Ad

திங்கள், 20 மார்ச், 2023

`திருப்பி அனுப்பப்பட்ட நிதி’ - சிறப்பு உட்கூறுத் திட்டத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றும் தமிழக அரசு!

தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கான உட்கூறுத்திட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில், மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதியில் ரூ.5,318 கோடி பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்ட  விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக  கண்டறியப்பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சிறப்பு உட்கூறுத்திட்ட நிதியானது, தமிழ்நாட்டிலுள்ள அந்தந்த சமூக மக்களை கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மற்ற சமூகங்களுக்கு இணையாக உயர்த்த பயன்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி 48 துறைகளின் கீழ் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் பட்டியலின மக்களுக்காக செலவு செய்யப்படுகிறது. ஆனால், இதை முறையாகப் பயன்படுத்தவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதை சரி செய்ய, சட்டமாக இயற்ற  வேண்டும் என்பதை வலியுறுத்தி,  `உலக அமைப்புகள் மாநாடு’ என்னும் மாநாடு  கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில்  நடத்தினர். பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சிறப்புச் சட்டத்தை இயற்றயிருப்பதாக அறிவித்துள்ளது.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

உலக அமைப்புகள் மாநாட்டில் பேசிய விடுதிலை சிறுத்தைகள்  கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ”அரசின் மொத்த  வருமானம் எவ்வளவோ… அதில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் விகிதாசார அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும். அதைப் பொதுவாக சாலை, நீர்த் தொட்டி மற்றும் பள்ளிகள் அமைக்க  பயன்படுத்தியதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால்,  பட்டியலின மக்களுக்கான திட்ட நிதியில் கட்டப்படும்  கட்டடங்கள் பட்டியலின மக்கள் வாழும் இடத்தில்  அமைக்கப்படுகிறதா… இல்லை.

மாறாக ஆதிக்கச் சாதியினர் குடியிருக்கும் பகுதிகளில் கட்டப்படுகின்றன. அங்கு பட்டியலின மக்கள் செல்லும் நிலை உள்ளதா? அப்போது அவற்றால்  உண்மையில் பயன்பெறுவது யார்? இதை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டத்தை முன்னெடுப்போம்” என விமர்சித்தார்.

தொல்.திருமாவளவன்

மாநாட்டை ஒருங்கிணைத்த இளைஞர்களுக்கான சமூக  விழிப்புணர்வு மையத்தின் மாநில அமைப்பாளர் இரமேஷ்நாதன், ”பட்டியலின மக்களின் தனிநபர்  மற்றும் பொருளாதார  வளர்ச்சியை உறுதி செய்ய இந்தத் திட்டங்கள் வழிவகுக்கும்.  ஆனால் இது முறையாக செயல்படாததால் 2012-ம் ஆண்டு மத்திய சமூகநீதி அமைச்சகம் கமிட்டி அமைத்தது. இது வெறும் திட்டமாக மட்டும் இருந்தால் போதாது, சட்டமாக  இயற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்தது கமிட்டி. ஆனால்,  அரசியல் காரணங்களுக்காக சட்ட மசோதா நிறைவேறவில்லை. இருப்பினும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள்  இதை சட்டமாக்கியது. அங்கு ‘நோடல் ஏஜென்ஸி’ அமைக்கப்பட்டு நிதி சரியாக திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா... என்பது கண்காணிக்கப்பட்டு முறையாகப் பயன்படுத்தாத  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவேளை,  அந்த ஆண்டுக்கான நிதி பயன்படுத்தாத நிலையில், அது அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்தப்படும். அது திருப்பி அனுப்பப்படாது. இதை தமிழகத்திலும் சட்டமாகக் கொண்டுவர வேண்டும்.  அப்போது அனைத்து பட்டியலின மக்களுக்கும் திட்டம்  சென்றடையும்” எனப் பேசியிருந்தார்.

இரமேஷ்நாதன்

இது குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தரப்பு, ” தனிச்சட்டம்  கொண்டுவருவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது.  ஆனால் இதுபோல மற்ற மாநிலங்களில்  இயற்றப்பட்டிருக்கும்  சட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்,” என்றனர்.

அதனடிப்படையில் நேற்று நிதி பட்ஜெட்டில், பட்டியலின மற்றும் பழங்குடி  துணைத்திட்டத்தை முறையாகக் கொண்டு செல்ல சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக சிறப்புச் சட்டம் உருவாக்கப்படும். உரிய ஆலோசனைக்குப் பின் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படும்” என அறிவித்தார் நிதி அமைச்சர்.

இதற்கு சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். பட்டியலின திட்ட நிதி பயன்படுத்தாமல் திருப்பியனுப்பியது திமுகவின் மீது பெரும்  விமர்சனங்களை உண்டாக்கியது. இந்த நிலையில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு பலரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/policy/tamilnadu-government-announced-to-implement-law-on-regulating-scst-schemes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக