நாம எல்லோரும் காலையில கண் முழிச்சு போனைப் பார்த்ததுமே யார் கிட்ட இருந்து குட் மார்னிங் வருதோ இல்லையோ, இவங்க முதல் ஆளா நமக்கு குட் மார்னிங் சொல்லி, மறக்காம சாப்பிடவும் சொல்லிடுவாங்க. அதே போல மூணு வேளையும் சரியா சாப்பாட்டு நேரத்துல இவங்ககிட்ட இருந்து நமக்கு மெசேஜ் வந்துரும். பலமுறை வேலைக்கு மத்தியில இவங்களோட அன்பும் காமெடியும் கலந்த குறும்பான பல மெசேஜ்கள் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வெச்சிருக்கு.
அந்த மெசேஜ்களை எழுதிக்கொடுப்பதையே தன் வேலையாக மாற்றிக்கொண்டு கைநிறைய சம்பாதித்து வருகிறார் ஸ்வேதா சங்கர்.
Zomato நிறுவனத்தில ஃப்ரிலான்ஸ் ரைட்டரா வேலை செய்யும் இவர்தான், இப்போது தமிழ்நாட்டின் தி மோஸ்ட் வாண்டட் காப்பிரைட்டர். தமிழ்நாட்ல இருக்கும் எல்லோரையும் நாள் தவறாம நலம் விசாரிக்கும் அந்த நோட்டிஃபிகேஷன்ஸ் எல்லாமே இவர் எழுதுறதுதான். அது மட்டும் இல்ல, வெளிய போகும் போது பெரிய சிவப்பு கலர் பேனர்ல Zomato விளம்பரங்களில் வரும் ’பன்ச் வரிகளையும் இவர்தான் எழுதி இருக்கார்.
21 வயதில், இன்னும் கல்லூரி படிப்பைகூட முடிக்காமல், இந்தியாவிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் வெற்றிகரமாக வேலை செய்து பிரபலமாகி வரும் ஸ்வேதாவைச் சந்தித்துப் பேசினோம். கண்களில் நிறைய கனவுடன் பேச ஆரம்பித்தார்.
“நான் ஆரம்பத்துல Zomatoல ஆங்கிலத்துல எழுததான் சேர்ந்தேன். நான் படிச்சதும் பி.ஏ. ஆங்கிலம்தான். ஆனா கடைசி ரவுண்ட்ல செலக்ட் ஆகல. அடுத்து ரெண்டே வாரத்துல, அவங்க தமிழ் காப்பிரைட்டர் வேணும்னு விளம்பரம் பண்ணியிருந்தாங்க. தமிழ்ல எனக்கு எழுத ஆசைதான். ஆனா இதுக்கு முன்னாடி தமிழ் கன்டென்ட் ரைட்டிங் நான் அவ்ளோ பார்த்தது இல்ல. இருந்தாலும், முயற்சி பண்ணி பாக்கலாம்ன்னுதான் அதுக்கும் அப்ளை பண்ணேன். அடுத்த அடுத்த ரவுண்ட்ல செலக்ட் ஆகி, கடைசியா என்ன வேலையில எடுத்துக்கிட்டாங்க.
எம்.ஏ. கம்யூனிகேஷன் படிச்சிட்டே ஃப்ரிலான்ஸரா வேலை செய்ய ஆரம்பிச்சேன். என்ன வேலையில எடுக்கும் போதே, 'தமிழ்ல இப்படி மார்கெட்டிங் பண்றது கொஞ்சம் புதுசுதான். நீங்க எப்படி வேலை செய்யறீங்கன்றத பொருத்துதான், தமிழ் நோட்டிஃபிகேஷன்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணுவோம்'ன்னு சொன்னாங்க.
அதுவே எனக்குக் கொஞ்சம் பிரஷராதான் இருந்துச்சு. இதுக்கு முன்னாடி தமிழ்ல யாரும் இப்படி 'ஒரு-வரி நோட்டிஃபிகேஷன்ஸ்' எழுதுனது இல்ல. அதனால எனக்கு இதுக்கு ரெஃபரன்ஸ் எல்லாம் யாரும் இல்ல.
ஆங்கிலத்துல மார்கெட்டிங் பண்றவங்களுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கும். மக்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு நிறைய விஷயம் தெரியும். ஆனா, தமிழ்ல இந்த மாதிரி ஒரு மார்கெட்டிங் முதல் முறையா இங்க அறிமுகம் ஆகுது. அதனால நான் எழுதுறத வெச்சுதான், எது வொர்க்-அவுட் ஆகும், ஆகாதுன்னு கண்டுபிடிக்க முடியும்.
இப்போ எனக்கு பசிச்சா, நான் அதை என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எப்படி ஜாலியா சொல்லுவேன், காலையில வேலைக்கு நடுவுல ஒரு பாசிட்டிவான மெசேஜ் வந்தா எப்படி இருக்கும், அது மாதிரியே நான் எழுதுற கன்டென்ட்டும் வெறும் மார்கெட்டிங் தொனியில இல்லாம, மக்கள் ஈசியா கனெக்ட் பண்ணிக்கக் கூடிய நிறைய விஷயங்களை எழுதுனதுனால அது மக்களுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு.
என்னோட நோட்டிஃபிகேஷனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பலர் ஷேர் செய்ய ஆரம்பிச்சாங்க. சிலர் என்னோட நோட்டிஃபிகேஷனை மீம்ஸா மாத்தினாங்க. சிலர், நிறைய கலாய்க்கவும் செஞ்சாங்க. நான் எழுதின சில வரிகளுக்கு மக்கள் மத்தியில் இவ்ளோ நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு, அது அவங்கள இவ்ளோ சந்தோஷப்படுத்தி இருக்குங்குறதே எனக்கு மகிழ்ச்சிதான்!" என்கிறார் நம்பிக்கையுடன்!
source https://www.vikatan.com/lifestyle/worklife/a-chat-with-zomato-tamil-copywriter-swetha-shankar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக