ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஒரு வருடத்தைக் கடந்த நிலையில், ரஷ்ய ராணுவம்மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்துவருகின்றன. உக்ரைனில் கணவனுக்கு முன்பு துப்பாக்கி முனையில் மனைவியை ரஷ்ய ராணுவ வீரர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து உக்ரேனிய வழக்கறிஞர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியதும், கீவ் நகரைக் கைப்பற்ற முயன்றது ரஷ்யா. அதன் முதல் முயற்சி தோல்வியுற்றபோது, ரஷ்யப் படையினர் புரோவரிக்குள் நுழைந்தனர். அங்கு மக்களை பயமுறுத்துவதற்காக வேண்டுமென்றே கொள்ளையடிப்பது, பாலியல் வன்முறை செய்வது போன்ற செயல்களைச் செய்துவந்திருக்கின்றனர். இந்தச் சம்பவங்கள் 2022 மார்ச் மாதம் தலைநகர் ரஷ்ய வீரர்கள் நிகழ்த்திய பாலியல் குற்றங்களாகும்.
அவர்கள் பெண்களைத் தனிமைப்படுத்தி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். மார்ச் 13 அன்று நடந்த ஒரு கொடூர நிகழ்வை உதாரணமாகக் குறிப்பிடலாம். ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் ஒரு வீட்டுக்குள் நுழைந்து, கணவனை உலோகப் பொருளால் தாக்கி, பின்னர் அவரின் மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதை மண்டியிட்டுப் பார்க்கும்படி கணவனையும் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். நான்கு வயது சிறுமியையும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இரண்டு ராணுவ வீரர்களும் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தனர், அங்கிருந்த வயதான தம்பதியை அடித்து, 41 வயது கர்ப்பிணிப் பெண், 17 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரும் உயிர் பிழைத்திருக்கின்றனர். மேலும், உளவியல் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.
அவர்கள் அளித்த ஆதாரங்கள், வாக்குமூலங்கள், சாட்சிகளின் அடிப்படையில், ரஷ்யா ராணுவ வீரர்களின் 71,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்ற அறிக்கைகளை விசாரித்துவருகிறோம். இதுவரை 26 ரஷ்ய வீரர்களுக்கு போர்க் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறோம். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அரசு, ராணுவ வீரர்களின் அட்டூழியங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்துவருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/russian-snipers-harassed-4-year-old-child-gang-raped-mother-says-ukraine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக