`பயம் என்பது தாழ்வு மனப்பான்மையை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் சிந்தனை.’ - அமெரிக்க எழுத்தாளர் எல்பர்ட் ஹப்பார்டு (Elbert Hubbard)
தாழ்வு மனப்பான்மை. இதைப்போல மனிதர்களை முடக்கிப்போடும் கொடுமையான ஒன்று வேறு இருக்க முடியாது. இந்த மனப்பான்மை வளர்ச்சியைத் தடுக்கும்; குறுகிப்போக வைக்கும்; `நம்மால் எதையுமே சாதிக்க முடியாது' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, இருக்கிற திறமையைக்கூட இல்லாமல் ஆக்கிவிடும். ஒருவருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட குடும்பச்சூழல், பள்ளிச்சூழல், அக்கம் பக்கம், உறவுகள், நண்பர்கள் என என்னென்னவோ காரணங்கள் இருக்கலாம். ஒருகட்டத்தில் `இது நமக்குத் தேவையில்லையே...’ என்று அதை உதறிவிட்டு எழுபவர்கள், உயரத்துக்குப் போகிறார்கள், சாதனை படைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் நடிகை பிரீ லார்சன் (Brie Larsan). `சூப்பர் ஹீரோ’ பாத்திரம் என்றாலே ஆண் நடிகர்கள்தான் என்ற பிம்பத்தை உடைத்து, `கேப்டன் மார்வல்’ (Captain Marvel) கதாபாத்திரத்தில் நடித்து, உலக சினிமா ரசிகர்களையெல்லாம் அசரவைத்தவர்.
அமெரிக்கா. கலிஃபோர்னியாவின் சேக்ராமென்டோ (Sacramento) நகரில், 1989-ம் ஆண்டு பிறந்தார் பிரீ லார்சன். அப்பா ஹோமியோபதி மருத்துவர். பிரீ லார்சனுக்கு மிலைன் (Milaine) என்ற சகோதரியும் இருந்தார். இளமைக்காலம் அவருக்குத் தந்தது வேதனையையும் வலிகளையும்தான். அதென்னவோ அவருக்குள் ஓர் எண்ணம். தான் போதுமான அளவுக்கு அழகாயில்லை என்கிற தவறான எண்ணம். அதுதான் பல தோழிகளிடமிருந்து அவரை விலக்கிவைத்திருந்தது. கூடவே குடும்பச்சூழல் அவரைப் பாடாகப்படுத்தியது.
இரவு. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். எங்கோ அழுகைச் சத்தம் கேட்கிற மாதிரி இருக்கும். திடுக்கிட்டு எழுவார். அறை ஓரத்தில், நிஜமாகவே அம்மா ஒரு நாற்காலியில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பார். அதன் பிறகு அந்தக் குழந்தைக்கு எப்படித் தூக்கம் வரும்... அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் சதா சண்டை. சமயத்தில் சத்தமாக இருவரும் சண்டையிட்டுக்கொள்வதைப் பார்க்கும்போது பிரீ லார்சனுக்கு பயமாக இருக்கும். `கடவுளே... இதுக்கு ஒரு முடிவே இல்லையா... இவங்க காலம்பூரா சண்டை போட்டுக்கிட்டுத்தான் இருப்பாங்களா?’ என்று மன உளைச்சலுக்கு ஆளாவார். அப்பாவும் அம்மாவும் எலியும் பூனையுமாக இருக்க, அதை வெளியிலும் சொல்ல முடியாமல் தவித்தார். அதனாலேயே சக தோழிகளைத் தவிர்த்தார். ஆங்கிலத்தில் `Social Anxiety' என்று சொல்லப்படும் ஒருவிதமான பதற்றநிலைக்கு ஆளானார்.
இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில், அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு சினிமா, நாடகத்தின் மீது அப்படியோர் ஈர்ப்பு. அது மெள்ள மெள்ள நடிப்பின் பக்கம் அவரை நகர்த்திக்கொண்டுபோனது. `கான் வித் தி விண்ட்’ (Gone with the Wind) என்ற படம் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். திரும்பத் திரும்ப அந்தப் படத்தைப் பார்த்தார். அந்தப் படத்தின் வீடியோ டேப் தேய்ந்து, கிழிந்து போகும் அளவுக்குப் பார்த்தார். அது, எழுத்தாளர் மார்கரெட் மிட்செல் (Margaret Mitchel) எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அதில் வரும் ஸ்கேர்லட் ஓ’ஹாரா (Scarelett O'Hara) பாத்திரமாகவே மாறி, வசனங்களைச் சொல்லி, தன் அறையில் நடித்துப் பார்ப்பார். பெரும்பாலும் வீட்டிலிருந்தே கல்வி கற்றதால் (Home Schooling) நடித்துப் பார்ப்பது அவருக்குச் சாத்தியமானது. ஆறு வயதிலேயே வீட்டுக்குள் தன் உறவுக்காரச் சிறுவர், சிறுமிகளை வைத்து நாடகம் போடுவதெல்லாம் நடந்தது. அந்தச் சிறு வயதில் சான்ஃபிரான்சிஸ்கோவிலிருக்கும் `American Conservatory Theater’ நாடகக்குழுவிலும் சேர்ந்துவிட்டார்.
பல நேரங்களில் கஷ்டமும் துயரமும்தான் நம்மைப் புடம்போட வைக்கும். நடிப்புதான் எதிர்காலம் என்று முடிவெடுத்த பிறகு, மேடையில் பல பேர் முன்பாக நடிக்க வேண்டும் என்கிற நினைப்பு வந்த பிறகு பிரீ லார்சன் செய்த முதல் காரியம், தன் தாழ்வு மனப்பான்மையைத் தலையைச் சுற்றி வீசியெறிந்தது. ஆனால், அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே விழுந்த இடைவெளி அதிகமாகிக்கொண்டேபோனது. இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். பின்னாளில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டார் பிரீ லார்சன்... ``ஒரு குழந்தையாக அப்பாவையும், அன்றைய சூழலையும் புரிந்துகொள்ள எவ்வளவோ முயன்றேன். ஆனால், அவர்தான் அதற்குத் தயாராக இல்லை. அவர் எனக்கும், என் சகோதரிக்கும் ஒரு தந்தையாக இருக்கக்கூட விரும்பவில்லை...’’
அம்மா, தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஹாலிவுட்டுக்கு அருகேயிருக்கும் சிறு நகரமான பர்பேங்குக்கு இடம்பெயர்ந்தார். அதிலும் ஓர் உள்நோக்கம் இருந்தது. எப்படியாவது பிரீ லார்சன் பெரிய நடிகையாகிவிட மாட்டாளா என்கிற காரணம் அது. ஒரு ஹோட்டலில் வெயிட்ரஸ்ஸாக வேலை பார்த்தார் அம்மா. சொற்ப வருமானம். பல இரவுகளில் நூடுல்ஸ் மட்டுமே மூவருக்குமான உணவு. ஒருநாள் பிரீ லார்சன் தன் அலமாரியைத் திறந்து பார்த்தார். அவர் அணிந்திருந்த உடையைத் தவிர அலமாரியில் இருந்தவை, அவருடைய இரண்டு டீஷர்ட்டுகளும், இரண்டு ஜீன்ஸ் பேன்ட்டுகளும் மட்டுமே. கண்களில் நீர் திரண்டாலும், மனதை திடப்படுத்திக்கொண்டார். `இந்த நிலைமை ஒருநாள் மாறும்; மாற்றிக் காட்டுவேன்’’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்.
அம்மாவின் மடி சுகமாக அமைந்துபோனதுதான் பிரீ லார்சன் வாங்கி வந்த வரம். அம்மா கொடுத்த ஊக்கம், அவருக்குப் பெரும் தெம்பை அளித்தது. நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தினமும் கண்ணாடி முன் நிற்பார். தன் இயலாமையை, கழிவிரக்கத்தைப் போக்கும்விதமான, தனக்குத் தானே நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளை, வாக்கியங்களைச் சொல்வார். `இப்போது நான் வாழும் வாழ்க்கை என் வாழ்க்கை அல்ல. இதிலிருந்து மீண்டெழ வேண்டும்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டார். அதற்காக அவர் ஒரு பெரும் பாய்ச்சலை எடுத்தாக வேண்டும் என்பதும் அவருக்குப் புரிந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குள்ளும் மனமாற்றம் நிகழ ஆரம்பித்தது.
1998. முதல் வேலை. `பார்பி’ பொம்மை விளம்பரப் படத்தில் நடிக்க வாய்ப்பு. அதிலும் நிறைவாக, நம்பிக்கையோடு நடித்துக்கொடுத்தார். பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் சின்னச் சின்ன வேடங்கள். மெள்ள மெள்ள அவருடைய முகம் அமெரிக்க மக்களுக்கு அறிமுகமாகத் தொடங்கியது. மனிதனுக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டால் என்னவாகும் என்பதற்கு வாழும் உதாரணம், பிரீ லார்சன். தொலைக்காட்சி, சினிமா இரண்டிலும் கிடுகிடு வளர்ச்சி. `யார்யா இந்தப் பொண்ணு?’ என இவரைத் திரையில் பார்த்தவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
2010-ம் ஆண்டு, `Scott Pilgrim Vs. the World’ என்ற நகைச்சுவைப் படம். அதுதான் அவரின் முதல் சினிமா பிரவேசம். அதிலிருந்து அவர் மேற்கொண்டதெல்லாம் அசுரப் பாய்ச்சல். 2015-ல் அவர் நடித்து வெளிவந்த `ரூம்’ என்ற படம், அவர் யார் என்று உலக சினிமா ரசிகர்களையே தேடவைத்தது. அந்தப் படத்தில் நடித்ததற்காக அவர் வாங்கிய விருதுகள்... `ஆஸ்கர் விருது’, `கோல்டன் குளோப் விருது’, `ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு அவார்டு’, `பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் அவார்டு.’
இடையில் ஒரே ஒரு வருடம்தான் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார் பிரீ லார்சன். `எங்கேடா இந்தப் பொண்ணு?’ என சினிமா ரசிகர்கள் தேடிக்கொண்டிருக்க, அந்த அறிவுப்பு வெளியானது.
` `கேப்டன் மார்வெல்’ படத்தில் `கரோன் டேன்வர்ஸ்’ என்ற பிரபல கதாபாத்திரத்தில் அதாவது, கேப்டன் மார்வெல் பாத்திரத்தில் பிரீ லார்சன் நடிக்கப்போகிறார்’ என்றது அந்த அறிவிப்பு. `கேப்டன் மார்வெல்’ படத்தில் நடித்தார். உலக அளவில் ரசிகர் பட்டாளம் அவரைக் கொண்டாடித் தீர்த்தது. `ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டர். போஸ்டர்ல பாக்கும்போது அவர் இன்னும் கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்னு தோணுது’ என சில விமர்சனங்கள் எழுந்தபோது, `நீங்க நீங்களா இருங்க. நான், நானா இருக்கேன்’ என்று பதில் சொன்னார் பிரீ லார்சன்.
அந்த அளவுக்கு அவர் வளர்ந்ததற்கும், தன்னம்பிக்கை மிளிர்ந்ததற்கும் என்ன காரணம்... தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி, தூக்கில் போட்டதுதான்!
source https://www.vikatan.com/lifestyle/motivation/motivation-story-of-hollywood-actress-brie-larson
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக