Ad

செவ்வாய், 28 மார்ச், 2023

`உத்தவ் அரசை கவிழ்க்க பட்னாவிஸ், ஷிண்டேயை 150 முறை சந்தித்து பேசினேன்' - மகாராஷ்டிரா அமைச்சர்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. அதோடு சிவசேனாவும் இரண்டாக உடைந்தது. சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேயிடமிருந்து விலகி அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயிடம் சென்றுவிட்டனர். இப்போது சிவசேனாவின் சின்னம் மற்றும் பெயரும் ஏக்நாத் ஷிண்டேயிடம் வந்துவிட்டது. உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க கொரோனா காலத்தில் தான் அதிக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போதைய அமைச்சர் தானாஜி சாவந்த் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிரா சுகாதாராத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த், தாராசிவ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க எவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``உத்தவ் தாக்கரே 2019ம் ஆண்டு எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தேன். எனவே மாதோஸ்ரீக்கு சென்று உத்தவ் தாக்கரேயிடம் என்னால் பின்னோக்கி செல்ல முடியாது என்று கூறினேன்.

2020ம் ஆண்டு மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே சிவசேனாவில் நான் முதல் ஆளாக கட்சி தலைமைக்கு எதிராக மாறினேன். தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின் பேரில் தாராசிவ் ஜில்லா பரிஷத் தேர்தலில் சிவசேனா-பா.ஜ.க. இடையே கூட்டணி அமைக்கப்பட்டது.

தேவேந்திர பட்னாவிஸ்

2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. ஆனால் மக்கள் தீர்ப்பை நிராகரித்து சரத்பவாருடன் சேர்ந்து கொண்டு உத்தவ் தாக்கரே புதிய அரசை அமைத்தார். எனவே உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க 2020-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை கடுமையாக வேலை செய்தேன். இரண்டு ஆண்டில் மராத்வாடா, விதர்பா, மேற்கு மகாராஷ்டிராவிற்கு சென்று எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அவர்களின் மனதை மாற்றினேன். அதோடு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேயை இரண்டு ஆண்டில் 150 முறையாவது சந்தித்து பேசியிருப்பேன். பட்னாவிஸ் உத்தரவை ஏற்றுத்தான் நான் முதல் முறையாக சிவசேனாவிற்கு எதிராக மாறினேன். இதுதான் உண்மை” என்று தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே உத்தவ் தாக்கரேயை பழிவாங்கவே சிவசேனாவை இரண்டாக உடைத்ததாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/met-fadnavis-shinde-150-times-in-two-years-to-topple-uddhav-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக