கடந்த 25-ம் தேதி குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தின் கர்மாடி கிராமத்தில் குடி நீர் வழங்கல் திட்ட அரசு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வை தொடங்கி வைக்க தஹோத் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சின் பாபோர் (Jasvant Sinh Bhabhor), எம்.எல்.ஏ ஷைலேஷ் பாபோர் (Sailesh Bhabhor) ஆகியோர் வந்திருந்தனர். இதற்காக பிரத்யேக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், இதில் கலந்துக் கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்காக மேடையில், இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அரசின் அதிகாரபூர்வ நிகழ்ச்சியில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் இருந்த ஷைலேஷ் சிமன்லால் பட்-ம் (Shailesh Chimanlal Bhatt) மேடையில் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு நிகராக மேடையை பகிர்ந்து கொண்டது அதிர்ச்சியை ஏறபடுத்தியிருக்கிறது.
2002 குஜராத் கலவரத்தின் போது கர்பினியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, 3 வயது குழந்தை உட்பட அவரின் குடும்பத்தார் 7 பேரைக் கொடூரமாக கொலைசெய்த வழக்கில் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, குற்றம் உறுதியானதும், சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகளை நன்நடத்தை காரணம் கூறி, கடந்த ஆண்டு குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது.
குற்றவாளிகள் 11 பேரையும், மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி வெற்றித் திலகமிட்டு அவரைச் சார்ந்தவர்கள் வரவேற்றதும் அப்போது பேசுபொருளானது. இந்த நிலையில், குற்றவாளிகள் 11 பேர் விடுதலையை எதிர்த்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
கடந்த மாதம், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான மனுக்களை விரைவில் விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்படும் என்று உறுதியளித்தது. இந்த நிலையில், குற்றவாளிக்கு மேடையில் இடமளித்து அமரவைத்த பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ-வை சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/on-stage-at-gujarat-government-event-bjp-mp-mla-and-bilkis-banos-rapist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக