Ad

திங்கள், 27 மார்ச், 2023

இந்தப் பூச்சி கடித்தால் தொடர்ச்சியாகத் தூங்கிக் கொண்டே இருப்பார்கள்; காடுகளைக் காக்கும் பூச்சிகள்..!

நாம் விலங்கினங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகும்போது காட்டில் துப்புரவுப் பணி செய்யும் கழுதைப்புலிகளையும் பாறு கழுகுகளையும் சொல்லிவிட்டேன், மூன்றாவதாக, காட்டைக் காப்பாற்றிய ஒரு மிகமுக்கிய உயிரினத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. அவர்தான் இந்த செட்ஸி பூச்சிகள் (TESTSE FLY) என்ற பூச்சியினம். இதன் மற்றொரு பெயர் டிக்டிக் (TIKTIK).

செட்ஸி பூச்சிகள் (TESTSE FLY)

இந்தப் பூச்சி இனத்தைப் பற்றிப் பேசாமல் ஆப்பிரிக்காவின் விலங்குகளின் வாழ்க்கை முழுமை பெறாது. இந்தப் பூச்சியின் பின்னால் ஒரு பிரமாண்ட வரலாறு உங்களுக்குக் காத்திருக்கிறது!

செட்ஸி பூச்சிகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே வாழும் ஒரு பூச்சியினம். இந்தப் பூச்சி இனத்தில் 23 வகைகள் உண்டு. நமது வீட்டில் உள்ள ஈக்களைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இதன் இனப்பெருக்க முறை சற்று வித்தியாசமானது. பூச்சிகள் பெரும்பாலும் தாவரங்களில் முட்டைகளை இட்டு அதில் மூன்று லார்வா ( LARVA) நிலையும் கடந்து, அதன்பின் முழு பூச்சியாக வெளிவரும்.

ஆனால் ,செட்ஸிபூச்சியின் புதிய வாரிசுகள் தாய்ப் பூச்சியின்,  வயிற்றுப் பகுதியில் மூன்று லார்வாக்கள் நிலையும் முடித்து, நன்கு வளர்ச்சியடைந்து, தன்னைச் சுற்றி ஒரு ஓடு அமைத்துக்கொண்ட பின் ஒன்பது நாள்களில் வெளித்தள்ளப்பட்டு, சற்று ஈரப்பதமுள்ள மண்ணில் விதைக்கப்படும். 30 நாள்களில் முழு செட்ஸி பூச்சிகள் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவரும்.

காட்டு மாடுகள் | வன விலங்குகள்

மனிதன் மற்றும் விலங்கினங்களின் ரத்தம்தான் இதன் உணவு. இந்தப் பூச்சிகள் உயிரினங்களைக் கடித்து ரத்தத்தை எடுத்துக் கொள்ளும்போது அந்த உயிரினங்களுக்கு வியாதியைப் பரப்பும் தன்மை உடையது. மேலும் கடித்த இடத்தில் நல்ல வலியும் இருக்கும். அவை மனிதனுக்கு SLEEPING SICKNESS என்ற தூக்கத்தில் மாறுதல் ஏற்படுத்தும் வியாதியை உண்டாக்குகின்றன. பாதிக்கப்பட்ட மனிதர்கள் காய்ச்சல், மூட்டு வலி, மற்றும் தொடர்ச்சியாகத் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். பூச்சிகள் கடித்த இரண்டாவது வாரத்தில் முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பும் நேரிடும்.

17  மற்றும் 18-ம்  நூற்றாண்டுகளில் இங்கு வாழ்ந்த பூர்வகுடி மசாய் மக்கள் இந்தப் பூச்சிகளை எதிர்கொண்டு, காடுகளை விளை நிலங்களாக மாற்றி விவசாயமும், கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வாழ்ந்தனர். விவசாய நிலங்கள் அதிகமாக, அதிகமாக, காட்டுப் பகுதிகள் குறைந்தன, இதனால் இந்தப் பூச்சிகளின் ஆதிக்கம் குறையத் தொடங்கின. இங்கிருந்து ஆரம்பிக்கிறது ஒரு வரலாறு.

1887-ம் ஆண்டு இங்கு கால் பதித்திருந்த காலனி ஆதிக்கம், இத்தாலியிலிருந்து தனது தேவைக்காக அதிகம் பால் தரும் மாடுகளை இறக்குமதி செய்தது.

அந்த இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளில் இருந்து விலங்குகளுக்கு ஏற்படும் பிளேக் நோய் (RINDERPEST) எனும் வைரஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் பரவியது. ஏறக்குறைய கொரனோ மாதிரி!

பிளேக் நோயின் கொடுமையைக் காட்டும் வரலாற்று ஆவணம்

இந்த நோயால் மசாய் மக்கள் வளர்த்து வந்த 90 சதவிகித கால்நடைகள் இறந்தன. ஏனெனில், அங்குள்ள கால்நடைகள் இதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருக்கவில்லை.

இதனால் நிலத்தை உழவு செய்ய, பால் மற்றும் மாமிசம் தர கால்நடைகள் இல்லாமல் போயின. விவசாயம் இல்லாததால் வறுமையும் பஞ்சமும் (FAMINE) ஆப்பிரிக்காவில் கோர தாண்டவம் ஆடியது. இதற்கிடையில் காலனிய மக்கள் மூலம் காலரா, டைபாய்டு, அம்மை நோய்கள் பரவி, மசாய் மக்களை அழிக்கத் தொடங்கின, இந்தப் புதிய நோய்களுக்கு அந்த மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருக்கவில்லை, மேலும் வறுமை வேறு. இறுதியில் 1891-ம் ஆண்டு மசாய் மக்களின் மூன்றில் இரண்டு பங்கினர் செத்து மடிந்தனர்.

விவசாயம் செய்ய ஆளின்றி விவசாய நிலங்கள் தரிசாகக் கிடந்தன. பரந்த நிலப்பரப்பு கொண்ட அந்த நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காடுகளாக மாறத் தொடங்கின. புதிய புல்வெளிகளும் அதிகமாயின. விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது, விலங்குகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க நம்ம செட்ஸி பூச்சிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் ஜெர்மன் மற்றும் பிரிட்டன் நாடுகள் அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டன. ஆனால், அங்கு யாரையும் உள்ளே வரவிடாமல் காடுகளை அழிக்க விடாமல், விவசாயப் பண்ணைகள் அமைக்க விடாமல், கடித்து விரட்டின, செட்ஸி பூச்சிகள்.

காட்டில் பூச்சிகளை உண்ணும் ஆமை

இந்தப் பூச்சிக் கடியால் நோய்கள் அதிகமாவதைக் கண்ட ஜெர்மன் மற்றும் பிரிட்டன் மக்கள் காடுகளுக்குள் செல்ல பயந்தனர். இதனால் காடுகள் காப்பாற்றப்பட்டன. இன்று நாம் பார்க்கும் ஆப்பிரிக்க விலங்கினங்கள் நம் கண்முன்னே நடமாட இந்தப் பூச்சிகளின் பங்கு மகத்தானது, அதனால்தான் இவற்றைக் காடுகளின் பாதுகாவலன் (THE BEST GAME WARDEN IN AFRICA) எனப் போற்றுகிறார்கள்.

இதைப் படிக்கும்போது நமது நாட்டிலும் இவை இருந்திருந்தால் மேற்குத்தொடர்ச்சி மலை, தேயிலைத் தோட்டங்களாக, எஸ்டேட்களாக, மாற்றப்பட்டு இருக்காது எனத் தோன்றும் உங்களுக்கு!

இந்தப் பூச்சிகளின் மற்றொரு பக்கமும் உள்ளது, அது இன்றைய ஆப்பிரிக்கா! இந்தப் பூச்சிகள் 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆப்பிரிக்காவில் பரவி வாழ்கின்றன. காடுகளில் உள்ள விலங்குகள் இந்தப் பூச்சிக் கடியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.

ஆனால், அதிக பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட அயல் மாடுகள், இந்தப் பூச்சிக்கடியால் பாதிக்கப் பட்டு, பால் உற்பத்தி குறைந்து, வளர்ச்சியும் குறைந்து, கர்ப்பக் காலத்தில் வயிற்றில் குட்டிகள் வளர்ச்சி அடையாமல் குறைப்பிரசவம் ஆகின்றது (ANIMAL TRYPANOSOMIASIS), வருடத்துக்கு 30 லட்சம் கால்நடைகள் இதனால் இறக்கின்றன.

விவசாயிகளின் பேரிழப்பால் 37 ஆப்பிரிக்கா நாடுகள் இன்றும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்க இந்தப் பூச்சிகளும் ஒரு காரணம்! மீண்டும் நாம் தான்சானியாவில் நடக்கும் `விலங்குகளின் இந்த பிரமாண்டப் பேரணி'க்கு வருவோம்!

இந்தப் பேரணி ஒரு கடிகாரச் சுற்று, கடிகாரத்தில் (WATCH) கடிகாரமுள் எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் அந்த இடத்துக்கே திரும்பி வரும், அதுபோல நுடுத்துவில் பிறந்து நுடுத்துவில் முடிகிறது, இல்லை தொடர்கிறது! இது நீண்ட நெடிய பயணம் 800 கிலோமீட்டர்.

இந்த நீண்ட நெடிய பயணத்தில் ஒரு வருடத்தில் 2,50,000 காட்டு மாடுகள், 30,000 வரிக்குதிரைகள், எண்ணிலடங்கா மான்களும் இறக்கின்றன. பசி தாகம் மற்றும் வேட்டை விலங்குகளால் வேட்டையாடப்பட்டு இவை இறக்கின்றன. அவை இறந்து இந்த அழகிய செரங்கெட்டியை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், விலங்குகளின் இந்தப் பிரமாண்ட பேரணி இங்கு உள்ள விலங்குகளுக்கு, பறவை களுக்கு, சிறு சிறு உயிரினங்களுக்கு, மீன்களுக்கு, ஏன் புழுக்களுக்குக்கூட உணவளிக்கிறது. மேலும் இங்குள்ள புல்வெளிகளுக்கு, மரம் மற்றும் செடிகளுக்கு உரமிட்டு தன் பாதையை நிறைவு செய்கிறது.

செரங்கெட்டியை வாழ வைப்பதன் மூலம் உலகத்தைக் காற்றால் (OXYGEN) வாழ வைக்கிறது இந்தக் காட்டு மாடுகளின் பேரணி. காட்டு மாடுகளின் இந்தப் பிரமாண்ட பேரணியை தீர்மானம் செய்வது மழைப்பொழிவுதான்! மேலும், தான்சானியா அரசாங்கமும் இந்த விலங்குகளின் பிரமாண்ட பேரணியை நன்கு ஆய்வு செய்து அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மாட்டைக் காப்பாற்றுகிறேன் என நினைத்து மாரா ஆற்றில் ஆயிரம் கோடி செலவில் ஒரு பாலம் கட்டி இருந்தால் மொத்த பேரணியும் குளோஸ்!

நன்றி சொல்வோம்! தான்சானியா அரசுக்கு!

இப்போது சொல்லுங்கள் இது உலகத்தின் எட்டாவது அதிசயம் தானே!

அடுத்த வாரம் ஆசிய சிங்கங்கள் குறித்து அறியப்படாத பல தகவல்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறது ?



source https://www.vikatan.com/environment/living-things/if-bitten-by-this-insect-they-stay-asleep-continuously-insects-that-protect-forests

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக