Ad

வியாழன், 30 மார்ச், 2023

நெல்லை: ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம்: நான்காம் நாள் விசாரணையில் நடந்தது என்ன?!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சப்-டிவிஷனில் உதவி காவல் கண்காணிப்பாராகப் பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர் சிங், விசாரணைக்கு வருபவர்களின் பற்களை உடைத்து கொடூரமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

பற்கள் பிடுங்கப்பட்டவர்கள்

இது தொடர்பாக கல்லிடைகுறிச்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், இரு பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன், சூரியா என்பவரும் நேரில் ஆஜராகி தான் கீழே விழுந்ததில் பல் உடைந்ததாகவும், காவல்துறைக்கும் தனது பல் உடைந்ததற்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் கூறினார். அத்துடன் சுபாஷ் என்பவர் தனது பற்களை ஏ.எஸ்.பி பிடுங்கியதாக சப்-கலெக்டரிடம் எழுத்து மூலம் கூறியதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், மூன்றாம் நாளான நேற்று முன்தினம் (29-ம் தேதி) நடந்த விசாரணையின்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆறு பேர் தாங்களாக முன்வந்து சாட்சியம் அளிக்க இருப்பதாகத் தெரிவித்தனர். வழக்கறிஞர் மகாராஜனுடன் வந்திருந்த அவர்கள் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்த நிலையில், அவர்களில் சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷ் என்பவரை மட்டும் விசாரணைக்கு அழைத்த சப்-கலெக்டர், மற்றவர்களிடம் விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

காக்க வைக்கப்பட்ட சாட்சிகள்

விசாரணைக்கு வருபவர்கள், பற்களை இழந்தவர்களை காவல்துறையினர் மிரட்டுவதாகவும் சிலரிடம் பேரம் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்த நிலையில், விசாரணைக்கு வந்தவர்களை சப்-கலெக்டர் திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையானது. அவரது நடவடிக்கை காவல்துறையினருக்கு ஆதரவாக இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,விசாரணையின் நான்காம் நாளான நேற்று (30-ம் தேதி) கல்லிடைக்குறிச்சி காவல்துறை அதிகாரிகள் சிலர் நேரில் ஆஜராகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த வெங்கடேஷ் என்பவர் மட்டும் ஆஜராகி சாட்சியம் அளித்துவிட்டுச் சென்றார். அவர் காவல்துறையினருக்கு ஆதரவாகச் சாட்சியம் அளித்ததாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

சார் ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

காவல்துறையினரின் நெருக்கடிகளை மீறி ஏற்கெனவே சாட்சியம் அளிக்க வந்த ஆறு பேரை சப்-கலெக்டர் சந்திக்காத விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று விசாரணை தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், விசாரணைக்கு வந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தியது தொடர்பாக ஏதாவது தெரிவிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 10-ம் தேதி வரை ஆஜராகி தங்கள் கருத்துகளை மனுவாக எழுதிக் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏ.எஸ்.பி பல்வீர் சிங் நடவடிக்கையால் பற்கள் பிடுங்கப்பட்ட மேலும் பலர் சாட்சியம் அளிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. அவர்களை காவல்துறையினர் தடுத்த போதிலும், அதையும் மீறி சாட்சியம் அளிக்க இருப்பதால் இந்த விவகாரம் சாத்தான்குளம் பிரச்னை போன்று காவல்துறையினருக்கு தலைவலியாக மாறும் ஆபத்து இருப்பதாக அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/crime/this-is-what-happened-in-the-fourth-day-of-enquiry-against-asp-of-ambasamudram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக