Ad

செவ்வாய், 7 மார்ச், 2023

அயோத்தி பட கதை சர்ச்சை நடந்த பின்னணி என்ன? விளக்கும் எழுத்தாளர்கள் மாதவராஜ், எஸ்.ராமகிருஷ்ணன்

மொழி, இன, மதங்களைக் கடந்து மனிதநேயத்தை வளர்க்கும் உணர்ச்சிக்குவியலான படம் 'அயோத்தி' என்று பாராட்டுகளைக் குவித்துக்கொண்டிருக்கும் சூழலில், "அந்தக் கதை என்னுடையது. அதனை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வரிக்கு வரி காப்பியடித்து எழுதிவிட்டார்" என்று எழுத்தாளர் மாதவராஜ் குற்றம் சாட்டியுள்ளது திரைத்துறை, எழுத்துலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் `அயோத்தி'. படத்தின் டைட்டில் கார்டில் படத்தின் கதையை என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கிரெடிட் வழங்கப்பட்டிருக்கிறது. ``தமிழ் சினிமாவில் இப்படியொரு கதை வந்ததில்லை. வித்தியாசமான சினிமா" என்று வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்கும் சூழலில்தான் 'அயோத்தி' படத்தின் கதை யாருடையது என்கிற சர்ச்சைகளும் எழத் தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில், எஸ்.ரா மீது குற்றம்சாட்டியுள்ள எழுத்தாளர் மாதவராஜையும் குற்றம்சாட்டப்பட்ட எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனையும் தொடர்புகொண்டு பேசினேன். எந்த அடிப்படையில் இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்? என்று எழுத்தாளர் மாதவராஜிடம் கேட்டபோது,

எழுத்தாளர் மாதவராஜ்

``எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் இந்தியா முழுக்க வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது. பீகாரிலுள்ள அதன் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர், எனக்கு போன் செய்து, 'பீகாரிலிருந்து குடும்பத்துடன் ராமேஸ்வரம் வந்த எங்கள் வங்கி ஊழியரின் மனைவி விபத்தில் உயிரிழந்துவிட்டார். அந்தக் குடும்பத்திற்கு தங்களால் உதவமுடியுமா?' என்று கேட்டார். அப்போது, நான் ஒரு மீட்டிங்கில் இருந்ததால், எனது நண்பர்கள் சாமுவேல் ஜோதிகுமார் மற்றும் சுரேஷ்பாபுவை அனுப்பி வைத்தேன். அவர்களும் அனைத்து உதவிகளையும் செய்துவிட்டுவந்து பட்ட கஷ்டங்களைச் சொல்லி அழுதேவிட்டார்கள்.

நண்பர்களின் இந்த மனிதநேய செயல் குறித்து எங்கள் வங்கி இதழில் எழுதினேன். அனைவரும் நெகிழ்ந்துபோய் பாராட்டினார்கள். கடந்த 2011-ஆம் ஆண்டு எனது 'தீராத பக்கங்கள்' வலைதளத்தில் கதையாகவும் எழுதினேன். அந்தக் கதைதான், என்னுடைய அனுமதி இல்லாமல், இப்போது படமாக வெளியாகியிருக்கிறது.

'அயோத்தி படம் உங்கள் கதை போல் இருக்கிறது' என்றுச் சொல்லி நண்பர்கள் படத்தைப் பார்க்கச் சொன்னதால் பார்த்தேன். பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டு நான் எழுதிய பீகார் கதையைத்தான் அயோத்தியாக எடுத்துள்ளார்கள். இந்தக் கதையை எஸ்.ரா எழுதியதாகச் சொன்னபோது மேலும் அதிர்ச்சியானது. ஏனென்றால், எஸ்.ரா எங்கள் ஊர்க்காரர். எனக்கு ரொம்ப நல்ல பழக்கம். இந்தளவுக்கு தெரிந்த மனிதர் கதைக்குறித்து நம்மிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.

சாமுவேல் ஜோதிகுமார் மற்றும் சுரேஷ் பாபு

நிஜத்தில் பீகார் குடும்பத்திற்கு உதவிய சுரேஷ் பாபு, கடந்த இரண்டு நாட்களாக நடந்தவற்றைச் சொல்லி எஸ்.ராவுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு எஸ்.ரா பதில் எதுவும் சொல்லாமல் பிளாக் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து எஸ்.ராவை நானும் தொடர்புகொண்டேன், மெசேஜ் செய்தேன். போனை அட்டெண்ட் செய்து 'நீங்கள் எழுதியது எனக்கு தெரியாது மாதவராஜ்' என்றுகூட தெரிவித்திருக்கலாம். ஆனால், அவரிடமிருந்து எதற்கும் பதிலில்லை; எங்களிடம் பேசவே விரும்பவில்லை.

எனது கதையை அப்படியே நகல் எடுத்து வைத்துக்கொண்டு சில மாற்றங்களை மட்டும் எஸ்.ரா செய்துள்ளார். வரிக்கு வரி அப்படியே இருக்கிறது. எனது கதையைப் படிக்காமல் எஸ்.ராவால் இந்தக் கதையை எழுதியிருக்க முடியாது.

ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதிய சங்கர்தாஸும் 'திரைக்கதை எழுத என்னிடம் வந்தபோது, எஸ்.ரா பீகார் குடும்பம் என்றுதான் எழுதியிருந்தார். நான்தான் அயோத்தியைச் சேர்ந்த சனாதன குடும்பம் என்று மாற்றினேன்' என்றார். அதன்படி பார்த்தால், இது என்னுடையக் கதை என்பது உறுதியாகிறது. ஆனால், எஸ்.ரா அறத்தையும் நேர்மையையும் கடைபிடிக்கவில்லை" என்று குற்றம்சாட்டியவர்,

"எனக்குப் படம் பிடித்திருந்தது. வட இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்தி பரவும் இன்றைய சூழலில் தமிழர்கள் எவ்வாறானவர்கள் என்பதை உணர்த்தும் கதையாக உள்ளது. படத்தைப் பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன். ஆனால், பீகார் குடும்பத்திற்கு உதவிய சாமுவேல் ஜோதிகுமாரையும் சுரேஷ் பாபுவையும் படக்குழு அடையாளப்படுத்தியிருக்கலாம். பல படங்களில் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கும்போது அடையாளப்படுத்துவதுண்டு. எனது கதையைத்தான் திரைப்படமாக்குகிறார்கள் என்று தெரிந்திருந்தால் இதைத்தான் படக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பேன்.

அயோத்தி பட போஸ்டர்

எனக்கு இதை வைத்து பெயர் வாங்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. காப்பி ரைட்டும் வேண்டாம். ஏனென்றால், நானும் உண்மைச் சம்பவத்தைத்தான் கதையாக எழுதினேன். என்னுடைய வருத்தமெல்லாம் உதவி செய்த உண்மையானவர்களை அடையாளப்படுத்தவில்லை என்பதுதான். அப்படி அடையாளப்படுத்தியிருந்தால் சமூகத்திற்கு பெரிய ஊக்கமாக அமைந்திருக்கும். ஆனால், சசிகுமாரை மட்டும் காட்டி கற்பனை கதைபோல் எடுத்துள்ளது பெரிய வருத்தத்தை உண்டாக்குகிறது" என்கிறார் விரக்தியான குரலில்.

எழுத்தாளர் மாதவராஜின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேசினேன்,

"எனது அயோத்தி திரைப்படக் கதையின் மீது எவர் உரிமை கோரினாலும் அதை நான் உறுதியாக மறுக்கிறேன். நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதையை எழுதினேன். படத்திலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று போடுகிறார்கள். வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறாகள். இவர்களில் சிலர் எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி மரணம் அடையும் செய்திகளை அடிக்கடி நாளிதழ்களில் காண முடிகிறது. அப்படி ஒரு வட இந்தியக் குடும்பம் விபத்தில் சிக்கிய தகவல்களை எனக்குத் தந்தவர் மதுரையைச் சேர்ந்த ஒரு நண்பர். அவர் கொடுத்த விரிவான தகவல்களைக் கொண்டே இக்கதையை எழுதினேன்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

அயோத்தி படத்தில் அவருக்கு நன்றி கூறியிருக்கிறார்கள். படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் திரைக்கு ஏற்றபடி மாற்றம் செய்ய விரும்பியபோது, கதையில் நிறைய மாற்றங்கள் செய்து கொடுத்திருக்கிறேன். அது தான் இன்றைய திரைவடிவம். திரைப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி இன்று தனது நேர்காணலில் கதை எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்தது என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறார். வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை வைத்து தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, என் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கத்துடன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஒரு கதை என்பது உண்மை, மற்றும் கற்பனையும் இணைந்து படைப்பாளியின் கலைத்திறனால் உருவாவது. இவர்கள் சொல்லும் குற்றசாட்டுகள் போல சாலை விபத்து மற்றும் குற்றச் செய்திகளுக்கு யாரோ உரிமை கோரினால் எந்தப் படைப்பாளராலும் எதையும் எழுத முடியாது" என்று தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார்.



source https://cinema.vikatan.com/kollywood/writer-madhavaraj-and-s-ramakrishnan-interview-about-ayothi-movie-story-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக