3 அடுக்கு ஏ.சி.ரயில் பெட்டிகளில் எகனாமி வகுப்பு மீண்டும் அமல்படுத்தப்படும். எக்கனாமிக் வகுப்புகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் புதன்கிழமையன்று அறிவித்துள்ளது.
2021 செப்டம்பர் மாதம் 3 அடுக்கு ஏ.சி பெட்டிகளில் எகனாமிக் வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான 3 அடுக்கு ஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணத்தை விட, இந்த எக்கனாமி பெட்டிகளின் கட்டணம் 6 முதல் 8 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்று மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டது.
3 அடுக்கு ஏ.சி பெட்டிகளில் இருந்த வசதிகளைவிட 3 அடுக்கு ஏ.சி எக்கனாமி வகுப்புகளில் சிறந்த வசதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 3 அடுக்கு ஏ.சி பெட்டிகளில் 72 படுக்கைகளும், எகானாமி வகுப்பில் 80 படுக்கைகளும் இருக்கிறது. எக்கனாமிக் வகுப்புகளில் பயணிப்பவர்களுக்குப் போர்வை மட்டும் வழங்கப்படாமல் இருந்தது.
எக்கனாமிக் வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்திலேயே ரயில்வே துறை 231 கோடி ரூபாய் ஈட்டியது. 2022 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் சுமார் 15 லட்சம் மக்கள் இந்த ரயில் பெட்டிகளில் பயணித்துள்ளனர் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மட்டுமே சுமார் 177 கோடி ரூபாயை ரயில்வே துறை ஈட்டியது.
அதைத் தொடர்ந்து 3 அடுக்கு ஏ.சி பெட்டிகளுடன் எக்கனாமிக் வகுப்பு இணைக்கப்பட்டது. அப்போது அந்த ரயில்களில் பயணிக்கும் எக்கனாமிக் வகுப்பு பயணிகளுக்கும் போர்வை வழங்கப்பட்டது. இதற்காகப் போர்வை கட்டணமாக 60 முதல் 70 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனால் இரண்டு பிரிவினருக்குமான கட்டணம் சமமாகிப்போனது. 2022 நவம்பர் மாதம் எக்கனாமிக் வகுப்பு சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே துறை புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள உத்தரவில், `3 அடுக்கு ஏ.சி. ரயில் பெட்டிகளில் எக்கனாமி வகுப்பு மீண்டும் அமல்படுத்தப்படும். 2021-ல் எக்கனாமி வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும். அதோடு எக்கனாமி வகுப்பு பயணிகளுக்குப் போர்வை வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளது.
3 அடுக்கு ஏ.சி ரயிலில் பயணிக்க ஏற்கெனவே ஆன்லைன் அல்லது நேரடியாக முன்பதிவு செய்த பயணிகளுக்கான கூடுதல் கட்டணத்தை, அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/editorial/announcements/railway-department-announced-3-tier-ac-economy-class-to-be-reintroduced
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக