Ad

செவ்வாய், 7 மார்ச், 2023

ஒன் பை டூ: “கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத ஸ்டாலின், தேசியத் தலைவரா?” என்ற அண்ணாமலையின் விமர்சனம்?

இராஜீவ் காந்தி, மாணவரணி மாநிலத் தலைவர், தி.மு.க

“குறைந்தபட்ச அரசியல் அறிவுகூட அண்ணாமலைக்குக் கிடையாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அன்று ஹிட்லருக்கு எதிராக ஸ்டாலின் கட்டமைத்த அணி எப்படி பெரும் வெற்றிபெற்றதோ... அதேபோல, இன்று மோடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கட்டமைக்கும் கூட்டணியால் பா.ஜ.க-வினர் பதறிப்போயிருக்கிறார்கள். பா.ஜ.க-வினருக்கு தமிழ்நாடு, இந்தியாவில் சேராது என்ற எண்ணம் எப்போதுமே மேலோங்கியிருக்கிறது. அந்த மேலதிக மனநிலையின் வெளிப்பாடாகவே அண்ணாமலையின் இந்தக் கருத்தைப் பார்க்க முடிகிறது. கும்மிடிப்பூண்டிக்கு மேலேயுள்ள மேற்கு வங்கம், டெல்லி, பீகார், பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் இன்றளவும் பா.ஜ.க-வால் கால்பதிக்க முடியவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். பா.ஜ.க எனும் மதவாத அமைப்பை வீழ்த்தவும், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்தவும் முதல்வர் ஸ்டாலின், மற்ற மாநிலங்களிலுள்ள மதச்சார்பற்ற கூட்டணிகளை ஒன்று திரட்டுகிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றுவிடுவார் என்கிற பயம் பா.ஜ.க-வினருக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏனெனில், இந்திய அரசியலை, தமிழ்நாடு பலமுறை முடிவு செய்ததற்கான வரலாறு இருக்கிறது. இந்த நிலையில், நாளொரு பொய் சொல்லி, கோமாளித்தனம் செய்துகொண்டிருக்கும் அண்ணாமலையின் கருத்தையெல்லாம் அவரின் கட்சியினரே பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.”

இராஜீவ் காந்தி, நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“உண்மையை உடைத்துச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. கும்மிடிப்பூண்டியைத் தாண்டினால் தி.மு.க-வையும் ஸ்டாலினையும் யாருக்குத் தெரியும்... அண்ணாமலை சொன்னதில் என்ன தவறு இருக்கிறது... அதேசமயத்தில், மொழியைவைத்து மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினால், தேசியத் தலைவராக எப்படி வர முடியும்... ஸ்டாலின் தேசிய அரசியலை முன்னெடுத்தால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும். அதனால்தான் தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் வர வேண்டும் என்று சொல்லும்போது, அவர் ‘காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது’ என்று பேசுகிறார். எந்தக் காலத்திலும் தி.மு.க எனும் கட்சி, கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் வெற்றிபெற்றிருக்கிறது. அதற்காகப் பணம் கொடுத்தாவது மற்ற கட்சிகளை விலைக்கு வாங்க தி.மு.க-வினர் தயங்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால்தான், தனது கட்சிக்காரர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பதற்காக ஸ்டாலின் இப்படிப் பேசுகிறார். வடகிழக்கில் பா.ஜ.க-வின் வெற்றி ஒன்றே எங்கள் கட்சியின் பலத்தை எதிர்க்கட்சியினருக்கு நன்கு உணர்த்தியிருக்கும். இன்று மட்டுமல்ல, என்றுமே கும்மிடிப்பூண்டியைத் தாண்டி ஸ்டாலினால் எங்கும் போக முடியாது. அவரால் எதிர்க்கட்சிகளை ஒருபோதும் ஒன்றிணைக்கவும் முடியாது!”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-annamalai-comments-on-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக