தமிழக சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட்டது. இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, பட்ஜெட் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் 12,500 கிராமங்களில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், நபார்டு மூலமாக ரூ.500 கோடி கடன் பெற்று, வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். அங்கக வேளாண்மையை நீலகிரியில் ஊக்குவிக்க உள்ளோம். இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.
டெல்டா பகுதிகளில் உற்பத்தியாகும் வேளாண் சார்ந்த தொழில்களில் வரக்கூடிய பொருள்களுக்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்யவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ அதே பகுதிகளில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். மூதாதையர்கள் பெயர்களில் பட்டா இருந்து தற்போது விவசாயம் செய்து வரும் வாரிசு விவசாயிகளை நெறிமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் முதற்கட்டமாக நீலகிரி, தருமபுரி ஆகிய மாவட்ட அங்கன்வாடிகளில் வழங்கபட்டத்தைத் தொடர்ந்து தற்போது கோயமுத்தூர் அங்கன்வாடிகளிலும் விற்பனை செய்யபடுகிறது. பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகளுக்கு விவசாயிகள் தேங்காய் ஏற்றுமதி செய்கின்றனர். அதேபோல் தேங்காய்க்கான மதிப்புக் கூட்டை தெரிந்துக்கொள்ள விரும்பும் விவசாயிகள் அந்த நாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர்.
குறைந்தபட்ச ஆதார விலையை பொறுத்தவரை மத்திய அரசுதான் நிர்ணயிக்கும். இதில் சர்க்கரை, பருத்தி, எண்ணெய் வித்துக்களுக்கு தான் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட மற்ற தோட்டக்கலை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு கடிதம் வேண்டுமானால் எழுதலாம். இருப்பினும், வெங்காயம், தக்காளி அனைத்து நாட்களிலும் சீரான விலைக்கு கிடைக்க மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. பாரம்பரிய நாட்டு விதைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல நாட்டு விதைகளை மீட்கும் விவசாயிகளுக்கு தோட்டகலை சார்பில் பரிசுகள் வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/agriculture/government/action-to-formalize-successor-farmers-agriculture-secretary-interview-action-to-formalize-successor-farmers-agriculture-secretary-interview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக