நீங்களாக சுய மருத்துவம் செய்வதைத் தவிர்க்கவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது வேதாந்தா குழுமம். ஆகவே அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் மன்றாடி வருகிறது. ஆனால் எந்த முயற்சிகளும் கதைக்கு ஆகவில்லை. ஆகவே 2022 ஜூன் மாதம் தாமிர தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை விற்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது ஸ்டெர்லைட் நிறுவனம்.
இந்நிலையில் சமீபத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையின்படி ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனினும் ஆலையின் உபகரணங்கள் பாதிப்படையும். பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கான அனுமதியைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்திருந்தது வேதாந்தா நிறுவனம்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பராமரிப்பு பணிகள், ஆய்வு பணிகளை என்போன்ற கோரிக்கைகளை நிராகரித்தது நீதிமன்றம். அதே சமயம் ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்ற உத்திரவிட்டிருப்பதும், அதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்யத் தவறியதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் கழிவுகளை அகற்றிக் கொள்வதற்கு அரசு ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியதை தொடர்ந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும் பசுமை மண்டலத்தை பராமரிக்கவும் இது தொடர்பான பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதியளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ”ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்கக் கூடாது, எந்த வகையான பராமரிப்புகளாக இருந்தாலும் அதனைத் தமிழக அரசே நேரடியாகச் செய்திட வேண்டும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
நம்முடன் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சிலர் "ஸ்டெர்லைட் வளாகத்தில் ஜிப்சம் கழிவுகளை வெளியேற்ற தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனைத் தமிழக அரசின் உயர்மட்ட குழுவின் ஆலோசனையுடனே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலை நிர்வாகம் இதர சில பராமரிப்புகளுக்கும் அனுமதி கேட்டிருந்தாலும் தேவைகளை ஆராய்ந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்ற மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணிகளை அரசு எடுத்த செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருபோதும் வேதாந்தா குழுவினரை ஆலைக்குள் அனுமதிக்கக் கூடாது
அரசு முன்னெடுத்து அதற்கான செலவுகள் ஆலை நிர்வாகத்திடம் வாங்கிக் கொள்ளட்டும். ஆலை நிர்வாகத்தினரை உள்ளே அனுமதித்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க வைக்க ஏதேனும் சதி வேலைகளைச் செய்திட வாய்ப்புகள் உள்ளது. காப்பர் தயாரிக்காமல் வேறொன்றைத் தயாரிக்கிறோம், அரசுக்கு உதவுகிறோம் என கிளம்பிவிடுவார்கள் ஆகவே தமிழக அரசே பராமரிப்பு வேலைகளைக் கையாள வேண்டும்” என்கிறார்கள் உறுதியாக...
மேலும், ஸ்டெர்லைட் ஆலை எப்படியாவது மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு உள்ளடி வேலைகளைச் நிர்வாகத்தினர் செய்கின்றனர். தூத்துக்குடி பகுதி மக்களை அணுகி அவர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது, விளம்பரங்களின் மூலம் நல்லதொரு நிறுவனமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது, தமிழ்நாடு ஆளுநரை ஸ்டெர்லைடுக்கு ஆதரவாகப் பேச வைப்பது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் உதவியை நாடி ஆலையைத் திறக்க திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல வேலைகளைச் செய்துவரும் சூழலில் நிர்வாகத்தினரை ஆலை வளாகத்தில் அனுமதிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர்.
திருப்பூர் மாநகரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் விறகுகளை ஏற்றிக் கொண்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் குமரன் சாலை வழியாக வரும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அப்போது முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியது. ஓட்டுநர் முருகன் லாரியை நிறுத்த முயன்றும் முடியவில்லை.
லாரியை சாலையோரமாக நிறுத்த முயன்றபோது அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 5-க்கும் மேற்பட்ட கார்கள் மீது லாரி மோதியது. இதில் காங்கேயம் சாலையைச் சேர்ந்த கோயில் பூசாரி கண்ணன் என்பவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லாரி அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனப்பி வைத்தனர்.
லாரி ஓட்டுநரிடம் போலீஸார் விசாரித்ததில், பிரேக் பிடிக்காததால் லாரியை நிறுத்த முடியாமல் போனதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை... வாரத்துக்கு மூன்று நாள்கள் விடுமுறை’ எனச் சட்டமன்றத்தில் வேகவேகமாக ஒரு மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது தி.மு.க அரசு. ஆனால், கூட்டணிக் கட்சிகளே கொந்தளித்து போர்ப்பரணி பாட ஆரம்பித்ததுடன், மாநிலம் முழுக்கவே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அத்துடன், தி.மு.க அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களும் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, மசோதாவை நிறுத்தி வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இப்படி ஒரு மசோதாவைக் கொண்டுவரும்முன், அனைத்துப் பிரிவினருடனும் கலந்தாலோசித்திருந்தால், இப்படி எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருந்திருக்காது.
12 மணி நேர வேலை என்பது புதிய விஷயம் அல்ல. இன்றைக்கு ஐ.டி நிறுவனங்களிலும், பலவிதமான தொழிற்சாலைகளிலும், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக வளாகங்களிலும் தினமும் 12 மணி நேரம் வேலை பார்க்கவே செய்கின்றனர் பெரும்பாலான ஊழியர்கள். சட்டவிரோதமாக வேலை பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுபவர்கள்தான் இதில் அதிகம். இந்த நிலையில், 12 மணி நேர வேலை என்பது சட்டமாக்கப்பட்டுவிட்டால் 13, 14 மணி நேரம் என்று மேலும் மேலும் அந்தத் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படவே வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.
மூன்று நாள் விடுமுறை எனப் பெரிதாக எடுத்துச் சொல்லப்பட்டாலும், அது பல ஊழியர்களுக்குக் கிடைக்காது. விடுமுறை தினத்தில் வேலை செய்தால், கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்கிற ஆசையை நிறுவனங்கள் காட்டினால், பலரும் வேலை செய்வார்கள். இதனால், அவர்களின் உடல்நலன் நீண்ட காலத்தில் மிகப் பெரியளவில் பாதிப்படையும்.
முக்கியமாக, 12 மணி நேரம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் அதிகமாகத் தரப்படும் என அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் இல்லை. விடுமுறை நாளில் எக்ஸ்ட்ரா வேலை, எக்ஸ்ட்ரா சம்பளம் என்பதால், ஊழியர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை!
பிரிட்டனில் 12 மணி நேர வேலை சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. அங்கு தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்கள் சிறப்பாக இருப்பதால், அங்குள்ளவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். சீனாவில்கூட 12 மணி நேரம் வேலை நடைமுறையில் இருந்தாலும், ஊழியர்கள் வேலை பார்க்கும் சூழலை மிகச்சிறப்பாக வைத்திருக்கிறது சீன அரசாங்கம். தவிர, கூடுதல் வேலைக்குக் கூடுதல் சம்பளத்தை சீன அரசே நிறுவனங்களிடம் இருந்து கறாராக வாங்கித் தந்துவிடுவதால்தான், அங்கு தனிநபர் வருமானம் நம் நாட்டைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
அதெல்லாம் இங்கு நடக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தமிழகமே வியந்து பார்க்கும் ஓர் இசைக்குடும்பம் இளையராஜாவினுடையது. அவர்களில், பன்முகக் கலைஞராக 45 ஆண்டுகளாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருப்பவர், இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன். இசையமைப்பு, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு உட்பட சினிமாத்துறையில் எதிர்நீச்சலடித்த அனுபவஸ்தரான கங்கை அமரனிடம் பேச்சுக் கொடுத்தோம்.
இளையராஜாவின் பாசம் :
``சில நேரம் இளையராஜா அண்ணன் வார்த்தையை விட்ருவார். அதனால, அவர்மேல சிலருக்கு மாறுபட்ட விமர்சனங்கள் இருக்கலாம். ஆனா, அவரை நல்லா புரிஞ்சுகிட்டவங்களுக்கு இளையராஜா குழந்தையாத்தான் தெரிவார். பாஸ்கர் அண்ணன், ராஜா அண்ணன், நான் ஆகியோர் வெவ்வேறு இடங்கள்ல வேலை செஞ்சுகிட்டிருந்த நேரம், அவரவர் வீட்டிலேருந்து மதிய சாப்பாடு வரவெச்சு, ராஜா அண்ணனோட ஸ்டூடியோல தினமும் ஒண்ணா சாப்பிடுவோம். திடீர்னு என்ன நினைச்சாரோ தெரியலை. `இனிமே நீங்க தனியாவே சாப்பிடுங்க’னு முகத்துல அடிச்ச மாதிரி ஒருநாள் இளையராஜா சொன்னார்.
`நம்ம பாசம் தொடரணும்னுதான் சாப்பாட்டு நேரத்துல உன் இடத்துக்கு வர்றோமே தவிர, சாப்பாட்டுக்கு வக்கில்லாம நாங்க இங்க வரலை’னு அவர்கிட்ட வெடிச்சுத் தள்ளிட்டேன். அன்னிக்கு மதியம் நானும் பாஸ்கர் அண்ணனும் சாப்பிடாம திரும்பிப் போயிட்டோம். அப்போ என் மனசுல இருந்த ஆதங்கத்தையெல்லாம் கொட்டி, `ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன’ பாடலை எழுதினேன். `இஷ்டம் இருந்தா இந்தப் பாடலைப் பயன்படுத்திக்கோ’னு ராஜாகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். அவரும் அந்தப் பாட்டை `தர்மதுரை' படத்துல பயன்படுத்தினார். பிறகு, சில நேரம் எங்களுக்குள் உரசல் வரும். மறுபடியும் கூடுவோம். இப்போ ஒத்துமையா பாசமா இருக்கோம்".
எஸ்.ஜானகி :
``இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் அண்ணனின் மியூசிக்னாலே எஸ். ஜானகியம்மாதான் ஆஸ்தான பாடகி. அவர்கிட்ட நாங்க வேலை செஞ்ச காலத்துலயே, ஜானகி அம்மாவுடன் எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்துச்சு. அதனால, ‘அன்னக்கிளி’ படத்துல ஜானகி அம்மாவை சென்டிமென்ட்டா பாட வெச்சதுடன், ஹம்மிங் வாய்ஸையும் கொடுக்க வெச்சோம். அந்தப் பாடல்கள் எல்லாமே செம ஹிட்.
இளையராஜா இசையில ஜானகியம்மா தவிர்க்க முடியாத பாடகியானாங்க. எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் - டி.எம்.செளந்தரராஜன் அண்ணன் - பி.சுசீலாம்மா கூட்டணிபோல, இளையராஜா – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – எஸ்.ஜானகியம்மா கூட்டணியும் ஓஹோன்னு பிரபலமாச்சு. பாடலாசிரியரா என் முதல் பாடலான 'செந்தூரப்பூவே' பாடலைப் பாடிய ஜானகியம்மாவுக்கு முதல் தேசிய விருது கிடைச்சது. 'காதல் வைபோகமே', 'மூக்குத்திப் பூமேலே'னு என் இசையமைப்பிலும் ஜானகியம்மா நிறைய ஹிட்ஸ் பாடினாங்க."
சினிமா நட்பு:
"ஆரம்பத்திலேருந்தே இளையராஜாவின் சிந்தனைகள் எல்லாமே இசையில மட்டும்தான் இருந்துச்சு. வேற எந்த ஜனரஞ்சக விஷயத்துலயும் அவர் ஆர்வம் காட்ட மாட்டார். ஆனா, நான் அப்படியில்லை. பட பூஜை, சினிமா ஷூட்டிங், சினிமா கலைவிழா, கச்சேரினு சினிமா நண்பர்களுடன் ரொம்ப குளோஸா பழகினேன். குறிப்பா, நடிகைகளுடனும் நெருங்கிப் பழகினேன். அதனாலேயே, என்னை 'ப்ளே பாய்'னுகூட சிலர் சொன்னாங்க.
பார்ட்டி, 'ஸ்டார் நைட்' கச்சேரிகள், பட விழாக்கள்னு பலவற்றிலும் கலந்துகிட்டாலும், எவ்வித சபலத்துக்கும் இடம் தராமதான் கடைசிவரைக்கும் இருந்தேன். `எப்படி சாமி உங்களால மட்டும் இவ்வளவு கட்டுப்பாடா இருக்க முடியுது?’னு ரஜினி ஆச்சர்யமா கேட்பார். ரஜினி, கமல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நான் உட்பட சினிமா நண்பர்கள் ஒண்ணு சேர்ந்தா கேலி, கிண்டல், தமாஷ்னு செம ரகளையா இருக்கும். இந்த அனுபவமும் நட்பும் இயக்குநரா நடிகர்கள்கிட்ட வேலை வாங்கிற அணுகுமுறையை எளிதாக்குச்சு".
அங்கீகாரம்:
``பலரும், 'உங்க அண்ணன் அளவுக்கு உங்களுக்குப் பேரு புகழ் கிடைக்கலையே'னு சொல்லியதுண்டு. எங்கண்ணணும் நானும் சினிமால பல பாடல்கள் பாடியிருக்கோம். இசையமைப்பாளரா நானும் ஹிட்ஸ் கொடுத்திருக்கேன். என்னைப் பொறுத்தவரை எல்லாவிதத்துலயும் அவர்தான் பெஸ்ட். அவர்கூட என் பெயரை ஒப்பிடுறதுகூட பொருத்தமா இருக்காது.
மக்கள் என் பாடல்களையும் படங்களையும் இப்பவும் பார்த்தும் கேட்டும் ரசிக்கிறாங்க. இத்தனை வருஷம் கழிச்சும் என்னைக் கூப்பிட்டு பேட்டி எடுக்கறீங்க. இதுக்கு மேல எனக்கு என்ன அங்கீகாரம் வேணும்? இசைப் பிரியர்கள் எல்லோரும் கொண்டாடுற இளையராஜாவுக்கு ஒரே தம்பி நான் மட்டும்தான். இந்தப் பெருமைகளே எனக்குப் போதும்!"
மகன்கள்:
``நானும் இளையராஜாவும் மேடை நாடகங்கள்ல வேலை செஞ்ச காலத்துல நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் எங்க குழுவுல பாடிட்டிருந்தாங்க. பல பயணங்கள்ல எங்க மடியில தவழ்ந்த புள்ளை விஜய். பிற்காலத்துல அவர் நடிகரானதும், 'நம்ம பையனை வெச்சு படம் எடுக்கணும்'னு என் மனைவி ஆசைப்பட்டாங்க. ஹீரோயினா 'பிதாமகன்' சங்கீதாவை நடிக்க வெச்சோம். இளையராஜா பார்த்துப் பார்த்து மியூசிக் பண்ணிக் கொடுத்தார். நல்ல கதைதான். ஆனா, சொந்தப் படமா எடுத்ததுதான் தப்பா போச்சு. சில சிக்கல்களால 'பூஞ்சோலை'ங்கிற அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியலை. கடன் ஏற்பட்டுச்சு. வாழ்க்கைனா இன்ப துன்பம் வந்துபோறது இயல்புதானே? இப்போ எல்லாமே சரியாகிடுச்சு.
நடிகரா சில படங்கள்ல நடிச்ச பெரிய பையன் வெங்கட் பிரபு, டைரக்டரா பேர் எடுத்துட்டான். அவன் இன்னும் பெரிசா வளருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போ தமிழ் மற்றும் தெலுங்குல 'கஸ்டடி'ங்கிற படத்தை எடுத்துகிட்டிருக்கான். யுவன் சங்கர் ராஜாவுடன் இளையராஜாவும் சேர்ந்து மியூசிக் பண்ணா நல்லாயிருக்கும்னு சொன்னேன். ரெண்டு பேரும் சேர்ந்து பிரமாதமா மியூசிக் பண்ணியிருக்காங்க.
வெங்கட்பிரபு தன் குடும்பத்துடன் தனியா வசிக்கிறான். பிரேம்ஜியும் நானும் ஒண்ணா வசிக்கிறோம். ஒவ்வொரு நாளும் உணவு உட்பட எல்லா விஷயத்துலயும் பிரேம்ஜி என்னை நல்லா கவனிச்சுக்கிறான். ரெண்டு பேருமே பாசக்காரப் புள்ளைங்க!"
கரகாட்டக்காரன்:
``நான் சினிமால வேலை செஞ்சாலும் இல்லாட்டியும் எனக்கு அடையாளமா இந்த ஒரு படத்தைச் சொன்னாகூட போதும். அந்த அளவுக்கு எனக்கு வளர்ச்சியைக் கொடுத்த படம் அது. அந்தப் படத்தோட ரெண்டாவது பாகத்தை எடுக்க நான் தயார். ஆனா, அதுக்குப் பலரின் ஒத்துழைப்பும் தேவை. அதுக்கான சூழல்கள் அமையுமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நேரத்துல அந்தப் படத்துல கனகாவை நான் அறிமுகப்படுத்திய கதையைச் சொல்லணும். அப்போ என் வீட்டுக்குப் பக்கத்துலதான் நடிகை தேவிகாவின் வீடும் இருந்துச்சு. தன் மகளை நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்ட தேவிகாம்மா, கனகாவை என் பார்வைக்குத் தெரியப்படுத்த நினைச்சிருக்காங்க.
கனகாவுக்குப் பட்டுப் பாவாடை, தாவணி போட்டுவிட்டு என் வீடு வழியா அடிக்கடி வாக்கிங் கூட்டிட்டு வருவாங்க. அவங்களை மரியாதை நிமித்தமா வீட்டுக்குள்ளாற கூப்பிட்டு நானும் என் மனைவியும் பேசுவோம்.
அப்படியான பழக்கத்துல, ‘இந்தப் பொண்ணு லட்சணமா இருக்கு’னு என் மனைவி சொன்னதாலதான் ‘கரகாட்டக்காரன்’ல கனகாவை ஹீரோயினா நடிக்க வெச்சேன். ஆனா, அந்தப் படத்துல பானுப்ரியாவை நடிக்க வைக்கணும்னுதான் நானும் இளையராஜாவும் நினைச்சோம். அந்தப் படத்தோட வெற்றிக்கு கனகாவின் நடிப்பும் ஒரு காரணம்ங்கிறதை மறுக்க முடியாது!"
தாய்லாந்து, பாங்காங்கைச் சேர்ந்தவர் சரரத் ரங்சிவுதபோர்ன் (Sararat Rangsiwuthaporn) (32). இவர் தன்னுடைய தோழி சிரிபோர்ன் கான்வோங்குடன் (Siriporn Khanwong), கடந்த கடந்த 14-ம் தேதி ரட்சபுரி மாகாணத்தில் இருக்கும் புத்த விகாருக்கு சென்றிருக்கிறார். அப்போது ஆற்றங் கரையில் சடங்கை முடித்துவிட்டு திரும்பிய போது, சிரிபோர்ன் கான்வோங்க் மயங்கி விழுந்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், பிரேத பரிசோதனையில், அவரின் உடலில் சயனைடு இருப்பதைக் கண்டறிந்து, இதய செயலிழப்புதான் மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், மரணமடைந்தவரின் தொலைப்பேசி, பணம், பைகள் ஆகியவற்றையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருடன் வந்த பெண் குறித்து விசாரித்தபோது, அந்தப் பெண் சரரத் ரங்சிவுதபோர்ன் என்பது தெரியவந்தது. இதனால் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிரிபோர்ன் கான்வாங் என்ற பெண்ணை கொலைசெய்தது, சரரத் ரங்சிவுதபோர்ன் என்பது தெரிந்தது.
இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், "குற்றம்சாட்டப்பட்ட பெண், டிசம்பர் 2020 - ஏப்ரல் 2023-க்கு இடையில் அந்தப் பெண்னின் முன்னாள் காதலன் உட்பட 12 பேரை இதே முறையில் கொன்றதாகத் தெரிகிறது. இதே முறையில் தான் மற்ற கொலைகளும் நடந்திருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நகைகள், பணம் ஆகியவைகள் காணாமல் போனதாகப் புகார் அளித்திருக்கின்றனர். கொலைக்கான நோக்கம் பணம்தான் என்று புலனாய்வாளர்கள் கருதுகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், சரரத் ரங்சிவுதபோர்னின் வழக்கறிஞர்,"சரரத் ரங்சிவுதாபோர்ன் கர்ப்பமாக இருக்கிறார். காவல்துறையினர் இவரின் மீது சந்தேகப்படுவது சரியல்ல. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் வேறு ஏதேனும் கொலை செய்திருக்கிறார் என காவல்துறை நிரூபித்தால், இந்தக் குற்றத்தை அதோடு பொருத்திப் பார்க்க முடியும். எனவே, சரரத் ரங்சிவுதாபோர்ன் எந்த குற்றமும் செய்யவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த காவல்துறை,"இதற்கு முன்னர் நடந்த இறப்புகள் குறித்து எந்த வழக்கும் பதிவுசெய்யப்படாததால், அது தொடர்பான எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அதனால், முந்தைய மரணங்களிலிருந்து ஆதாரங்களை மீட்டெடுப்பது சவாலானது. மேலும், இதற்கு முன்னர் இறந்தவர்களின் குடும்பத்தினர், உயிரிழந்தவர்கள் இயற்கையாக இறந்ததாகவே கருதுகின்றனர்" என விளக்கமளித்திருக்கின்றனர். அந்தப் பெண்ணை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான `இதயத்தைத் திருடாதே' தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் நவீன். இவருக்கு `மக்கள் நாயகன்' என்கிற பட்டத்தை அவருடைய ரசிகர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவருடன் உரையாடியதிலிருந்து...
சொந்தமா காஃபி ஷாப் ஆரம்பிச்சிருக்கீங்களே?
எனக்கு பிசினஸில் ஏதாவது பண்ணனும்னு ஆசை இருந்துச்சு. ரொம்ப ஜாலியா ஆரம்பிச்சதுதான் Kotta Coffee பிராண்ட். இப்ப பிசினஸும் நல்லா போயிட்டு இருக்கு.
கர்ப்பமாக இருக்கும்போதும் கண்மணி நியூஸ் வாசிக்கப் போயிருந்தாங்க.. நீங்க அவங்களுக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் ஆக இருக்கீங்க?
அவங்களுக்கு அவங்களுடைய ஒர்க் ரொம்பவே பிடிக்கும். அவங்களால போக முடியுங்கிற சூழலில் எல்லாம் அவங்க போயிடுவாங்க. முடியாத சூழலில் மட்டும்தான் ரெஸ்ட் எடுப்பாங்க. இப்ப வரைக்கும் அவங்க தான் எனக்கு சமைச்சுக் கொடுத்துட்டு இருக்காங்க. சீக்கிரமே அவங்களை மறுபடியும் அந்த ஒர்க்ல பார்க்கலாம். அவங்களும் ஆர்வமா அதுக்காக காத்துட்டு இருக்காங்க.
கண்மணிக்கு நடிப்புல ஆர்வம் இருக்கா?
அவங்களுக்கு நடிப்புல ஆர்வம் இல்லைங்க. `இதயத்தைத் திருடாதே' முடிஞ்சதும் என்னுடைய என்கேஜ்மென்ட் அப்ப டைரக்டர் என்கிட்ட உங்க மனைவியை வச்சு சேர்ந்து ஒரு புராஜெக்ட் பண்ணலாமான்னு கேட்டாரு. எனக்குத் தெரியாது நீங்க அவங்ககிட்டேயே கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டேன். அவங்க சம்மதம் தெரிவிக்கல. நிறைய புராஜக்ட், விளம்பரங்கள் எல்லாம் வந்தது. கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்களுக்கு நிறைய ஆஃபர் வந்திருக்கு. ஏன் நடிக்கலைன்னு கேட்டா, எனக்கு வராத விஷயத்துல நான் என்ன பண்றதுன்னு சொல்லுவாங்க. ஃபேம்னால தெரியாததை பண்ணினா நல்லா இருக்காது. இந்த வேலைக்காக திறமையான பலர் காத்துட்டு இருக்காங்க இந்த இடம் அவங்களுக்குப் போய் சேரணும்னு சொல்லுவாங்க. தெரியாத வேலையைப் பண்ணக் கூடாதுங்கிறதுல அவங்க ரொம்பவே உறுதியா இருக்காங்க.
கண்மணி எவ்வளவு தூரம் உங்களுக்கு சப்போர்ட் ஆக இருக்காங்க?
நானே தேடி லவ் பண்ணியிருந்தாலும் இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்குமான்னு தெரியல. என் அம்மாகிட்ட இருந்து எனக்குக் கிடைச்ச எல்லா விஷயங்களும் இவங்ககிட்ட இருந்தும் கிடைச்சிட்டு இருக்கு. அம்மா கொடுத்த அதே லவ்வை அவங்களும் கொடுக்குறாங்க. ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் எங்களுக்குள் லவ் அதிகமாகிட்டே தான் போகுது. அவங்களுக்கு டைரக்ஷன் நாலேஜ் இருக்கு. படம் பண்ணனும்னு அவங்களுக்கு ஆசை. பியூச்சர்ல ரெண்டு பேரும் சேர்ந்து கூட பண்ண வாய்ப்பு இருக்கு. நான் கூட புராஜெக்ட் இல்லாம இருக்கேனேன்னு கேட்டிருக்கேன். பணத்துக்காக எதுவும் பண்ண வேண்டாம். உங்க பேஷனுக்காக எவ்வளவு நாள்னாலும் வெயிட் பண்ணுங்க. சீக்கிரமே நல்ல புராஜெக்ட் கிடைக்கும்னு என்கரேஜ் பண்ணிட்டே இருப்பாங்க. ரெண்டு மாசம் கேப் விட்டதுக்கு பலர் கேட்பாங்க. இப்ப புராஜெக்ட்டிற்காக லுக் மாத்திட்டு இருக்கேன். எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு எனக்கு சப்போர்ட் ஆக இருக்காங்க.
நிறைய பட வாய்ப்புகளை இழந்திருக்கீங்களாமே?
`இதயத்தை திருடாதே' பண்ணும்போது மூணு படங்கள் வந்துச்சு. சீரியல் பண்ணிட்டு இருந்ததால அந்த வாய்ப்புகளை விட்டுட்டேன். அதுக்காக நான் இன்னைக்கு வரைக்கும் ஃபீல் பண்றேன். பத்து வருஷமா படம் பண்ணியிருக்கோம் ஆனா பெரிய அளவில் பெயர் கிடைக்கல. சீரியலில் ஹீரோவாக நடிக்கிறோம்.. மக்கள் மத்தியில் கொண்டாடப்படுறோம். என்னைக்கு வாய்ப்பு வருதோ அப்ப அதை கன்சிடர் பண்ணனும். தேதி பிரச்னை தான் அதைப் பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய பிரச்னை. நம்மளை நம்பி ஒரு புராஜக்ட் கொடுத்திருக்காங்கங்கிறப்ப அதை நாம விட்டுட்டுப் போறதுங்கிறதை நான் தப்பா நினைக்கிறேன். அதுக்கு நான் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். ரெண்டு சீரியல் பண்ணும்போது எல்லா சேனல்களில் இருந்தும் வாய்ப்பு வந்துச்சு. நான் நினைச்சிருந்தா பண்ணியிருக்கலாம். ஆனா, அப்படி பாதியிலேயே விட்டுட்டுப் போறதை நான் என் தொழிலுக்குப் பண்ணுற துரோகமாகத்தான் நினைக்கிறேன். அது முடிஞ்சதும் பண்ணலாங்கிறதுதான் என் எண்ணம். அதனாலேயே பல வாய்ப்புகள் கைவிட்டுப் போயிருக்கு.
அப்பாவும் மீடியா துறையைச் சேர்ந்தவராமே?
அப்பா சென்னை டு கன்னியாகுமரி லோகேஷன் மேனேஜராக ஒர்க் பண்றார். முப்பது வருஷத்துக்கும் மேல சினிமாவுல இருக்கார். பல முறை ஷுட்டிங் ஸ்பார்ட்டிற்கு என்னை கூப்பிட்டிருக்கார். ஆனா, நான் போக மாட்டேன். ஆர்மியில் போகணும்னுதான் என் ஆசை. மீடியாவுக்குள் வருவேன்னு நானே நினைக்கல. கிட்டத்தட்ட 10 வருஷமா போராடி ஆடிஷன் எல்லாம் போய் போராடிதான் எனக்கான வாய்ப்பை பெற்றேன். அப்பாவுடைய தொடர்புகளைப் பயன்படுத்த நினைச்சிருந்தா எப்பவோ பண்ணியிருந்திருப்பேன். சொந்தமா சினிமாவுலயோ சீரியலிலயோ வரணும்னு நினைச்சேன்.. வந்தேன்!
சீரியல்களை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்களா?
சினிமாவுல எனக்கேற்ற மாதிரியான கேரக்டர் கிடைக்கல. கிட்டத்தட்ட பத்து சீரியலில் ரிஜெக்ட் ஆகியிருக்கேன். கலர்ஸ் தமிழில் ஒரு புரொடக்ஷன் கம்பெனியில் ரிஜெக்ட் ஆனேன்.. அதே கம்பெனியில் இன்னொரு புராஜெக்ட்டில் செலக்ட்டும் ஆனேன். சினிமா,சீரியல்னுலாம் இல்ல. எனக்கு எல்லா வாய்ப்பும் ஒண்ணுதான்! படம் பெயர் சொல்ல விரும்பல... உங்களுக்கு இந்த ரோல்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்புறமா அந்தக் கேரக்டரையே தூக்கிட்டோம்னு டைரக்டர் சொன்னாரு. ஆனா, இந்தக் கேரக்டரில் இவர் தான் நடிக்கப் போறார்னு வேறு ஒருத்தருடைய பெயர் சோசியல் மீடியாவில் எல்லாம் வந்துடுச்சு. நானும் பார்த்துட்டேன். அந்தக் கேரக்டருக்கு பதிலா இன்னொரு கேரக்டர் சொன்னாங்க. தேதி இல்லைன்னு நான் பண்ணலைன்னு சொல்லிட்டேன். அந்தப் படம் செம ஹிட். அதுல நடிச்சவங்க பெரிய இடத்துக்குப் போயிருக்காங்க. என் கைவிட்டுப் போன படங்கள் நிறையவே இருக்கு. ஒரு படத்துல நாம நடிச்சிருப்போம்... ஆனா, நம்மளை தூக்கியிருப்பாங்க. தூக்கிட்டோம்னு தகவல் கூட சொல்லியிருக்க மாட்டாங்க.. அது மாதிரி நிறைய சந்திச்சிருக்கேன்!
நவீன் நம்மிடையே அவருடைய பர்சனல், புரொபஷனல் சார்ந்த பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!