Ad

புதன், 22 மார்ச், 2023

1349/2 எனும் நான் - 1: மாஞ்சோலை உடன்படிக்கைகளும்; பிரிய முடியாத துக்கத்தில் அதன் தொழிலாளர்களும்!

மலைகள் சுற்றுலாத் தலமாக, எஸ்டேட்களாக, இயற்கையின் எழிலாக என வெவ்வேறு விதமாக நமக்கு அறிமுகமாகியிருக்கின்றன. இதுவரை நாம் அறிந்திடாத, மலையின் மனிதர்களை, அவர்கள் வாழ்வை, எஸ்டேட்டுகளுக்கும் அவர்களுக்குமான உறவை மலையைப் போலவே சலனமற்று நின்று காட்டும் தொடர்தான் 1349/2 எனும் நான்; மாஞ்சோலை - மலையும் மனிதர்களும்! வாருங்கள் பெரிதும் வெளிச்சப்படாத உலகிற்குள் பயணிப்போம்.

அகஸ்தியா- எங்கள் மகனின் பெயர்.  அகஸ்திய மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டமான நாலுமுக்கு எஸ்டேட்டில் பிறந்தேன். நினைவு தெரிந்த நாள் முதலாய் கண்டுகளித்த, வாழ்வில் பசுமையான அனுபவங்களைக் கொடுத்த, நான் பிறந்த மலையின் பெயரையே எங்கள் மகனுக்குச் சூட்டினோம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி எஸ்டேட்டுகள். 

நாலுமுக்கு எஸ்டேட்டில் பிறந்த என் சகோதரர், மதுரையில் உள்ள தனது வீட்டுக்கு, `மாஞ்சோலை இல்லம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். மாஞ்சோலையில் பிறந்து நெல்லையில் வசிக்கும் உறவினர் ஒருவர் தனது ஆட்டோவுக்கு, ’மாஞ்சோலை கிங்’ எனவும், மற்றொருவர் தனது இருசக்கர வாகனத்துக்கு, ’மாஞ்சோலை மலையரசி’ என்றும், வேறொருவர் ’ஊத்து ஜெட் ரைடர்’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர். தற்போது நகரப்பகுதியில் வசிப்பதால், தங்களின் பெயருக்கு முன் ’மாஞ்சோலை’ எனும் அடைமொழியைச் சேர்த்து, தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர் அநேகருண்டு.

குஞ்சுகிருஷ்ணன் ஆசாரி

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்டேட்  தொழிலாளி குஞ்சுகிருஷ்ணன் ஆசாரி என்பவர் தனது குடும்பத்துடன் கேரளாவுக்குக் குடிபெயர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது 88 வது வயதில் எஸ்டேட்டுக்குத் திரும்பி வந்த அவர், இரண்டு நாள்கள் வாழ்ந்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த விஷத்தைக் குடித்து எஸ்டேட்டிலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்டார். எஸ்டேட்டைக் குறித்த, `எஸ்டேட் வாசி'களின் இதுபோன்ற உணர்ச்சி வெளிப்பாடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பல ஊர்களைச் சேர்ந்தவர்களும், இதுபோல ஊர்ப்பெயரை தங்களின் பெயருக்கு முன்பாக வைத்துக்கொள்வது இயல்பான ஒன்றுதான். ஆனால் அத்தகைய நகர்ப்புற/கிராமப்புற மக்களிடமிருந்து எஸ்டேட் வாசிகள், எங்கு/எப்படி தனித்து நிற்கிறார்கள் என்பது குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பரவலாக அறியப்பட்ட பொதுவான வாழ்க்கை முறையிலிருந்து, முற்றிலும் வேறுபட்டது  மாஞ்சோலைப் பகுதி மக்களின் வாழ்நிலை.

மாஞ்சோலை

நெருக்கம் நெருக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் லயன் வீடுகள், ஒரே பணித்தளம், தண்ணீர் பிடிக்க, காட்டுக்குள் விறகு பொறுக்க, துணி துவைக்க/ குளிக்க ஆற்றுக்குப் போகும்போது, கடைகளில் பொருள்கள் வாங்க, பேருந்தில் பயணிக்கும் போது, மருத்துவமனையில், வழிபாட்டுத் தலங்களில் என ஏதாவதொரு இடத்தில், தினமும் பலரையும் சந்தித்தே ஆக வேண்டிய சூழல் அமையப்பெற்றவர்கள் எஸ்டேட் வாசிகள். அதனால் பெரும்பாலும் இங்கு எல்லோருக்கும் எல்லோரைப்பற்றியும் எல்லாமும்  தெரிந்திருக்கும்.

தமிழ், மலையாளம், அஸ்ஸாமி என மூன்று மொழிகளைப் பேசுவோர் வாழும் இடம் மாஞ்சோலைப் பகுதி. இதனால் மூன்று பகுதிகளின் அனுபவமும் கலந்த புதுக் கலாசாரம் இவர்களது. ஒரே விடுதியில் நீண்ட காலம் ஒன்றாகத் தங்கியிருப்பதைப்போல, நான்கு புறமும் அடர்ந்த வனத்தால் சூழப்பட்ட ஒரு பகுதியில் நெருக்கமாய் வாழ்ந்த வாழ்க்கை முறைதான் எஸ்டேட் வாசிகளின் தனித்த அனுபவம்.  

மாஞ்சோலை

பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களால் கோடைக்கால ஓய்விற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஊட்டி, குன்னூர், வால்பாறை, கொடைக்கானல் போன்ற, தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படுகிற சுற்றுலாத்தலங்களான மலைப்பகுதிகளைப் போல அல்ல மாஞ்சோலையும் அதன் அருகே அமைந்துள்ள மலைகளும் – அதே போன்ற அல்லது அதனினும் வசீகரிக்கும் நிலப்பரப்பினையும், இயற்கை வனப்பையும் கொண்டிருப்பினும்,  மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் பணப்பயிர்களை உற்பத்தி செய்யவேண்டி மட்டும், தி பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேசன் (பி) லிமிடெட் (பி.பி.டி.சி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மாஞ்சோலை இன்றளவும் அதிகம் பிரசித்தி பெறாத பகுதியாகும். 

12.02.1929 அன்று, சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான வனத்தில், 8373.57 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியது மும்பையைச் சேர்ந்த பி.பி.டி.சி நிறுவனம். பின்னர் அந்த வனப்பகுதியில்  அமைந்துள்ள காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து, அங்கு தேயிலை, காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்றவற்றைப் பயிரிட ஆரம்பித்தது. 

மாஞ்சோலை

அந்தப் பணிகளுக்காகத் திருநெல்வேலி மற்றும் தற்போதைய தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ’கங்காணிகள்’ எனப்படும் தரகர்கள் மூலமாக கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். அப்படி அழைத்து வரப்பட்டவர்களின் வாரிசுகள் பலர் நான்கு தலைமுறைகளாக அங்கேயே வசித்து, அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது வரையிலும் கூலி வேலை செய்து வருகிறார்கள். 

மாஞ்சோலை

இந்நிலையில், மேற்கண்ட எஸ்டேட் பகுதிகளை ’காப்புக்காடாக’ (Reserve Forest) அறிவித்த அறிவிக்கையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட சில பரிகாரங்களுக்காக பி.பி.டி.சி நிர்வாகத்தால் வேறு வேறு காலகட்டங்களில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட அந்த வழக்குகளின் தீர்ப்பினை 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  

இதனைத் தொடர்ந்து, கடந்த 28.02.2018 அன்று, எஸ்டேட் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட வனம் ’காப்புக்காடாக’ அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு வனச் சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட வரியின் அடிப்படையில் நிலுவையிலுள்ள குத்தகைத் தொகை மற்றும் மீதமுள்ள குத்தகை காலத்திற்கான வரிப்பணத்தை முன்கூட்டியே பி.பி.டி.சி நிர்வாகம் செலுத்தத் தவறும்பட்சத்தில், மீதமுள்ள ஆண்டுகள் எஸ்டேட் பகுதியைப் பயன்படுத்தவும், எஸ்டேட் தொடர்ந்து நீடிக்கவும் தடை விதிக்கப்படும் என்று வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவிக்கத் தொடங்கினார்கள். 

மொத்தமுள்ள 74,000 ஏக்கர் வனப்பகுதியில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் மட்டுமே தேயிலைத்தோட்டம் உள்ளது. இருப்பினும் தேயிலைத்தோட்டம் இருப்பது சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து என சில ஆண்டுகளாகத் தொடர்ந்து கூறிவரும் வனத்துறை, ஏற்கெனவே தரைப்பகுதியில் அமைக்கப்படவிருந்த ’பல்லுயிர்ப் பூங்கா’வின் இடத்தை மாற்றி, எஸ்டேட்டின் மையப்பகுதியில் இருக்கும் ’காக்காச்சி எஸ்டேட்’ பகுதியில் அமைத்திட கடந்த 23.02.2023 அன்று அறிவிக்கை வெளியிட்டது. 

மாஞ்சோலை
வனத்துறையினரின் தொடர் அழுத்தம், பி.பி.டி.சி நிறுவனத்தின் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட சில காரணங்களால், குத்தகைக் காலம் 2028 வரை இருந்தாலும், மீதமிருக்கும் 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்காமல், இந்த ஆண்டின் இறுதிக்குள் பி.பி.டி.சி நிர்வாகம் இந்தப் பகுதி மீதான தனது கட்டுப்பாட்டினை விலக்கிக்கொள்ளும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அதனால் எஸ்டேட் இன்று அடைக்கப்படுமோ, நாளை அடைக்கப்படுமோ, எப்போது என்ன ஆகுமோ என்ற பதைபதைப்புடனேயே அனுதினமும் வாழ்ந்துவருகிறார்கள் இங்குள்ள தொழிலாளர்கள்.

தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் இயல்பிலேயே காடு மற்றும் காடு சார்ந்த சூழலையும் நேசிப்பவர்களாக இருப்பதால், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட எந்தப் பொருள்களையும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்தாமல் எஸ்டேட்டைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். தென்னிந்தியாவில் அதிக மழைபொழியும் இடமாக சமீப காலமாக மாஞ்சோலைப் பகுதிகள் தொடந்து இருந்துவருவதே அதற்குச் சான்றாக இருக்கிறது.  

நாலுமுக்கு எஸ்டேட்

இங்கு தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து வசிப்பதால், மலைக்குத் தொடர்பில்லாமல் கெட்ட எண்ணத்துடன் அந்நியர்கள் நுழைவதற்கு பெரும் தடையாகவும், வனத்திருட்டு தடுக்கப்படுவதுடன், இங்கிருக்கும் வனவிலங்குகளும், நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய மரங்களும் மிகுந்த பாதுகாப்பில் உள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்புகள் மட்டுமே பிரதானப்படுத்தப்படும் சூழலில், எஸ்டேட்டில் கூலி வேலை பார்த்துவரும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளது எதிர்காலம் மற்றும் மறுவாழ்வு குறித்து எவரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. 

சுமார் 5,000 நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் பணிபுரிந்த எஸ்டேட் பகுதியில், தற்போது சுமார் 2,000 தோட்டத் தொழிலாளர்களே பணிபுரிந்துவருகிறார்கள். சுமார் 700 குடும்ப அட்டைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. தேயிலைத்தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 50-க்கும் அதிகமான குழந்தைகள் படித்துவருகின்றனர்.

அடிக்கடி சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் மக்கள் குடியிருப்புக்குள் வந்து போவதுடன், மக்களுக்கும் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வால்பாறை, மேகமலை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் இன்றளவும் இயங்கிவரும் நிலையில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியும் தொடர்ந்திட வழிவகை செய்யப்பட வேண்டும்.  

இங்குள்ள பெரும்பாலான கூலித்தொழிலாளர்கள், எஸ்டேட்டிலேயே பிறந்து அங்கேயே வாழ்ந்துவருவதால், அவர்களுக்கு எஸ்டேட் பகுதியே பூர்வீக வசிப்பிடமாக மாறிவிட்டது. அதனால் அங்கு வசிப்பவர்களில் பலருக்கும் தங்களின் சொந்த ஊரோடு எவ்விதத் தொடர்பும், பிடிப்பும் இல்லாமல், எஸ்டேட்டையே சொந்த ஊராக எண்ணி வாழ்ந்து வருகிறார்கள். ஆட்சியாளர்களின் பார்வை எளிதில் விழாத அளவுக்கு, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. 

மாஞ்சோலை

மழை, குளிர், பனி என எதையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைக்கத் தயாராக இருப்பவர்கள் எஸ்டேட் தொழிலாளர்கள். ஆனால் அவர்களில் எவருக்கும் தேயிலைத் தோட்டம் தவிர வேறு எங்கும், எந்த வேலையும் பார்க்கத் தெரியாது என்பததால் கிராமப்புற/நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்தல் மற்றும் கொளுத்தும் வெயிலில் வேலை பார்ப்பதென்பது அவர்களுக்கு எளிதான காரியமல்ல.  இங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டால் குடியிருப்புகள் சிதைந்துபோகும், எஸ்டேட்டுகள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு அரசு ஆவணங்களில் இருந்தும், அதனைத் தொடர்ந்து வரைபடத்திலிருந்தும், அதிவிரைவில் காணாமல்போகும். 

தமிழ்நாடு அரசு மட்டுமே அந்தத் தொழிலாளர்களின் வாழ்வில் நம்பிக்கையைக் கொண்டுவர முடியும். கடந்த 1967-ம் ஆண்டில், இலங்கையிலிருந்து  குடிபெயர்ந்த தமிழர்களுக்காக, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் வால்பாறைப் பகுதிகளில் தமிழ்நாடு தேயிலைத்தோட்டக் கழகம் (TANTEA) உருவாக்கி, அந்த மக்களின் வாழ்வாதாரத்தைத் தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்தியது. 

மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட்டுகளை, பி.பி.டி.சி நிர்வாகத்திடமிருந்து எடுத்தபிறகு, அவைகளை தமிழ்நாடு அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, இப்போது உள்ளதுபோலவே அங்கு தேயிலைத் தோட்டங்களைத் தொடர வைத்து, அங்கு பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவது அரசுக்கு இயலாத காரியமல்ல. உலகின் பெரும்பகுதியில் அன்றாடம் தேநீர் அருந்துவோர் இருக்கையில், அரசுக்குப் பெரும் வருவாய் ஈட்டித்தரும் திட்டமாகவும் இது இருக்கும். எஸ்டேட் பகுதிகளில் பல்வேறு கட்டுமானங்கள் அன்றாடப் பயன்பாட்டில் இருப்பதால் தனது சொந்த மக்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்வது அரசிற்கு எளிதான செயலே. 

மாஞ்சோலை

தவறும் பட்சத்தில், இந்தப்பகுதியைத் தங்கள் இருப்பின் ஓர் அம்சமாகவும் அடையாளமாகவும் கருதும் எஸ்டேட் வாசிகள் மற்றும் இங்கு முன்னர் வாழ்ந்து தற்போது பிற இடங்களுக்குப் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், தாங்கள் பிறந்து வளர்ந்த, தாங்கள் படித்த பள்ளி அமைந்துள்ள, தங்களது மூதாதையர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள நிலப்பரப்புக்கு, விரும்பினாலும் இனிச் சென்று வர இயலாத துர்பாக்கிய நிலை ஏற்படும். வெளியூர்களில் வாழும் எஸ்டேட் தொழிலாளர்களின் குடும்பங்கள், எஸ்டேட்டில் நடக்கும் திருமணம், சடங்கு, இறப்பு, கோயில் திருவிழாக்கள் போன்ற காரணங்களுக்காக தற்போது தனியார் வாகனங்களில் செல்வதற்கு, வனத்துறையிடம் முன் அனுமதி பெற்றும், பெரும் தொகையினைக் கட்டணமாகச் செலுத்திய பிறகுமே செல்ல முடிகிறது. இனி அதற்கும் சாத்தியமில்லாத சூழல் ஏற்படும். 

எஸ்டேட் உருவாகி சுமார் 100 ஆண்டுகள் நெருங்கிய பின்னரும், எஸ்டேட்டுக்கு எப்படி வந்தோம், நமது எஸ்டேட் உரிமையாளர் யார், நமது எஸ்டேட் உருவான காரணம் என்ன, நாம் தயாரிக்கும் தேயிலை எந்த நாடுகளுக்குப் போகிறது என்பது குறித்து எதுவும் தெரியாத, தேயிலையைத் தவிர வேறெதுவும் அறியாத வெள்ளந்தி மக்கள் வாழும் பகுதி அது.

தங்களின் வாழ்விடம் முன்தேதியிட்டு அழிக்கப்படப்போவதை இவர்கள் என்றல்ல, வேறு எவர் ஒருவரால் இயல்பாகக் கடந்து செல்லமுடியும்?

புகைப்படங்கள் - தீபன், `மாஞ்சோலை' செல்வகுமார்



source https://www.vikatan.com/features/human-stories/maanjolai-estate-and-its-people-new-series-part-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக