Ad

வெள்ளி, 17 மார்ச், 2023

``அண்ணன் ஸ்டாலின் சங்கடப்படக் கூடாது; நடந்தது நடந்ததாக இருக்கட்டும்!' - மனம் திறந்த திருச்சி சிவா

மார்ச் 15-ம் தேதி, திருச்சி எஸ்.பி.காலனியில் நவீன இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கினை திறந்து வைக்க வருகை தந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு, தி.மு.க., எம்.பி திருச்சி சிவாவின் ஆதராவளர்கள் கருப்புக் கொடி காட்டியதும், அதையடுத்து நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டை சூறையாடியதும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து,  காவல் நிலையத்தில் வைத்தே இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் மேலும் பரபரப்பைக் கூட்டியது.

அதையடுத்து அரசுப் பயணமாக பஹ்ரைன் நாட்டிற்குச் சென்றிருந்த திருச்சி சிவா, திருச்சிக்கு வந்ததும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். எனக்கு என்னைவிட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால், பலவற்றை நான் பெரிது படுத்தியதில்லை. யாரிடமும் போய் புகார் சொன்னதில்லை. தனிமனிதனை விட இயக்கம் பெரியது என்கிற தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்தவன், இருப்பவன் நான். இப்போது நடந்திருக்கின்ற நிகழ்ச்சி மிகுந்த மன வேதனையைத் தந்திருக்கின்றது.நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. அதனால் நான் இப்போது எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை" என்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை திருச்சி சிவாவினுடைய இல்லத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். தாக்குதல் சம்பவம் குறித்து இருவரும் பேசினர். அமைச்சர் நேருவுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய திருச்சி சிவா, ``நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தலைவருடைய குரல் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கழகத்தலைவர் தமிழக முதல்வர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் இந்த நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கின்ற சூழலில், அவருடைய மனம் சங்கப்படுகின்ற அளவிற்கு எந்தக் காரியங்களும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோம்.

திருச்சி சிவா - கே.என்.நேரு

அமைச்சர் நேரு என்னிடம் வந்து பேசினார். நாங்கள் இருவரும் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். அவருக்கு இதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவர் சொன்னார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். எங்களைப் பொறுத்தவரை இயக்கத்தினுடைய வளர்ச்சி முக்கியம். அந்தவகையில், அவர் ஆற்றுகின்ற தொண்டினை என்னால் ஆற்ற முடியாது. நான் செய்கின்ற பணியை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆக, அப்படி பலதரப்பட்டவர்கள் இணைந்து பணியாற்றுகின்ற இந்தக் கழகத்தில், கழக வளர்ச்சிக்காகவே எங்களுடைய வருங்கால நாள்களுடைய செயல்பாடுகள் இருக்கும். எனவே நடந்தது நடந்ததாக இருக்கட்டும்" என்று முடித்துக்கொண்டார்



source https://www.vikatan.com/government-and-politics/politics/trichy-siva-speak-about-his-house-attack-issue-after-meet-with-kn-nehru

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக