தி.மு.க சார்பாக நெல்லை மாவட்டத்தை, நெல்லை கிழக்கு, மத்திய மாவட்டம் என இரண்டாகப் பிரித்துள்ளனர். கிழக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அணியை எதிர்த்து சபாநாயகர் அப்பாவு அணியினர் செயல்பட்டு வருகின்றன. இரு தரப்பினரும் தனித்தனியே அணிகளாகச் செயல்பட்ட போதிலும் தி.மு.க கோஷ்டி மோதல் காரணமாக சர்ச்சைகள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், நெல்லை மத்திய மாவட்டத்தைப் பொறுத்த வரையிலும் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் தலைமையில் ஒரு அணியும் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா ஆகியோர் தலைமையிலான மாற்று அணியும் செயல்பட்டு வருகிறது. நெல்லை மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தற்போது மைதீன்கான் மற்றும் மாலைராஜா தலைமையிலான அணியில் உள்ளார். நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்.
பல அணிகளாகப் பிரிந்து கிடக்கும் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க-வில், கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியினரும் மற்ற அணிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைப் பரப்புதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு எதிரணிக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப், தனது பாளையங்கோட்டை தொகுதியில் நடக்கும் பணியை தனக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுக்குமாறு அமைச்சர் எ.வ.வேலுக்கு எழுதிய கடிதத்தை எதிர்த்தரப்பினர் வெளியிட்டனர்.
கடித்தத்தை வெளியிட்ட குழுவினர், ”பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிக்கான 5.58 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்க பரிந்துரை செய்தது ஏன்? நெல்லையில் தி.மு.க-வைச் சேர்ந்த பல ஒப்பந்ததாரர்கள் இருக்கும்போது, அவர்களிடம் கமிஷன் பெற்றால் வெளியில் தெரிந்துவிடும் என்பதால் 15 சதவிகித கமிஷனுக்காக குமரி மாவட்ட ஒப்பந்ததாரரை அமைச்சரிடம் பரிந்துரை செய்திருக்கிறார்” என சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள்.
நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் எழுதிய சிபாரிசு கடிதம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்குப் பதிலடியாக எதிரணியை சேர்ந்த மாநகரச் செயலாளர் சுப்பிரமணியனின் வீடியோ வெளியாக, அதனை வைரலாக பரப்பி வருகின்றனர். தனது வீட்டில் இருக்கும் சுப்பிரமணியன் ஒப்பந்ததாரருடன் பேசுவது போல் உள்ளது அந்த வீடியோ. அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடக்கவுள்ள ஒப்பந்தப் பணிக்கு 18 சதவிகிதம் கமிஷன் வேண்டும் எனக் கேட்பதாக உள்ளது. .
அத்துடன், நெல்லை மத்திய மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மாநகரத்தில் உள்ள பணிகள் தனக்கும் பாளையங்கோட்டை அப்துல் வஹாபுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாக சுப்பிரமணியன் தெரிவிக்கிறார். ஒப்பந்ததாரர் கொடுக்கும் 18 சதவிகித கமிஷன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருக்குச் செல்லும் என்று குறிப்பிடுவதாக உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே மாவட்ட பொறுப்பு அமைச்சரான கண்ணப்பன் பெயரை அவமதித்ததாக அவரின் ஆதரவாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். அதனால் சுப்பிரமணியனைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரங்கள் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கமிஷன் தொடர்பான வீடியோ வைரலாகிவரும் சூழலில், இது குறித்து நெல்லை மாநகர தி.மு.க செயலாளரான சுப்பிரமணியனிடம் கேட்டதற்கு, “அந்த வீடியோ போலியானது. அதில் துளியும் உண்மையில்லை. யாரோ திட்டமிட்டு தவறான வீடியோவை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்” என்று ஆதங்கப்பட்டார்.
கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி மோதல் காரணமாக எதிர்க்கட்சியினர் செய்ய வேண்டியதை தி.மு.க-வினரே அம்பலப்படுத்தி வருவதை கட்சி தொண்டர்களோடு பொதுமக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/rift-between-dmk-executives-in-nellai-makes-cadres-sad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக