Ad

ஞாயிறு, 26 மார்ச், 2023

மதுரை: ``அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுதான்... மோதல் இல்லை!" - கிரண் ரிஜிஜு

மதுரையில் கூடுதல் நீதிமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய நீதிமன்றத் திறப்பு விழா நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது. நீதித்துறையும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான் நீதித்துறை கட்டமைப்புகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். நீதித்துறை மேம்பாட்டுக்கு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்குகிறது. ஆனால், சில மாநிலங்கள் அதை முறையாகச் செலவு செய்வதில்லை. ஒதுக்கிய நிதியை செலவழித்தால்தான் எதிர்காலத்தில் கூடுதல் நிதியை ஒதுக்க முடியும்.

மத்திய சட்ட அமைச்சருடன் முதலமைச்சர்

நீதித்துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்குகிறது. உச்ச நீதிமன்றத்தில் இ-கோர்ட் திட்டத்துக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இந்தத் திட்டத்தால் எதிர்காலத்தில் இந்திய நீதிமன்றங்கள் காகிதம் இல்லா நீதிமன்றங்களாக மாறும்.

இந்தியாவில் 4.9 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பல வழக்குகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை முடியாமல் இருக்கின்றன. நிலுவை வழக்குகள் பெரிய பிரச்னையாக இருக்கின்றன. அதில் கவனம் செலுத்த வேண்டும்.

மதுரை விழா

வெளிநாட்டில் நீதிபதிகள் ஒரு நாளைக்கு 4 முதல் 5 வழக்குகளை மட்டுமே விசாரிப்பார்கள். நம் நாட்டில் 50 முதல் 60 வழக்குகள் வரை விசாரிக்கிறார்கள். நிலுவை வழக்குகளை வைத்து சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்கின்றனர். இது உண்மையல்ல. நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டாலும் அதைவிட இரண்டு மடங்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நீதித்துறையை பலப்படுத்தவும், சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

தமிழக அரசு மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கான நீதி அவர்கள் மொழியில் இருந்தால் மகிழ்ச்சி அடைவார்கள். நீதிமன்றத்தில் வழக்காடு மொழி முக்கியமானது. சிறப்பு வாய்ந்த மொழி தமிழ். தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் தமிழில் இயங்குகின்றன. மொழிபெயர்ப்பு, தொழில்நுட்ப வசதியால் வரும்காலத்தில் உச்ச நீதிமன்றத்திலும் தமிழில் வாதாட வாய்ப்புகள் உருவாகும்.

விழாவில்

பொதுமக்கள் நீதிமன்றத்தை அச்சமில்லாமல் அணுக வேண்டும். காவல்துறையும் பொதுமக்களிடம் மென்மையாக அணுக வேண்டும். கோவிட் காலத்தில் தமிழக நீதிமன்றங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. பாலியல் குற்ற வழக்குகளில் பெண்கள், குழந்தைகள் நீண்ட நாள்கள் நீதிக்காகக் காத்திருக்கக் கூடாது. இதுபோன்ற வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டும். நீதிமன்ற மாண்பை காக்க நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தியாவில் நீதித்துறையைப் பலப்படுத்த மட்டுமல்ல சுதந்திரமாகச் செயல்படவும் மத்திய அரசு உதவும். அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அது மோதல் இல்லை. நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். கருத்து வேறுபாடு இருந்தாலும் நாட்டு நலன் என்று வரும்போது ஒற்றுமையாகிவிடுவோம். இதை மோதல் என்று பார்க்கக் கூடாது. நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட மத்திய அரசு எப்போதும் ஆதரிக்கும்.

நீதிமன்றக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

மதுரையின் வரலாற்றுப் பெருமையைக் காண ஒருநாள் போதாது. ஒரு மாதம் வேண்டும். மீண்டும் வருவேன். எனக்கு தென்னிந்திய உணவுகள் பிடிக்கும். அதிலும் தோசை மிகவும் பிடிக்கும். 12 வருடங்களுக்குப் பிறகு இப்போது சாப்பிட்டேன். என்றும் மறக்கமுடியாது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/central-law-minister-kiren-rijiju-speech-in-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக