உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தனியார் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்வது வழக்கம். மும்பையை சேர்ந்த தனியார் எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் சதீஷ் ரெட்டி என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தான் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என்றும், ஆந்திராவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர் செய்யும்படி கேட்டுக்கொண்டார். போனில் பேசிய நபர் தனது போனில் ஜெகன் மோகன் ரெட்டியின் படத்தை வாட்ஸ்அப் டிபியில் வைத்திருந்தார். போனில் பேசுவது ஆந்திரா முதல்வர் என்று நினைத்து சதீஷ் ரெட்டி ரூ.21 லட்சம் கொடுத்தார். அதற்கு ரசீதும் கொடுக்கப்பட்டது.
ஆனால் கிரிக்கெட் போட்டிகள் குறித்து சதீஷ் ரெட்டி விசாரித்து பார்த்த போது அப்படி ஒரு போட்டியே நடக்கவில்லை என்று தெரிய வந்தது. அதோடு போனில் பேசியது ஆந்திரா முதல்வர் இல்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ் ரெட்டி இது குறித்து மும்பை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது மோசடி செய்த நபரின் பெயர் நாகராஜ் புடுமுறு என்று தெரிய வந்தது. அவர் இதற்கு முன்பு இதே முறையில் 60க்கும் மேற்பட்ட கம்பெனிகளிடம் கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர் செய்யும்படி கேட்டு ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
அவர் மொபைல் போன் வாங்க கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்த போது நாகராஜ் தனது ஒரிஜினல் ஆவணங்களை கொடுத்தே சிம்கார்டு வாங்கி இருந்தார். எம்.பி.ஏ.படித்துள்ள நாகராஜ் இதற்கு முன்பு ஆந்திரா அணிக்காக ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2014-16ம் ஆண்டு வரை விளையாடி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. 2021ம் ஆண்டு ஆந்திரா அமைச்சர் ஒருவரின் பி.ஏ.என்று சொல்லி கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர் கொடுக்கும்படி கேட்டு 9 கம்பெனிகளிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக கைது ஆந்திராவில் செய்யப்பட்டார்.
இதுவரை ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கம்பெனிகளிடம் கிரிக்கெட் விளையாட்டிற்காக பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். அவரை கைது செய்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தன்னிடம் ஆந்திரா சபாநாயகர் ஒருவர் 15 லட்சத்தை மோசடி செய்துவிட்டார் என்றும் இதனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையே பாழாகிப்போனதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அதற்கு பழிவாங்கும் விதமாகவே இது போன்று செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.7.5 லட்சம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/crime/cricketer-arrested-for-defrauding-60-companies-in-mumbai-andhra-by-talking-like-andhra-chief-minister
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக